விடத்தல்பளை கமலாசனி வித்தியாசாலை மாணவர்களுக்கு புளொட் தலைவர் ஊடாக உதவி-

P1040288P1040283

யாழ். விடத்தல்பளை, உசன் கமலாசனி வித்தியாசாலையைச் சேர்ந்த 189 பிள்ளைகளுக்கு இன்றையதினம் பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.  பாடசாலையின் அதிபர் திரு. நாகேந்திரன் அவர்களது தலைமையில் இன்றுபகல் 12மணியளவில் நடைபெற்ற மேற்படி நிகழ்வின் அதிதிகளாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் செல்வம் என்றழைக்கப்படுகின்ற திரு.தயாபரன் அவர்களும் கலந்துகொண்டு பிள்ளைகளுக்கான பாதணிகளை வழங்கிவைத்தனர். இரண்டு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் (205,000) பெறுமதியான மேற்படி பாதணிகளை புளொட்டின் சுவிஸ்கிளையைச் சேர்ந்த லெனின் என்கின்ற சிவகுரு செல்வபாலன் அவர்கள் தனது புதல்வர்களான ஈழதர்சன், யாழிசன் ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த பிள்ளைகளுக்கு பாதணிகளை வழங்குவதற்காக எமது சுவிஸ் கிளையைச் சேர்ந்த சிவகுரு செல்வபாலன் (லெனின்) அவர்கள் இந்த உதவியை செய்திருக்கின்றார். அதுபோல பலரும் இப்போது முன்வந்து இவ்வாறான உதவிகளை செய்து வருகின்றனர்.  ஏனென்றால் தற்போது எமது சமூகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த சமூகம் கல்வியிலே முன்னேற வேண்டுமென்பதற்காகவே அவர்கள் இத்தகைய உதவிகளை செய்கின்றார்கள். ஆகவே, இந்த உதவிகள்மூலம் உரிய பயனைப் பெற்றால்தான் இன்னும் தொடர்ந்து உதவிகளைச் செய்ய வேண்டுமென்ற ஓர் ஆர்வம் உதவி செய்பவர்களுக்கும் உருவாகும். எனவே இதற்காக பிள்ளைகள் அனைவரும் மிகவும் கவனமாகவும் அக்கறையுடனும் தமது கல்வியினைக் கற்கவேண்டும். அத்துடன் மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள குழந்தைகள்தான் இங்கு பெரும்பான்மையாக கல்வி கற்கின்றனர். இந்தக் குழந்தைகளின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளைத் தான் நாங்கள்தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். எனவே மாணவர்களாகிய நீங்கள் கல்வியில் சிறந்து விளங்கி உங்கள் பெறுபேறுகளைத் திறம்படப் பெற வேண்டும். அதேநேரத்தில் முக்கியமாக பிள்ளைகளின் பெற்றோரும் தமது பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வது கல்வியில் அவர்கள் காட்டும் அக்கறை போன்றவற்றை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பெற்றோர் அக்கறை செலுத்துகின்ற பொழுதுதான் பிள்ளைகளும் சிறந்த குழந்தைகளாக கல்வியிலே சிறந்து விளங்கக் கூடியவர்களாக திகழ்வார்கள். இதுதான் இன்று எங்களுடைய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு எங்களுக்கு தேவையான ஒரு விடயமாகும்.

அத்துடன் இன்றைக்கு இருக்கின்ற ஆசிரியர்கள், அதிபர்களுள் மிகப் பெரும்பான்மையானோர் மிக அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே பிள்ளைகள் மிகக் கவனமாக கல்விகற்று தங்களுடைய பெறுபேறுகளை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம்தான் தங்களுடைய குடும்பத்தையும் சமூகத்தையும் உயர்த்த முடியுமென்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

DSCF8956DSCF8961DSCF8970P1040273P1040269P1040287DSCF8962P1040281P1040280P1040278P1040275

P1040283