இந்தியாவின் புதிய பிரதமருக்கு புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் வாழ்த்து

Sithar-ploteஇந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள திரு. நரேந்திர மோடிக்கு புளொட் அமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களிலொருவருமான திரு.த.சித்தார்த்தன் அவர்கள் வாழ்த்து.

எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அவதானித்து வந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாறு காணாதவொரு வெற்றியை  பெற்றிருப்பது குறித்து, எங்களது மக்கள் சார்பில் எனது வாழ்த்தையும் மகிழ்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவரும் எதிர்ப்பார்த்தவாறே இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர  மோடி அவர்கள் பதிவியேற்கவுள்ளார். அவருக்கு எனது மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் பெரும் மகிழ்சியடைகின்றேன்.
இலங்கையில் இனமுரண்பாடு உருவெடுத்த காலத்திலிருந்து, எமது பிராந்திய சக்தியான இந்தியா ஒன்றையே நாம் பெரிதும் நம்பி வந்திருக்கிறோம். அதே நம்பிக்கையுடனேயே தற்போதும் செயற்பட்டு வருகிறோம். பெரு வெற்றியொன்றை பெற்றிருப்பதன் ஊடாக, பிரதமராக வரவுள்ள மோடி அவர்கள், தெற்காசியாவின் பலம்பொருந்;திய தலைவராக மாறியுள்ளார். அந்த வகையில், அவரது காலத்தில், எமது மக்கள் முகம்கொடுத்துவரும் பிரச்சனைகளுக்கு, ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நாம் முன்னெடுக்கவுள்ள முயற்சிகளுக்கு, அவர்;, பக்கபலமாக இருப்பார் என்றே நம்புகின்றோம்.
மாறிவரும் உலக ஒழுங்கில், ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில், இந்தியாவின் முன்னால் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை நாம் விளங்கிக்கொள்ளாமல் இல்லை, எனினும் இலங்கையின் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் மக்களும், தங்களது உரிமையை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக கண்ணீர் சிந்திவருபவர்களுமான, தமிழ் மக்களின் பிரச்சனையையும், ஒரு முக்கியமான பிராந்திய விடயமாக கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பை, மோடி அவர்களின் அரசாங்கம் ஒரு போதுமே தட்டிக்கழிக்காது, என்னும் நம்பிக்கை எமக்குண்டு.

த.சித்தார்த்தன்
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர்
வட மாகாணசபை உறுப்பினர்