மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு-

modi pathaviyetpuஇந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள விழாவில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தெற்கு ஆசிய கூட்டமைப்பை சேர்ந்த சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. சார்க் அமைப்பில் பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன. எதிர்வரும் 26ம் திகதி இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அன்று மாலையில் புதுடெல்லியின் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுகின்றது. தற்சமயம் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மகிந்த, அங்கிருந்து திரும்பிய பின்னர், புதிய இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்க புதுடெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வலிமேற்கு தவிசாளர் பண்டத்தரிப்பு பாடசாலைக்கு உதவி, இலவச ஆயள்வேத நடமாடும் சேவை-

valimetku thavisalarயாழ். வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் நேற்றையதினம் (20.05.2014) தமது மாதாந்த கொடுப்பனவினை பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலைக்கு பாடசாலையின் பூப்பந்தாட்ட அணியினை மேம்படுத்தும் முகமாக வழங்கினார், வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் மேற்படி பாடசாலையின் பழைய மாணவியாவார். மேற்படி தவிசாளர் தான் பதவி ஏற்ற காலம் முதலாக தனது மாதாந்த கொடுப்பனவை தொடர்ச்சியாக பல சமூகப்பணிகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்று (21.05.2014) வலிமேற்கு பிரதேச சபையின் சங்கானைப் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள நவீன வசதிகளுடனான மீன்சந்தை தொடர்பில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள் சங்கானை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சங்கானை பட்டின அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் நாளைகாலை (22.05.2014) வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் அவர்களின் ஏற்பாட்டில் இலவச ஆயுள்வேத நடமாடும் சேவை அராலிப் பகுதியில் இடம்பெறவுள்ளது. வலி மேற்குப் பிரதேசத்தில் கடந்த கால வரட்சியால் பாதிக்கப்பட்வர்களுக்காக ஏறத்தாள 4000 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு 9760.00 படி வழங்க ஏற்பாடு செய்யப்படடுள்ளது குறிப்பாக விவசாயம் பாதிப்பு, விவசாய கூலி பாதிப்பு மற்றும் வீட்டுத்தோட்டம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இரணைமடு நீர் வினயோக திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டம் இன்று சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் தொடக்க உரையினை பிரதேச செயலர் நிகழ்த்தினார். தொடர்ந்து இத் திட்டம் பற்றிய விளக்கத்தினை வடிகால் அமைப்பு சபையினர் வழங்கினர்.

ரஷ்யா, ஈரான், இலங்கையுடன் இணைந்து அமெரிக்காவை எதிர்க்க சீனா முயற்சி-

americavai ethirkka china muyatshiபாதுகாப்பு ஒத்துழைப்பு ஆசிய அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு சீன ஜனாதிபதி எஸ்சி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா உள்ளிட்ட இலங்கை, ஈரான் ஆகிய நாடுகளை கொண்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆசிய அமைப்புக்கே சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அமைப்பின் அமெரிக்கா இடம்பெறக்கூடாது என அவர் நிபந்தனை விதித்துள்ளார். ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாடு சாங்காயில் நடைபெற்றபோதே சீன ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் மூலோபாய போட்டியையும் தலையீட்டையும் குறைக்க சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளதென சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நம்முடைய பாதுகாப்பு ஒத்துழைப்பை புதிதாக்கி புதிய பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை கட்டமைப்பு நிறுவ வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஆசிய வலய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற வகையில் மூக்கை நுழைப்பதாக பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் சீன ஜனாதிபதியின் புதிய அழைப்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் விசாரணைக்கு அழைப்பு-

யாழ். பலாலி பாதுகாப்பு கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற விசாரணைகளை தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரனை விசாரணைக்காக பாதுகாப்பு கட்டளைத் தலைமையகத்திற்கு நேற்று யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி உதயபெரேர அழைத்திருந்தார். அங்கு நடைபெற்ற விசாரணைகளை தொடர்ந்து இன்று மேலதிக விசாரணைகளிற்காக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் தலைமையகத்திற்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலையே பலாலிக்கும் கொழும்புக்கும் இராசகுமாரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பம்பலப்பிட்டி பாடசாலை ஆசிரியரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு-

bambalapitiyil aasiriyar maranam (1)கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரின் சடலம் அப்பாடசாலை அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டதாகவும், மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையெனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சடலம்மீதான நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது இது ஒரு கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாளையதினம் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புமென கூறப்படுகிறது. இதேவேளை சடலமாக மீட்கப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் பிரான்ஸ் கமிலாஸின் (வயது 37) மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளது என அவரது மனைவி மஹேசா கமிலாஸ் தெரிவித்துள்ளார்.

மலேசிய காவல்துறையினர்மீது குற்றச்சாட்டு-

malaysian policeமலேசிய காவல்துறையினர் இலங்கையிலிருந்து செல்லும் அகதிகள் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மலேசிய உள்ளுர் மனிதவுரிமைகள் அமைப்பொன்று குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் மலேசிய காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சூவாரம் என்ற அமைப்பின் பேச்சாளர் ஆர் தேவராஜன் குற்றம் சுமத்தியுள்ளார். மலேசிய காவல்துறையினர் நாட்டின் அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயற்படுவதாக அவர் கூறியுள்ளார். மலேசியாவில் கடந்த வியாழக்கிழமை மூன்று இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிருபநாதன், மகாதேவன் கிருபாகரன் மற்றும் குஸாந்தன் சந்திரலிங்கம் என்ற பெயர்களில் அவர்கள் அறியப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்களின் விசாரணை குடிவரவு சட்டத்தின் அடிப்படையில் நடைபெறவேண்டும் என்று தேவராஜன் வலியுறுத்தியுள்ளார். இவர்கள் மூவரையும் நாடு கடத்தக்கூடாது என ஐ.நா மனித உரிமைகள் சபையிலும் அவர் கோரியுள்ளார்.

ஜனாதிபதி பான் கீ மூனுடன் பேச்சுவார்த்தை-

mahinda ban ki moon meetசீனாவில் இடம்பெறும் ஆசியாவின் சர்வ செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான சர்வதேச மாநாட்டில் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உரையாற்ற உள்ளார். இதனிடையே, சீனாவின் ஷங்காய் நகருக்கும் சென்ற ஜனாதிபதி நேற்று பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னுன் ஹூசைனை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது இருநாட்டு உறவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என பாகிஸ்தானிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.. அத்துடன், இரு நாட்டுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளை நடத்துவதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டது. இதனிடையே, இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி சீன ஜனாதிபதி மற்றும் ஈரான் ஜனாதிபதி ஆகியோரை சந்திக்க உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகபிரிவு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி இன்றைய தினம் ஐ.நா பொதுச் செயலாளர் பான்கி மூனை சந்திக்கவுள்ளார்.

நானுஓயாவில் காணமல்போன மாணவிகள் மீட்பு-

imagesCA4W14EAநுவரெலியா, நானுஓயாவில் நேற்றுமாலை காணமல் போனதாக கூறப்பட்ட 2 பாடசாலை மாணவிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளனர். நானுஓயாவிலுள்ள காட்டுப் பகுதியில் இருந்து இரு மாணவிகளும் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவிகள் இருவரும் பாடசாலைக்கு சென்று வீடு திரும்புகையில் நேற்றுமாலை காணமல் போயிருந்ததாக கிடைத்த முறைப்பாட்டு அமைய, பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை, மாணவிகள் இருவரும் கடத்தப்பட்டிருந்தார்களா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய சிறைச்சாலை அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை-

puthiya sirai athikarikalசிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு 67 புதிய சிறைச்சாலை அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் வெற்றிடங்கள் நிலவுவதாகவும், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட தகுதிகாண் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம் தெரிவித்துள்ளார் சிறைச்சாலை அதிகாரிகளுக்கான பரீட்சையில் சித்தி அடையாதவர்களால், பரீட்சையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நேற்றையதினம் தள்ளுபடி செய்யப்படுள்ளது

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம்-

kilakku makana padasalaikalukuகிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை மீள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, 40 புதிய ஆசிரியர்களுக்கு நேற்று நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ.நிசாம் தெரிவித்துள்ளார். திருகோணமலை கல்வி அபிவிருத்தி முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் நியமனம் வழங்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது. நிபந்தனை அடிப்படையில் புதிய ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

வீசாவில் வந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இணைய முயற்சி-அமைச்சர் சம்பிக்க-

china udanaana nadpuravai modi viruppa mattaarசுற்றுலா விசா மூலம் இலங்கைக்குள் வந்த வெளிநாட்டவர்கள் வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயர்களை பதிவு செய்துகொள்ள முயல்வதாக ஜாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி ஷம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சி செயலர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்குமிடையிலான சந்திப்பின்போது ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர்களும் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்திருந்தனர். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சிங்களக் குடியேற்றங்களுக்கு யாரிடமும் அனுமதி கோரத்தேவையில்லை-ஹெல உறுமய-

Jathika Hela Urumayaவடக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள நாம் யாரிடமும் அனுமதி கோரவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைப்பாளரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில வடக்கில் தனி தமிழர்களுக்கு அங்கீகாரம் கொடுத்ததனாலேயே பயங்கரவாதம் உருவாகியது எனவும் குறிப்பிட்டுள்ளார். மூவின மக்களையும் இணைத்து வடக்கில் குடியேற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இராணுவ பிரசன்னத்தை குறைக்க இதுவே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்க மன்னாரில் சிங்களக் குடியேற்றத்தினை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டமை தொடர்பில் கூறும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமோ, சர்வதேசத்திடமோ அனுமதியினைப் பெற்று வடக்கில் சிங்கள மக்களை குடியேற்ற வேண்டிய அவசியமில்லை. சிங்கள மக்கள் எவ்வித தடைகளும் இன்றி வடக்கில் வாழக்கூடிய உரிமை உள்ளது. அதனை எவராலும் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது. மேலும், வடக்கில் இராணுவ அதிகரிப்பு உள்ளதெனவும் பொதுமக்களின் காணிகளை அபகரிப்பதாகவும் கூட்டமைப்பு தொடர்சியாக குற்றம் சுமத்தி வருகின்றது. இதனைத் தடுக்க வேண்டுமானால் வடக்கில் மூவின மக்களையும் குடியேற்ற வேண்டும் என்றார் அவர். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு-

Mullivaikal ninaivendhal (2)Mullivaikal ninaivendhal (1)யாழ்.பல்கலைகழகத்தில் பல கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டதாக தெரியவருகிறது. பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் இன்றுகாலை 11 மணியளவில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களின் ஆத்மா சாந்தியடையவேண்டி சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இவ் அஞ்சலி நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.