ஐ.நா விசாரணைக்கான தலைவராக கோபி அனானை நியமிக்க நடவடிக்கை-
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அனான் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவர் கோபி அனான். இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கும் நோக்குடனேயே போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. தீர்மானம் வலியுறுத்துவதால் கோபி அனானே அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்குச் சிறந்தவர் என தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை ஆலோசிக்கிறார் என்றும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு-
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கவுள்ள நிலையில், நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதற்கிடையில், இந்தியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திரமோடிக்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை மறுதினம் நடைபெறவுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன. நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட பல்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்கும் அரச தலைவர்களை, நரேந்திரமோடி தனித்தனியாக சந்திக்கவிருப்பதாக தெரியவருகிறது. இதேவேளை, இந்தியா செல்லும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா கூறியுள்ளது.
யாழில் கடற்றொழில் திணைக்களம் சுற்றிவளைப்பு-
யாழ். குடாநாட்டை சூழவுள்ள தீவுப் பகுதிகளில் கடற்றொழில் திணைக்களத்தினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள உத்தியோகஸ்தர்களால் இன்று அதிகாலை முதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக திணைக்கள பணிப்பாளர் ந.கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார். தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்தி மாவட்டத்திலுள்ள மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத வலைகளுடன் கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பணிப்பாளர் ந.கணேஷமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காணிப் பிரச்சினை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் அறிக்கை-
ஐக்கிய நாடுகளின் 26வது மனித உரிமைகள் மாநாட்டின்போது, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் காணப்படுகின்ற காணிப்பிரச்சினை குறித்த அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் உள்நாட்டு இடப்பெயர்வுகளுக்கு ஆளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் சாலோகா பெயானி இந்த அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2ம் திகதி முதல் இலங்கையில் தங்கி இருந்த பெயானி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, இடம்பெயர்ந்த மக்களை சந்தித்திருந்தார். அவர் தமது இலங்கை விஜயம் தொடர்பில் தயாரித்துள்ள அறிக்கையே அடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது.
மலேசியாவில் மூன்று தமிழ் இளைஞர்கள் கைது-
மலேசியாவில் மூன்று தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக, மலேசியா பொலீஸ் மா அதிபர் காலிட் அபு பாகர்; தெரிவித்துள்ளார். மலேசியாவின் செலான்கூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த மூன்று பேரும் கடந்த 2004ம் ஆண்டு முதல் அங்கு தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மூன்று பேரும் மலேசியாவை தளமாக கொண்டு நிதியை திரட்டியும், புலிகளின் கொள்கைகளை பரப்பியும் அந்த இயக்கத்தை மீளுருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
13ம் திருத்தத்தின்படி அதிகார பகிர்வு பற்றிய பேச்சுவார்த்தை-
13ம் திருத்தச் சட்டத்தின்படி அதிகாரப் பகிர்வினை முறையாக அமுலாக்குமாறு பாரதீயே ஜனதா கட்சி அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதீயே ஜனதா கட்சியின் பேச்சாளர் நிர்மலா சீத்தாராமன் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். அயல் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பாரதீயே ஜனதா கட்சி முக்கிய கொள்கையாக கொண்டுள்ளது. இலங்கை குறித்த விடயங்களுக்கு பாரதீயே ஜனதா கட்சி முக்கியத்துவம் வழங்கும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய முடக்கல் தொடர்பாக மனித உரிமைக்குழு அறிக்கை கோரல்-
இணையத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில், பொதுஜன ஊடக அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது. அதன் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். இணையத்தளங்களின் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து இவ்வாறான தடை குறித்து முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.