இந்திய தேர்தலில்
புதுடெல்லி : நாடு முழுவதும் 1,687 பதிவு செய்யப்பட்ட சிறிய மற்றும் பெரிய கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இவற்றில் இந்திய தேசிய காங்கிரஸ், பா.ஜ., பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 6 தேசிய கட்சிகளும், 54 மாநில கட்சிகளும், 1,627 பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகாரம் பெறாத கட்சிகளும் உள்ளன.இந்த மக்களவைத் தேர்தலில் மோடி அலையால் பெரிய கட்சிகள் உட்பட 1,652 கட்சிகள் தோற்றுள்ளன. இவற்றில் பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட பல பெரிய கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. 16வது மக்களவைத் தேர்தலில் மொத்தம் 8,241 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 3,234 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். கட்சிகளின் சார்பாக நின்றவர்கள் 5,007 பேர்.கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றி பெற்ற 540 பேர், 35 கட்சிகளை சேர்ந்தவர்கள். 3 சுயேச்சை வேட்பாளர்கள் புதிதாக நாடாளுமன்றத்தில் நுழைகிறார்கள். கடந்த தேர்தலில் கணிசமான எம்பி.க்களை கையில் வைத்திருந்த பகுஜன் சமாஜ், தேசிய மாநாட்டு கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இம்முறை ஒரு எம்பி. கூட இல்லை.
தேமுதிக போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்வி
சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிட்ட 14 தொகுதிகளில் 11ல் அக்கட்சி டெபாசிட் இழந்துள்ளது. இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்த தேர்தலில் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் சேலத்தில் தோல்வி அடைந்தார். குறிப்பாக, வட மாவட்டங்களில் தேமுதிக போட்டியிட்ட தொகுதி உட்பட 14 தொகுதிகளிலும் அக்கட்சி வெற்றி வாய்ப்பை இழந்தது. இதில், திருவள்ளூர், மத்திய சென்னை, வடசென்னை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், திண்டுக்கல் கடலூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 11 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. சேலம், விழுப்புரம், திருப்பூர் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் வாங்கினர். அக்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 37 பேரும்
சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 37 பேரும், சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்திக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள் 37 பேர் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அதிமுக வேட்பாளர் வெங்கட் ராமன் ஆகியோர் முதல் வர் ஜெயலலிதாவை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்கள். அப்போது, அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஜெயலலிதா அறிவுரை வழங்கவுள்ளார்.
தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் தங்கள் பதவியை ராஜினாமா ?
புதுடெல்லி: முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜ அறுதிப் பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே பிடித்து, எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பைக் கூட இழந்துவிட்டது. இந்த தோல்விக்கு காரணம் ராகுல் காந்திக்கு தவறான ஆலோசனை வழங்கிய அவரது ஆலோசகர்களா?, அவரது தவறான வேட்பாளர் தேர்வா? என்று கட்சிக்குள்ளேயே கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்து ள்ளது. ராகுல் காந்திக்கு ஆலோசனை கூறி வந்த மூத்த தலைவர்களில் ஜெயராம் ரமேஷ், மோகன் கோபால், மதுசூதன் மிஸ்திரி, மோகன் பிரகாஷ் மற்றும் அஜய் மாகன் ஆகியோரும் உள்ளனர். இவர் கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் பேச்சு அடிபட்டது. இதை மறுத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள், இருவரும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும், இதனால் தீர்வு ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்தனர். மேலும், திங்கள் கிழமை நடைபெறவுள்ள கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் தோல்விக்கான காரணங்கள் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களிலும், பாஜ ஒரு இடத்திலும், பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் யாரும் கூட்டணி அமைத்து போட்டியிட முன் வராததால், 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே நின்றது. காங்கிரஸ் தனித்து நின்றால் வெற்றிபெற முடியாது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அப்போதைய மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயந்திநடராஜன், தங்கபாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டனர். வெளியான தேர்தல் முடிவு, தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகம்
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது. மக்களின் இந்த முடிவை, ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற தோல்வியையும் சந்தித்திருக்கின்றது;
தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத அளவிற்கு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. ‘வெற்றி கண்டு வெறி கொள்வதுமில்லை, தோல்வி கண்டு துவண்டு போவதுமில்லை’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியவாறு, வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக பெறக் கூடிய வகையில் எங்கள் தொண்டினைத் தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்றுவோம்
இப்போதும் ஒரு வாய்ப்பு இருக்கிறது- மோடி
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேராத கட்சிகளுக்கு மக்கள் பலமான அறையை கொடுத்துள்ளனர். அவர்களுக்கு இப்போதும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. மக்களவையில் எந்த கட்சிக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காமல் போயிருப்பதால், அதை பெறுவதற்காக இந்த கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கலாம் என்றார்.