யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 20 பேர் தெற்கில் கைது .

தென்பகுதியில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தொழில் செய்துவந்த யாழ்ப்பாணம் ஆயித்தமலையைச்சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. அவர்கள், உன்னெல்லையில் வீடொன்றை வாடகைக்கு எடுத்தே தங்கியிருந்து தொழிலுக்கு சென்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்ற யுத்தவெற்றி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில், ஏழுபேர் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும் அவர்கள் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தப்பியோடியவர்கள் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இராஜினாமா செய்தார் இந்திய பிரதமர் 

. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், இன்று(17) குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தங்களது இராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதையடுத்து, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின்  கடைசி அமைச்சரவை கூட்டம் இன்று(17) நடைபெற்றது. இதன் போது பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து அமைச்சர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்திற்கு பின் பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர். இதையடுத்து, ராஜினாமா கடிதத்தை, மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கையளித்துள்ளார்.