விசாரணை குழுவை அமைப்பதில் நவநீதம்பிள்ளை தீவிரம்-

navilpillaiஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய விசாரணை நடத்துவதற்கான குழுவினை நியமிக்கும் பணியில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் ஜூன் முதல் வாரத்தில் விசாரணை குழு தொடர்பான அறிவிப்பை நவநீதம்பிள்ளை வெளியிடவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டுமென்று மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்திருந்தது. இதேபோல் விசாரணை குழு தொடர்பான அறிவிப்பை நவநீதம்பிள்ளை வெளியிட்டதும், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் இலங்கையிடம் கோரவுள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கை மீதான விசாரணைக்கு தேவையான நிதியினை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பெற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்தே விசாரணைக்கான குழு நியமிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். விசாரணைக்குழுவில் இடம்பெறவுள்ள உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம்-

desapiryaஎதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊவா மாகாண சபை தேர்தல் முதலாவதாக இடம்பெறும். எனது அதிகாரத்தின் பிரகாரம் செப்டெம்பர் 2ஆம் திகதி இந்த மாகாண சபை கலைக்கப்படும். அவ்வாறு கலைக்கப்பட்டால் நவம்பர் மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை தேர்தலை நடத்த முடியும். ஆனால் நவம்பர் மாதத்தில் தேர்தலை நடத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. வரவு – செலவு திட்ட அறிக்கை மற்றும் அடுத்தாண்டில் கட்டாயம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதேபோல் 2016ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலையும், பாராளுமன்ற தேர்தலையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியால் விரும்பிய நேரத்தில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியும். சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டோ அல்லது பெறாமலோ பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியும் என்பதனையும் அனைவரும் அறிவர். தேவைப்படின் நவம்பருக்கு பின் ஜனாதிபதி தேர்தலையும் நடத்த முடியும். எனினும் உரிய கால கட்டத்தை குறிப்பிட முடியாது என்றார் அவர்.

மீனவர் பிரச்சினைக்கு இலங்கையின் தனித்துவத்துடனான தீர்வு-

srilankaசட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாது, இலங்கையின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையிலான தீர்வொன்றின் மூலம் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என இலங்கை மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கன்னியாகுமரி கடற்பரப்பில் நேற்று முன்தினம் 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் இராமநாதபுரம் நீதிமன்ற உத்தரவின்பேரில் 15 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நேற்று மேற்கொண்டிருந்தோம் என பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானம்-

palkalai kalagankalilநாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் 2 புதிய பாடத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. களனி பல்கலைக்கழகத்தில் கணனி வன்பொருள் பொறியியல் பாடத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஷெணிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார். யாழ் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் மொழிப்பெயர்ப்புக் கல்வி பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறுகின்றது. 2013 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களை கற்பதற்கான வாய்ப்புள்ளதாக ஷெனிக்கா ஹிரிம்புரேகம கூறியுள்ளார்.

சீனாவிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பல்-

imagesசீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு 7.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஆசியாவின் சர்வ செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நான்காவது மாநாடு சீனாவின் ஷங்காய் நகரில் இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி அதில் கலந்து கொள்ள சென்றிருந்தார். இதன்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்குடன் இரு தரப்பு உறவுகள் குறித்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதுதவிர, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஈரான் ஜனாதிபதி ஹசன் ரெஹானியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடியுள்ளார். அத்துடன் ஐ.நா செயலாளர் பான் கி முனையும் சந்தித்துள்ளார்.

மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞன் காயம்-

2cயாழ். எழுதுமட்டுவாழ் தெற்குப் பகுதியில் இன்று முற்பகல் 10.45 மணியளவில் மர்மப் பொருள் வெடித்ததில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்திய வீட்டுத் திட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் வேலைசெய்யும் கட்டடத் தொழிலாளி துப்பரவுப் பணியில் ஈடுபட்ட சமயத்தில் மர்மப்பொருள் வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் மிருசுவில், தவசிகுளத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான 22வயதுடைய சந்திரகுமார் பிரதீபன் என்பவர் தனது இடது கால் பாதத்தை இழந்துள்ளார். காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த இங்கு பொதுமக்கள் மீள்குடியேற 2012ல் அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.

தாதியர் சேவையில் 3067 வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டு-

thaathiyar panipurakanippu (1)தாதியர் சேவையில் காணப்படும் 3067 வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2500 பேரை பயிற்சியில் இணைத்துக்கொள்வதற்கான கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் 2000பேர் மட்டுமே பயிற்சிக்காக வந்துள்ளனர். எனவே மீண்டும் பயிற்சித் தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நாட்டில் தாதியர் சேவைக்கான வெற்றிடங்களை நிரப்புவதாயின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக செயற்படுவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஐவர் கைது-

meenavar pirachanaikkuபடகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்றிருந்த நிலையில், இன்றுகாலை மீண்டும் படகுமூலம் நாடு திரும்பிய மன்னார் பிரதேசவாசிகள் ஐவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்த ஐவரும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறும்வகையில் செயற்பட்ட குற்றத்துக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள், எதற்காக இந்தியா சென்றார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அம்பாறையில் இராணுவ வீரர் சடலமாக மீட்பு-

அம்பாறை, காரைதீவு படை முகாமிலிருந்து இராணுவ வீரர் ஒருவர், இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முகாமிலுள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி, கட்கஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சமன்குமார என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இவர், காரைதீவு 3ஆவது விஜயபாகு படையணியின் பணியாற்றி வந்தார். இவரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.