ஜெனீவா பிரேரணையால் எவ்வித பலனும் இல்லை-ஜப்பான்-

japanஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையால் எவ்வித பலனும் இல்லை என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சேஜி கிஹரா நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தபோது இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணை குறித்து ஜப்பான் முன்னதாக ஆராய்ந்திருந்தது. இது எந்தவகையில் இலங்கைக்கு உதவும் என்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இது பலனற்றது என்பதை ஜப்பான் பின்னர் புரிந்துகொண்டது என அவர் கூறியுள்ளார் இந்நிலையிலேயே குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் சமூகமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பிற்கு மீண்டும் விஜயம்-

janathipathi anaikuluகாணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் மட்டக்களப்பிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. இக்குழு மட்டக்களப்பு, காத்தான்குடி, மண்முனை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எப்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் 6,7,8 மற்றும் 9ஆம் திகதிகளில் இவ் விஜயம் இடம்பெறுமென்றும் அவர் கூறியுள்ளார். 1990 – 2009ஆம் ஆண்டுகளுக்கிடையில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இதற்கு முன்னதாகவும் மட்டக்களப்பிற்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சீனா இடையே புதிய விமான சேவை-

vimana sevai oppanthamஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே புதிய விமான சேவை ஒப்பந்தம் ஒன்று நேற்றையதினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள இச்சேவையானது கொழும்பிலிருந்து சிச்சுஜான் மாநிலத்துக்கு சென்று பின்னர் பாங்கொக் வழியாக இலங்கை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விமான சேவையானது இலங்கை நேரப்படி கொழும்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு ஆரம்பித்து சீனாவினை காலை 09.15 மணிக்கு சென்றடையும். பின்னர் சீனாவிலிருந்து காலை 10.30மணிக்கு ஆரம்பித்து பாங்கொக் வழியாக கொழும்பினை மாலை 16.05 மணிக்கு வந்தடையும். தற்போது இலங்கை சீனா இடையே 15 விமான சேவைகள் இடம்பெறுகின்றன.

இலங்கை அகதிகளை அவதானமாக கையாளவும்-ஹரிஹரன்-

Harikaran (india)தமிழகம் அரிசல்முனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகளில் மூன்று ஆண்களும் முன்னாள் புலி உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் அவதானத்துடன் கையாள வேண்டும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவர் கேர்ணல் ஹரிஹரன் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தாம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து 10பேர் இவ்வாறு அகதிகளாக தமிழகத்தை சென்றடைந்தனர். அவர்களில் தாய்மார் இருவரும், அவர்களின் பிள்ளைகளும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூன்று ஆண்கள் வெளிநாட்டவர் சட்டத்தின்கீழ் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் புலி உறுப்பினர்களை கையாள்வதில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் ஐந்து வருடங்களின் பின் ஏன் தமிழகத்திற்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுகிறது என்றார் ஹரிகரன்.

காணாமல் போனோர் விபரங்களை அறிய புதிய இணையத்தளம்-

kanamal ponor ariya inaiyamகாணாமல் போனோர் தொடர்பில் தகவல்களை அறிவதற்கு ஏதுவாக புதிய இணையத்தளமொன்றை அங்குரார்ப்பணம் செய்வதற்கு காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது எதிர்வரும் 20ஆம் திகதி இந்த இணையத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எப்.டப்ளியூ. குணதாச தெரிவித்துள்ளார். www.pcicmp.lk என்ற புதிய இணையத்தளத்தளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை அறியமுடியும் என அவர் கூறியுள்ளார். இந்த இணையத்தளத்தில் காணாமல்போனோர் தொடர்பிலான விபரங்கள் தரவேற்றம் செய்யப்படவுள்ளதுடன் அதனை மக்கள் பார்வையிட முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகங்களை தண்டிக்கக் கூடாதென அமெரிக்கா வலியுறுத்தல்-

usnslஊடகங்கள் மேற்கொள்ளும் பணிக்காக, இலங்கை அரசு அவற்றைத் தண்டிக்கக் கூடாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொது விவகாரங்களுக்கான உதவிச்செயலர் டோக் பிரான்ட்ஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் அமெரிக்க நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், காணொளி மூலம் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஊடகங்கள் செய்கின்ற பணிக்காக ஊடக அமைப்புகளை அமெரிக்கா தண்டிப்பதில்லை. இலங்கை அரசும் அதுபோலவே செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. எட்வேட் ஸ்னோடன் வெளியிட்ட உயர் இரகசிய ஆவணங்களை அமெரிக்க ஊடகங்கள் பிரசுரித்தபோது. அமெரிக்கா எதையும் செய்யவில்லை. அவர்களின் பணிக்காக ஊடக நிறுவனங்களை நாம் தண்டிக்கவில்லை. ஊடக சுதந்திரம் பற்றிய சுட்டியில், 2013இல் 32ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா, இந்த ஆண்டில் 46வது இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. நாம் எப்போதுமே மிகச்சரியாகச் செயற்பட முடிவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இந்த குறைபாடுகள் இருந்தாலும், ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து ஏனைய நாடுகளுக்கு அமெரிக்கா ஒரு உதாரணமாக இருக்கிறது என்றார் அவர்.

இலங்கை மீனவர்கள் 31பேர் கைது-

sri lankan fishermenஇலங்கை மீனவர்கள் 31 பேர் இந்திய கரையோர பாதுகாப்பு பொலிசாரால் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏழாம் திகதி 4 படகுகளும் 4 மெற்றிக்தொன் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கரையோர பொலிஸ் பாதுகாப்பு அதிகாரி பிரசாத் றியோ தெரிவித்துள்ளார் ஆந்திரா மாநிலம், கிருஸ்ணா மாவட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக இவர்கள் கைதாகியுள்ளனர். 

தமிழக மீனவப் பிரதிநிதிகள் நாளை வருகை

India-Sri-Lanka-fishermen-issueஇலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவினர் இன்றிரவு தமிழகத்திலிருந்து புறப்படவுள்ளனர். இவர்கள் நாளை அதிகாலை இலங்கையை வந்தடையவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் 18 பேரும், 10 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் கொழும்பு செடக்ஸ் நிலையத்தில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே இந்தியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான தீர்வுகள் எட்டப்பாடாத நிலையில் நிறைவுபெற்றிருந்தது. இரண்டாம் சுற்றுப் பேச்சுவாத்தையை கொழும்பில் நடத்துவதற்காக இரண்டு சந்தர்ப்பங்களில் திகதிகள் குறிக்கப்பட்டாலும் தமிழக அரசாங்கத்தின் பதில் கிடைக்காதமால் அந்தப் பேச்சுவார்த்தையை பிற்போட நேரிட்டது.