இலங்கைத் தமிழர் நலனில் அக்கறையோடு செயற்படுவேன்- நரேந்திர மோடி-

Pலங்கைத் தமிழ் மக்களின் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக (மறுமலர்ச்சி) மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, புதுடில்லியில் உள்ள குஜராத் பவனில் அம் மாநில முதல்வரும், பா.ஜ.க பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வைகோ வாழ்த்தியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப்போல செயற்பட வேண்டாம் என நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மே மாதத்தில் சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த இராணுவ உதவியைக் கொண்டு இலங்கை இராணுவம், இலட்சக்கணக்கான தமிழ் மக்களைப் படுகொலை செய்தது. காங்கிரஸ் தலைமை செய்த அதே தவறை மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் செய்யக்கூடாது என மோடியிடம் வலியுறுத்தினேன் என்று வைகோ கூறியுள்ளார். அத்துடன், இலங்கைத் தமிழர்கள் அனைவரும், உங்களது ஆட்சியில் பாதுகாப்புப் பெறுவார்கள் என நம்புகின்றேன் என மோடியிடம் தான் கூறியதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மோடி, இலங்கைத் தமிழர் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயற்படுவேன் என்று உறுதியளித்துள்ளார்.

சுயாதீன சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு வலியுறுத்தல்-

UNஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இரு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்த இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமை பிரேரணைக்கு அமைய சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் தீர்மானத்தின் ஊடாக கோரப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிரகாரித்துள்ளது. எனினும் யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் நடத்தப்படவில்லை. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்திற்காக காத்திருக்கின்றனர். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் இலங்கையில் நீடித்து வருகிறது. ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் கரிசனை காட்டவில்லை. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு கூட இலங்கையரசு அனுமதி மறுத்திருந்தது என மனித உரிமை கண்காணிப்பக பணிப்பாளர் பிரட் அடம்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோடியின் ஆட்சி இலங்கைக்கு நன்மை பயக்கும்-அமைச்சர் ரம்புக்வெல்ல

kehaliya rambukwellaஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியுள்ள மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் உறுதியான அரசாங்கம் இந்தியாவில் காணப்படுமாயின் அது இலங்கைக்கு நன்மையானதாக இருக்கும். இலங்கை, இந்தியாவுடன் ஒரு நல்லுறவை பேணுமேயானால் இலங்கையில் சௌகரியமான ஆட்சியை மேற்கொள்ளலாம் என ஊடக மற்றும் தொடர்பாடல் அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மோடியை, பெரும்பான்மை சக்தி தெரிவு செய்தமையினால் உறுதியான அரசாங்கத்தை அவரால் கொண்டு நடாத்தமுடியும். தேர்தலிகளின் பின்னர் கூட்டணிகள் அமைக்கப்பட்டிருக்குமாயின் கட்சிகளுக்கிடையில் போட்டிகள் உருவாகியிருக்கும். ஆனால் தற்போது மோடியால் எந்த ஒரு முடிவினையும் சுதந்திரமாக எடுக்கமுடியும். அது மாத்திரமல்ல இலங்கையும் அயல் நாடு என்பதினால் இலங்கையர்களாகிய எமக்கு அது பிரயோசனமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மோடிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே நல்ல அனுபவங்களையும் தூர நோக்குடைய சிந்தனைகளையும் உடையவர்கள். மோடி ஒரு அனைவரின் கவனத்தையும் திருப்பும் தலைவர். எமக்கு எந்த ஒரு விடயமானாலும் இந்தியாவுடன் தொடர்பு கொள்வதில் இனிமேல் எவ்வித பயமும் இல்லை. அதேபோல இலங்கை இந்தியாவுக்கான நல்லுறவை மேலும் பேணவும் முடியும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தேர்தலின்போது 39 ஆசனங்களில் 37 ஆசனங்கள் பெற்றுக்கொண்டது தொடர்பில் இலங்கை எவ்வித கவலையையும் கொள்ளவில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவரை பெற்றோர் அடையாளம் கண்டனர்-

isai priya arukil ullavarஇறுதிப்போரின் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு, அதற்கான ஆதார படமாக அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய யுவதி, மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து பெற்றோர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இறுதிப்போரின்போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி, 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற்போயிருந்தார். மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியாவுககு அருகில் எமது மகள் இருப்பதை நாம் அடையாளம் கண்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்-

imagesCA5PZGM219 வருடங்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி யுரேசா டி சில்வா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 26ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான இந்திய பிரஜைமீது 26ம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் – பரசன்கஸ்வௌ, கோலிபெந்தேவ பகுதியில் வைத்து குறித்த இந்திய பிரஜை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தடை உத்தரவு பெற ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்குமாறு அறிவுறுத்தல்-

12887486002109922332law02எதிர்வரும் காலங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை உத்தரவு பெற வேண்டுமாயின் ஒரு வாரத்திற்கு முன்பே நீதிமன்றிற்கு அறிவித்திருக்க வேண்டும் என கொழும்பு நீதவான் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்து கைது செய்யப்பட்ட இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களை நீதிமன்றில் நேற்று பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தடை விதிக்கும்போது ஏற்பாடு செய்த தரப்பினரிடமும் கருத்தறிய வேண்டியுள்ளதென நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உரிமை போராட்டங்களை முன்னெடுக்கவென ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யும்போது சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்ற கருத்தை முன்வைத்து பொலிஸார் நீதிமன்றில் தடை உத்தரவுபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் பிரச்சினைக்கு புதிய அரசிடம் தீர்வு கோரல்- 

fishermen talksஇலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு புதிய அரசாங்கத்தின் ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக தமிழக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் எற்கனவே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவு பெற்றுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் ஊடாக தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள விரும்புவதாக இலங்கை இந்திய மீனவர் சங்க அமைப்பின் தமிழக தலைவர் தேவதாஸ் தெரிவித்துள்ளார். இதற்கான முன்னெடுப்புகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.