நிரந்தர தீர்வினை இந்தியாவால் பெற்றுக்கொடுக்க முடியும்-இரா.சம்பந்தன்-

sampanthanஇலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான பிரதான பங்கை இந்தியாவால் வகிக்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் புதிய பிரதமராக மோடி திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்துச் செய்தியாகவே சம்பந்தன் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். ஒரு அரசியற் தீர்வை வழங்குவேன் என இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதியை மதித்து இலங்கை அரசாங்கம் நடக்கவில்லை. கடும்போக்கான ஓர் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசு முனைப்பாக முன்னெடுத்து வருகின்றது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் பெற்ற பிரமாண்டமான வெற்றிக்காகவும், பாரத தேசத்தின் பிரதமர் என்ற உயர் பொறுப்புக்காக நீங்கள் பெறுகின்ற நியமனத்திற்காகவும், இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். 2009 யுத்தம் முடிவுற்றபின் நிரந்தரத் தீர்வு ஒன்றை தேசிய இனப்பிரச்சினைக்குக் காண்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகின. அரசியற் தீர்வை வழங்குவேன் என்ற வாக்குறுதியை போர் நிகழ்ந்த காலத்திலும், போரின் முடிவிற்குப் பின்னாலும் இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை வழங்கியிருந்தது. ஆனாலும், தனது அந்த வாக்குறுதிகளை மதித்து இலங்கை அரசாங்கம் நடக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள், நல்லிணக்க முயற்சிகளையும் நிரந்தர அமைதி ஏற்படும் சூழலையும் மேலும் பலவீனப்படுத்துவது மட்டுமன்றி எதிர்ப்புணர்வுகளையே உருவெடுத்து வளரச் செய்யும். இத்தகைய ஒரு நிலைமையைத் தமிழ் மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை. இலங்கை அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒர் அரசியல் தீர்வை உருவாக்கி எடுப்பதில் அது விசுவாசமாக இல்லை என்பதையே தெளிவாக காட்டுகின்றன என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நாங்கள் அப்படி கருதுவது ஏனென்றால் நீதியினதும் சமத்துவத்தினதும் அடிப்படையிலான கௌரவமான ஓர் சமாதானம் எங்கள் நாட்டில் உருவாகும் என்ற நாங்கள் நம்புவதாலும் பாரத தேசம் வகிக்கின்ற பாத்திரம் அதனை உறுதிப்படுத்தும் என்பதனாலும் ஆகும். உங்களையும் உங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனையவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை உங்களால் முடிந்த அளவுக்கு விரைவாக எமக்கு வழங்குமாறும் நாம் வேண்டுகின்றோம் என இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை தேவை-அவுஸ்திரேலியா-

australiaநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும், பயனுள்ளதும் வெளிப்படையானதுமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குடனான சமாதான திட்டத்தை முன்னெடுக்கவும் அவுஸ்திரேலியா இலங்கையை ஊக்குவிக்கும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற செயலரும் செனட்டருமான பிரட் மேசன் தெரிவித்துள்ளார். அவர் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனைக் கூறியுள்ளார். மோதல்களின் போது இரு தப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவுஸ்திரேலியா இலங்கையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை சில வெளிநாட்டு புலம்பெயர் அமைப்புகளை தடைசெய்தாலும் அந்த அமைப்புகள் அவுஸ்திரேலியா சட்டத்திற்கு அமைய செயற்படும் சுதந்திரத்தை அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தாது. அவுஸ்திரேலியா உரிமைகளுக்கான சுதந்திரத்தை வலுவாக ஆதரித்து வருகிறது. அத்துடன் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இலக்கு வைக்கப்பட்டதை நல்லிணக்கத்திற்கான உகந்த செயலாக அவுஸ்திரேலியா கருதவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்ற செலர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவநீதம்பிள்ளை பழிதீர்க்க அவசரப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு-

Jathika Hela Urumayaபுலிகளை கொன்றமைக்கு பழி தீர்க்கவே நவநீதம்பிள்ளை அவசரப்படுகின்றார் ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளை முதற்கொண்டு ஜெயலலிதா வரையிலும் இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைவரும் புலிகளினால் வழிநடத்தப்பட்டு வருபவர்களின் கைப்பொம்மைகள். இலங்கையில் போர்க்கால சூழலில் சர்வதேச நாடுகளின் ஆதரவும் உதவிகளும் எமக்குக் கிடைத்தது. அப்போது சர்வதேசத்திற்கு புலிகள் அமைப்பு பயங்கரவாதிகளாகவே இருந்தனர். அனைத்து நாடுகளிலும் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகவும் சர்வதேச அளவில் தேடப்படும் இயக்கமாகவும் காணப்பட்டது. எனினும், யுத்தத்தின் பின்னர் புலிகள் இயக்கம் நல்லதொரு இயக்கமாகவும் அவர்களின் ஆயுதப் போராட்டம் நியாயமான ஒன்றெனவும் வலியுறுத்த ஆரம்பித்து விட்டனர். இன்று இலங்கைக்கு எதிராக விசாரணையினை கொண்டுவர முயற்சிக்கும் அனைவரும் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களென்பது உண்மை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மோடி தமிழர்களுக்கு துரோகம் செய்யமாட்டார்-பாரதீய ஜனதா கட்சி-

bjpஇந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டார் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி அதன்மூலம் குழப்பங்களை ஏற்படுத்த தமிழகத்தின் சில கட்சிகள் முயற்சித்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் பொன்.இராதகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் இந்திய மத்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது எனினும், புதிய பாரதீய ஜனதா கட்சி ஆட்சியானது இலங்கை வாழ் தமிழர்களின் நலன்களையும் பாதுகாக்கும் எனவும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மோடியின் பதவிப் பிரமான நிகழ்வுகளில் ஜெயலலிதா பங்கேற்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பி.பீ. ஜயசுந்தரவை பதவி நீக்கம் செய்யத் தீர்மானம்-

imagesCAAFRW6Nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை பதவி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்கவும் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் சுதர்மா கருணாரத்ன சுகாதார அமைச்சின் செயலாளராக மாற்றம் பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர, பொருளாதார அபிவிருத்தி அமைச்சை அழிவை நோக்கி கொண்டு செல்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் பி.பீ. ஜயசுந்தரவை அப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் தகவல் தொலைத்தொடர்பு விழிப்புணர்வு பயிற்சி-

kilinochchiyil thakaval thodarpuகிளிநொச்சி இன்றையதினம் சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தகவல் தொலைத்தொடர்பு விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள இராணுவத்தின் கேட்போர் கூடத்தில் இந்த ஒரு நாள் பயிற்சி நிகழ்வு இன்றுகாலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 600பேர் பங்கேற்றிருந்தனர்.

பாரிய மக்கள் பேரணிக்கு ஐ.தே.கட்சி ஏற்பாடு-

UNPஇந்த வருடத்தில் மீண்டும் ஒரு பாரிய மக்கள் பேரணி ஒன்றை நடத்தவிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல்களின் வெற்றியை நோக்கி ஐக்கிய தேசிய கட்சி பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இந்த மாபெரும் பேரணி அமையும் என்று கயந்த கருணாதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.