முல்லைத்தீவில் வானூர்தி பாகங்கள் மீட்பு-
முல்லைத்தீவு சாளை கடற்பிராந்தியத்தில் இருந்து உலங்கு வானூர்தி ஒன்றின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடற்படையின் சுழியோடி பிரிவினரால் குறித்த உலங்கு வானூர்தியின் பாகங்கள் கண்டுப்பிடிப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டவை, யுத்த உலங்கு வானூர்தியின் பகுதிகள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமானத்தின் பாகங்கள் காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினருடன் இணைந்து சம்பவம் இது தொடர்பிலான மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் புலி உறுப்பினர் கைது-
புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சந்தேகநபர் வவுனியா வைத்தியசாலையில் கடந்த 2006ம் ஆண்டுமுதல் 2008ம் ஆண்டுவரை சேவையாற்றியுள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னரும், புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்புக்கு புத்துயிரளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கருதப்படும் சுமார் 50பேர் இதுவரை சந்தேகத்தின்பேரில் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மாகாணசபை முறையில் குறைபாடுகள்-வடக்கு முதல்வர்-
மாகாண சபை முறைமைகளில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஊடகச் செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். தற்போதுள்ள மாகாண சபை முறைமைகளில் காணப்படும் குறைப்பாடுகள் காரணமாக தாம் உள்ளிட்ட வட மாகாண சபை பெரிதும் அசௌகரியத்திற்கு உள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வலி மேற்கு பிரதேச சபை தவிசாளரின் 100 பஜனைப் பாடசாலை திட்டம்-

யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது 100 பஜனைப் பாடசாலைத்திட்டம் வலி மேற்கு பிரதேசத்தின் சுழிபுரம் பாண்டுவட்டைப் பகுதியில் உள்ள அம்பாள் ஆலயம், ழூளாய் முருகன் ஆலயம் மற்றும் தொல்புரம் ஆதிமுத்துரியம்மன் ஆலயம் ஆகியவற்றில் கடந்த 23.05.2014 வெள்ளிக்கிழமை அன்று தவிசாளரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து தமது பிள்ளைகளை இவ் பஜனை நிகழ்வுகளில் பங்குபற்றச் செய்தனர். மேற்படி நிகழ்வானது வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் அவர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபரை நீக்குமாறு கோரி எதிர்ப்பு நடவடிக்கை-
அம்பாறை, நாவிதன்வெளியலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரை நீக்குமாறு கோரி மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்றுகாலை 7 மணி தொடக்கம் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. பாடசாலை அதிபரின் செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டனர். இந்நிலையில் குறித்த அதிபர் தொடர்பில் தமக்கு முறைப்பாடு வந்துள்ளதாகவும், வலயக் கல்வி பணிப்பாளர் இது பற்றி ஆராய்வதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ.ஏ நிசாம் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி குழுவினர் இந்தியாவிற்கு விஜயம்-
நரேந்திர மோடியின் பதவியேற்பிற்கு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் புதுடில்லியை அடைந்துள்ளனர். இந்தியாவின் 15 ஆவது பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு இன்றுமாலை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலர் சேனுக்கா செனவிரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி ஆகியோர் ஜனாதிபதியுடன் சென்ற குழுவில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜந்தர் மந்தரில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்திய ம.தி.மு.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட 150 ம.தி.மு.க.வினரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடலில் தத்தளித்தமீனவர்கள் மீட்பு-
விபத்துக்கு உள்ளான படகில் இருந்து 9 மீனவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். காலியில் இருந்து மீன்பிடி தொழிலுக்குச் சென்ற குறித்த பகுதியைச் சேர்ந்த படகொன்று விபத்துக்கு உள்ளானதாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர் இன்று 9 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
நரேந்திர மோடியை புறக்கணித்த 5 மாநில முதலமைச்சர்கள்-
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை ஐந்து மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பதாக தெரியவருகிறது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சார்க் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்று சார்க் நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இது தவிர வெளிநாட்டு தூதர்கள், மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரையுலகினர் என 4ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால்மோடி பதவி ஏற்பு விழாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள். மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி அழைக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கேரள மாநில முதல்வர் உம் மன்சாண்டியும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் முன்கூட்டி திட்டமிட்ட நிகழ்ச்சியிருப்பதாக கூறி விழாவில் பங்கேற்கவில்லை. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ஒடிசா நிதி மந்திரி பிரதீப் அம்த பங்கேற்கிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் இதில் பங்கேற்கவில்லையென தெரியவருகிறது.