யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்-

yaal palkalai aarpattam (1) yaal palkalai aarpattam (2)யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அமைதிப் போராட்டம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகளை எச்சரிக்கை செய்து பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘நினைத்தவுடன் பல்கலைக்கழகத்தை மூடுவது தான் மாணவர் மையக் கல்வியா?’, ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மகத்தான ஆயுதம் பேனா முனையே தவிர துவக்கு முனையல்ல?’, ‘பல்கலைக்கழகம் என்பது கல்விக்கழகமா அல்லது கொலைக்களமா?’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வலிமேற்கு பிரதேசசபை தவிசாளரின் செஞ்சிலுவை தின செய்தி-

ulaga sensiluvai thinamஉலக செஞ்சிலுவை தின நிகழ்வு சர்வதேச ரீதியிலும் பலராலும் கொண்டாடபப்படும் நாளாக காணப்படுகின்றது. இத் தினமானது செஞ்சிலுவை சங்கத்தினை ஸ்தாபித்த தாபகரின் பிறந்த தினத்தினை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படுகின்றது. போர் விபரீதங்களில் ஏற்பட்ட அனுபவங்களே இவ் செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் என்றால் மிகையாகாது. போரின் மாறாத வடுக்களிடையே அல்லலுற்ற ஒவ்வோர் மனித ஜீவனுக்கும் கருணையுள்ள இறை அருள் போன்றே இவ் செஞ்சிலுவை சங்கத்தின் பணி அமைந்திருந்தது. இந்த வகையில் தமிழ் மக்களாகிய நாமும் இவ் செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளை பல காலங்களிலும் பெற்றவர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு நன்றி உடையோராக இருப்பது காலத்தின் கட்டாயமாகும். கடந்த கலங்களில் எமது இனம் அல்லல் உற்றபோது எல்லாம் எமக்கு உறவுப்பாலமாக எமது உயிர்களுக்கான உத்தரவாதிகளாக எமக்கு உணவு, உறையுள் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை வழங்கும் உடன் பிறவாத உறவுகளாக இவ் செஞ்சிலுவை அமைப்பு பணியாற்றியுள்ளது அன்றுபோல் இன்றும் இவர்களது பணி தொடர்ந்தவண்ணம் உள்ளது இவ் இடத்திலே நினைவு கூறக்கூடிய ஒன்றாகும். இந்த வகையில் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தழிழ் மக்களது தீராத வலி வேதனைகளின்போது எமது உணர்வுகளை உணர்ந்தவர்களாக எமக்காக பணியாற்றிய இச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியினை போற்றுகின்றேன் இவ் நன்நாளில் தழிழ் மக்கள் ஒவ் வோர்வரும் அவர்களது பணியினை வாழ்த்தவேண்டும்  (திருமதி.நாகரஞசினி ஐங்கரன் தவிசாளர் வலிமேற்கு பிரதேச சபை).

புலிகளை நினைவு கூர்வதற்கு அனுமதியில்லை-இராணுவம்-

imagesCASUZRLMகுழுக்களாக இணைந்து புலிகளை நினைவு கூர்வதற்கு இலங்கையில் அனுமதியில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வணிகசூரிய வலியுறுத்தியுள்ளார். எனினும் வடக்கில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறவினர்களை நினைவு கூர்வது, அன்னதானங்கள் வழங்குவது அல்லது கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளால் பிரச்சினைகள் ஏற்படாது எனவும் பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார் இதேவேளை அரசியலமைப்பை மீறி மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முற்படுவோரை கைதுசெய்யுமாறு இலங்கை இளைஞர் சட்டதரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை இளைஞர் சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் மனோஜ் கமகே இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து சட்டங்களும் பொதுவானது. யாராவது நாட்டின் அரசியல் அமைப்பை மீறி மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்த செயற்படுவார்களாயின் உடனடியாக கைது செய்யுங்கள். அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில். நான்கு பிரதேச செயலர்களுக்கு இடமாற்றம்-

jaal pradesa seyalakamயாழ். பிரதேச சபைகளில் பணிபுரியும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் நான்கு பேருக்கு வட மாகாண ஆளுநரால் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழிலுள்ள வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இந்த நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டன. வலி கிழக்குப் பிரதேசசபை செயலராகக் கடமையாற்றி வந்த திருமதி எஸ்.ஜெயந்தா வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வலி. தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வலி. தென்மேற்குப் பிரதேசசபைச் செயலராகக் கடமையாற்றிய திருமதி கே.கேதீஸ்வரி காரைநகர்ப் பிரதேச சபைக்கும் காரைநகர்ப் பிரதேச சபையில் இருந்த கே.கனகதுரை வடமராட்சி தென்.மேற்குப் பிரதேச சபைக்கும் வடமராட்சி தென்மேற்குப் பிரதேச சபையில் இருந்த திருமதி அன்னலிங்கம் நல்லூர்ப் பிரதேச சபைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நல்லூர் பிரதேச சபையில் இருந்த எஸ்.சாந்தசீலன் உள்ளுராட்சி திணைக்களத்திற்கு நிர்வாக உத்தியோகத்தராகவும் மாற்றப்பட்டுள்ளார். இந்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமி மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.தெய்வேந்திரா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்..

இலங்கை தொடர்பான விசாரணைக்காக நிதி திரட்டல்-

UNஇலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை நடத்துவதற்கான நிதியை திரட்டுவதற்காக ஐ.நா சபையின் தலைமையகத்தில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளின் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதிகள் பங்கேற்றதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு 15 மில்லியன் டொலர்கள் தேவை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னதாக கணிப்பிட்டிருந்தது. இதில் குறித்த தொகையை நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இதற்கான நிதிப் பங்களிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் மேலும் 200 மில்லியன் ரூபாய்களை திரட்டும் பொருட்டு இக்கூட்டம் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு-

india veettu thittam (3)இந்திய இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் இணைப்புச் செயலாளரும், பகுதித் தலைவருமான சுசிந்திரா துரை இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்றுகாலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்திய வீட்டுத்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வுக்கு இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழில் 63பேர் தாதியர்களாக நியமனம்-

2011பி.அணிக்கான புதிய தாதியர்களாக 63பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு இன்று காலை 9.30அளவில் தாதியர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிதாக பயிற்சி பெற்று இன்று தாதியராக 59 பெண்கள் உட்பட 4ஆண்களும் சேவைக்காக நியமிக்கப்பட்டனர். மேலும் இந்நிகழ்வில் தாதியராக நியமிக்கப்பட்ட 59 பெண்களுக்கு தாதியர் கல்லூரி அதிபர் ரயூலா தேவி தொப்பி அணிவித்தும் சிறப்பித்தார்.

புலிகள் ஆதரவு நிகழ்வுகள் தொடர்பில் கனடாவுக்கு வலியுறுத்தல்-

கனடாவில் நடைபெறுகின்ற புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளின் நிகழ்வுகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய இதனைக் கோரியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கனடாவில் முக்கிய அதிகாரி ஒருவர், புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் இல்லை என அறிவித்திருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான கருத்துக்களுக்கு கனேடிய அரசாங்கம் இடமளிக்க கூடாது என்றும் இராணுவப் பேச்சாளர் ருவான் வணகசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடை குறித்து நியுசிலாந்துக்கு விளக்கம்-

புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள தடை தொடர்பில், நியுசிலாந்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நியுசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலியை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் சந்தித்த வேளையில் இந்த விளக்கமளிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஒக்லேண்டில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது நியுசிலாந்து அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற ஆதரவுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதாகவு வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.

இலங்கைக்கு ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகாரம்-

africa ontriyam (2)ஆபிரிக்க ஒன்றியத்தின் அங்கீகார அந்தஸ்த்து இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி ஆபிரிக்க ஒன்றியத்தின் அங்கீகார அந்தஸ்த்தை பெறும் மூன்றாவது தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த அந்தஸ்த்தை பெற்றுள்ளன. இதன்மூலம் ஆபிரிக்க ஒன்றியத்துடனான வர்த்தக மற்றும் ராஜதந்திர தொடர்புகள் பலமடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறந்த வெளிநாட்டு கொள்கையின் விளைவாக இந்த அந்தஸ்த்து கிடைத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸ், இராணுவ பாதுகாப்பின்றி ரயிலை இயக்க முடியாது-

பொலிஸார் அல்லது இராணுவத்தினரின் பாதுகாப்பின்றி ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாது என ரயில் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர். ரயில் ஓட்டுனர்கள்மீது இடம்பெறும் தாக்குதல் சம்பவத்தினையடுத்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக, லொகோமோடிவ் ஒபரேஷன் இன்ஜினியர் சங்கத்தின் பொருளாளர் குறிப்பிட்டுள்ளார். மஹவவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் ஓட்டுனர் ஒருவர் பயணிகளால் இன்று தாக்கப்பட்டுள்ளார். இன்று காலை பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்திருக்கின்றது.

மனைவியுடன் பயணித்த சாரதிக்கு தண்டம்-

கொழும்பு, கோட்டையிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தேசத்துக்கு மகுடம் ரயிலின் என்ஜின் பெட்டியில் பயணித்த ரயில் சாரதியின் மனைவிக்கு 4 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ரயில்வே திணைக்களத்திடம் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, மேற்படி ரயிலை சோதனையிட்ட போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள், குறித்த ரயில் சாரதியின் மனைவியை பிடித்து, தண்டம் விதித்துள்ளனர். புகையிரதத்தின் என்ஜின் பெட்டியில் ரயிலின் சாரதியும் உதவியாளரும் மாத்திரமே பயணிக்க முடியும். இருப்பினும், சம்பவதினம், ரயில் சாரதியின் மனைவியும் அதில் பயணித்துள்ளார். இதனை ரயில் சாரதி படம்பிடித்தும் உள்ளார். இந்நிலையில், குறித்த ரயிலின் என்ஜினில் பெண்ணொருவர் பயணிப்பதை அவதானித்துள்ள பயணிகள் சிலர், ரயில்வே திணைக்களத்திடம் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து உடன் நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள், குறித்த புகையிரதத்தை பொத்துஹெர ரயில் நிலையத்தில் சோதனையிட்டபோது, ரயில் சாரதியின் மனைவி கைதாகி தண்டப்பணம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தொல்புரம் கலைவாணி சனசமூக நிலைய 62ஆவது ஆண்டு விழா-

யாழ். தொல்புரம் மேற்கு கலைவாணி சனசமூக நிலையத்தின் 62வது ஆண்டு விழாவும் கலைவாணி விளையாட்டு கழகத்தின் பொன்விழா விளையாட்டு நிகழ்வுகளும் கலைவாணி முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழாவும் சனசழூக நிலையத்தின் உப தலைவர் கு.சோதிராஜா தலைமையில் எதிர்வரும் 11.05.2014 அன்று மாலை 2.00 மணியளவில் நிலைய மைதானத்தில் நடைபெற உள்ளது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக காவேரி கலாமன்ற இயக்குநர் வணபிதா. டி.எஸ்.யோசுவா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இந் நிகழ்வில் கிராமசேவகர் ச.வைத்தியநாதன், ஆரம்ப பிள்ளைப்பருவ உத்தியோகஸ்தர் செல்வி ஜெயதுர்கா சிவசுப்பிரமணிய சர்மா, சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி கே.சிவசோதி, ஆசுகவி எஸ்.சிவசுப்பிரமணியம். வடபிரதேச நல்லொழுக்க சம்மேளன உறுப்பினர் எஸ்.குமாரகுலசிங்கம், சுப்பிரா கல்வி நிலைய இயக்குனர் ச.ஐங்கரன், வட்டுக்;கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சத்துறுசிங்க, உலக தரிசன நிறுவன இனைப்பாளர் பி.வென்சன் மற்றும் முன்பள்ளி ஆசிரிய சங்க தலைவி திருமதி பரநிருபசிங்கம் கிருஸ்னவேணி ஆகியேர் கலந்துகொள்ள உள்ளனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக நிலையத்தின் முன்னாள் தலைவர்களான க.திருவம்பலம், கு.மதனகோபால், கே.கோகிலன், வே.இராஜேந்திரம் மற்றும் நிலையத்தின் முன்னாள் செயலாளர்களான து.ரவியழகன், முன்னாள் நல்லொழக்க சங்க தலைவர் க.புஸ்பராசா, சமூகசேவை உத்தியோகஸ்தா து.ஐசிந்தன், ஓய்வுபெற்ற இலங்கை மின்சாரசபை உத்தியோகஸ்தர் சே.முருகையா, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகஸ்தர் க.நாகமணி மற்றும் கலைவானி சனசமூக நிலைய பொருளாளர் து.தாராசிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர். இவ் நிகழ்வினை ஒட்டி துவிச்சக்கர வண்டி ஓட்டம் மற்றும் மரதன் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளுடன் சிறப்பு நிகழ்வாக இன்றைய இளைஞர்கள் எதிர்கால சழூகத்தின் ஆரோக்கியமான குறிகாட்டிகளாக இருக்கிறார்களா இல்லையா எனும் தலைப்பில் பட்டிமன்றமும் இடம்பெற உள்ளது. நடுவலாக நல்லூர் பிரதேச செயலக உளவளத் துணை உதவியாளர் மு.தர்மசேகரம் கலந்து சிறப்பிக்க உள்ளார். இறுதி நிகழ்வாக நிலையத்தினர் வழங்கும் வீரத்தின் மைந்தன் நாடகம் இடம்பெற உள்ளது.