தொல்புரம் கலைவாணி நிலையத்தின் ஆண்டுவிழா நிகழ்வு-
யாழ். தொல்புரம் மேற்கு கலைவாணி சனசமூக நிலையத்தின் ஆண்டுவிழா கடந்த 11.05.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை இடம்பெற்றது இந் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் அக் கிராமத்தினை சேர்ந்த சிறந்த சமூக சேவையாளரான திரு சுப்பர் பஞ்காட்சரம் அவர்களுக்கு சமூகஜோதி எனும் கௌரவத்தினை வழங்கி கௌரவித்தார். இதன்போது வலிமேற்கு தவிசாளரால் வழங்கப்பட்ட கௌரவ விருதினை வட பிராந்திய நல்லொழுக்க சம்மேளன பொருளாளர் திரு.வ.சிவலிங்கம் அவர்கள் வழங்க திரு.சுபபர் பஞ்சட்சரம் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது சங்கத் தலைவர். செயலர் மற்றும் பொருளாளரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெற்றிபெற்ற வீரருக்கு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சங்கானை பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு சதாசிவம் ஐங்கரன் அவர்கள் பதக்கம் அணிவித்து கௌரவித்தார். இதன்போது வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனது மாதாந்த கொடுப்பனவுகளின் ஊடாக 28 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கினார். தவிசாளர் திருமதி நாகரஞ்சனி ஐங்கரன் அவர்கள் பதவியேற்று முதன் முதலில் மேற்படி சனசமூக நிலையத்திற்கு விஜயம் செய்து தனது மாதாந்த கொடுப்பனவின் ஊடாக சனசமூக நிலையத்திற்கான மின் விநியோகத்தினை வழங்கி ஆரம்பித்து வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இராணுவ பிரதானியாக மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க நியமனம்-
இலங்கை இராணுவ அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை முதல் இவரது நியமனம் அமுலுக்கு வரும் என்று இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. தற்போது இராணுவ அதிகாரிகளின் பிரதானியாக உள்ள மேஜர் ஜெனரல் கிரிஷாந்த சில்வா, எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுச் செல்லவுள்ளார். இந்நிலையிலேயே, இராணுவ அதிகாரிகளின் பிரதானி வெற்றிடத்துக்கு பிரசாத் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 33 வருடகால இராணுவ சேவையிலுள்ள சமரசிங்க, யுத்த காலத்தின்போது இராணுவ பேச்சாளராகச் செயற்பட்டார். இவர், பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் கடமையாற்றியவர்.
யாழ். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்-
யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் நாளைமுதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன. பல்கலைக்கழக பேரவையின் தீர்மானத்திற்கு அமைய, கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக யாழ்.பல்கலைகழக உப வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அண்மையில் தெரிவித்திருந்தார். யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, யாழ்.பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் சகல மாணவர்களும் விடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. விடுதிகளிலிருந்து வெளியேறும் மாணவர்களை 20ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குப் பின்னர் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளைமுதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என கடந்தவாரம் பல்கலைக்கழக பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மே 18 தடை குறித்து ஐ.நா அவதானம்-
இறுதிப்போரின் போது உயிரிழந்த உறவுகளுக்கு வடக்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளமை குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் நடைபெற்ற போது, கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், அந்த தடை குறித்து தாம் அறியவில்லை. எனினும் அது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய கடந்த வாரம் விடுத்திருந்த எச்சரிக்கை ஒன்றில் போரில் இறந்தவர்களுக்காக பொதுநிகழ்வுகள் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார். எனினும் தனிப்பட்டவர்கள் சமய நிகழ்வுகளை நடத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் அரசாங்கம் போர் முடிவுக்கு வந்ததாக கூறும் மே 18ஆம் திகதியன்று மாத்தறையில் கொண்டாட்ட நிகழ்வை நடத்தவுள்ளது.
இலங்கையில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் தரிப்பு-
பாகிஸ்தான் கடற்படையினரின் கப்பல் ஒன்று செவ்வாய் முதல் 03 நாட்கள் விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை இன்று வந்தடையவுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் அடிக்கடி இலங்கை துறைமுகத்துக்கு வருகின்றன. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது. மேற்படி இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலுள்ள வலுவான பாதுகாப்பு, கலாசார, பொருளாதார, இராஜதந்திர உறவுகளை பி.என்.எஸ்.சாம்ஸீர் என்ற இந்தக் கப்பலின் வருகை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
4,000 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை-
நாட்டில் சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை விரைவில் புதிதாக இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. நாடெங்கிலும் 4,400 கிராம உத்தியோகத்தர்களுக்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சர் டபிள்யூ ஜே செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். சுமார் 500 உத்தியோகத்தர்கள் இதுவரையில் தமது நியமனங்களை பொறுப்பேற்கவில்லை எனவும், எனவே பரீட்சையின் புள்ளிகளுக்கு அமைய, ஏனையவர்களை பதவிக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
யாழில். 1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு-
சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் இந்நிகழ்வு எதிர்வரும் 4ம்திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு பொறுப்பாகவுள்ள குருதி மாற்று வைத்திய நிபுணர் கே.சி.டி.செனிவரத்தின தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பிரதேசத்திற்கு உட்பட்ட குருதிக்கொடை நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிரானி பண்டாரநாயக்க வழக்கு ஒத்திவைப்பு-
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சிரானி பண்டாரநாயக்க நிரபராதியா? குற்றவாளியா என நேற்றைய வழக்கு விசாரணைகளின்போது தீர்ப்பளிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிரானியின் வங்கி தகவல்கள் குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், அதனை சமர்ப்பிப்பதற்கு பிரதிவாதிகள் இடையூறு விளைவித்ததாகவும் சிரானி தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி வாதாடினார். இதன் காரணமாக அவ்வறிக்கை நீதிமன்றில் ஒப்படைக்கும்வரை வழக்கு மீதான தீர்ப்பை வழங்க வேண்டாம் என அவர், நீதவானிடம் கேட்டுக் கொண்டார். இதன்படி சிரானியின் குறித்த வங்கி தகவல்களை எதிர்வரும் 20ஆம்திகதி முன்வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைத் தம்பதியை கைதுசெய்ய இன்டர்போல் உதவி-
தமிழகத்திற்கு அகதியாக சென்ற இலங்கைத் தமிழர்கள் இருவரை (தம்பதி) கைது செய்ய, இன்டர்போல் பொலிஸாரின் உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு பகுதியிலிருந்து கடந்த மே 5ஆம் திகதி தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு 2 தனித்தனிப் படகுகளில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் அகதிகளாக சென்றனர். இலங்கை இராணுவத்தினரால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால் உயிர்ப் பிழைப்பதற்காகவே அகதிகளாக ராமேஸ்வரம் வந்தோம் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். முன்னதாக, அகதிகளாக வந்த கதிர்வேலு தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகிய இருவரும் பல்வேறு பண மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையிலுள்ள பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் சாவகச்சேரி ஆகிய நீதிமன்றங்களில் பிடிவிறாந்துகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த தம்பதியர் தஞ்சம் கோரி தமிழகத்திற்கு வந்துள்ள செய்தி, இலங்கையிலுள்ள ஊடகங்களில் படத்துடன் வெளியாகின. இதனைப் பார்த்த இந்தத் தம்பதியினரால் பாதிக்கப்பட்டவர்கள் சாவகச்சேரி பொலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சாவகச்சேரி நீதி அறிக்கை தாக்கல் செய்து தயாபரராஜா, உதயகலா தம்பதியினரை தம்பதியரை இன்டர்போல் காவல்துறையின் உதவியுடன் கைதுசெய்து இலங்கைக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.