புலிகள் இயக்க சந்தேகநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல்-
மலேஷியாவில் கைது செய்யப்பட்ட புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என கூறப்படும் மூன்று சந்தேகநபர்களும் நேற்றிரவு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் மூவரும் கடந்த 15ஆம் திகதி மலேஷியாவில் கைது செய்யப்ட்டனர். புலிகள் அமைப்பினால் முல்லைச்செல்வன் எனக் குறிப்பிடப்படும் மீசாலை பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கராஜா துஷாந்தன், புலிகளின் கலைத்துறையைச் சேர்ந்த மகாதேவன் கிருபாகரன் மற்றும் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த செல்லதுறை கிருபானந்தன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான விசாரணைகளை பயங்கரவாத புலயனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தளை புதைகுழி எலும்புகளில் சித்திரவதைக்கான அடையாளம்-
மாத்தளை மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆராய்ந்ததில் இறந்தவர்கள் மரணமடைவதற்கு முன் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை பரிசோதனை செய்த குருநாகலை சட்ட வைத்திய அதிகாரி மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளதாக காணாமல்போனோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் வடகள தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட புதைகுழியிலிருந்து 153 மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. அவற்றில் சிலவற்றின் உள்ளே இரும்பு ஆணிகள் இருந்தது. விரல்களும் உடம்பின் வேறு பல பாகங்களிலும் கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் தெரிகின்றன என சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என அவர் கூறினார். சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கையில் சித்திரவதைக்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த மரணங்களை கொலைக் குற்றச்சாட்டாக கருதி வழக்கு நடத்த வேண்டுமென நீதிவான் பரிந்துரைக்க வேண்டும் என்று தாம் கோரியதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். மாத்தளை புதைகுழி சடலங்கள் 1988-89 காலப்பகுதியில் இலங்கையில் நடந்த கலவரங்களின்போது காணாமல்போனவர்களாக இருக்கலாமென சந்தேகம் தெரிவித்துள்ள அவர்களின் உறவினர்கள், இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டுமென நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் 20ஆயிரம் இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பு-
குவைத் நாட்டில் சட்டவிரோதமாக 20,000ற்கும் அதிகமான இலங்கை பணியாளர்கள் தங்கியிருப்பதாக, குவைத்தின் இலங்கைக்கான தூதுவராலம் தெரிவித்துள்ளது. குவைத்தில் பல்வேறு துறைகளில் தொழில் புரிவோரே சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக இலங்கைக்கான தூதுவர் சீ.ஏஎச்.எம்.விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை திரும்பும் எதிர்ப்பார்ப்புடன் பெருந்திரளானவர்கள் நாளாந்தம் தூதுவராலயத்தின் ஒத்துழைப்பை நாடி வருவதாகவும், எனினும் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் கைது செய்யப்படும் சந்தர்பங்களில் விசேட ஏற்பாடுகள் மூலம் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் இலங்கைக்கான தூதுவர் சீ.ஏஎச்.எம்.விஜேரத்ன மேலும் சுட்டிக்காட்டிள்ளார்.
இந்தியப் பிரதமர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு-
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை மற்றும் இரு நாட்டு மீனவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக, இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். இன்றுமுற்பகல் இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விரு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பினை அடுத்து, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சார்க் வலயத்தின் ஏனைய தலைவர்களுடனும் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை இன்றைய தினம் முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
மாலைதீவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம்-
மாலைதீவுக்கு மிக விரைவில் விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்காக இந்தியாவுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையும் ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு மாலைதீவு ஜனாதிபதி விசேட அழைப்பு விடுத்துள்ளார். இவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை ஜனாதிபதி, மிக விரைவில் மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் மாலைதீவு அதிகாரிகள் செயற்பட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி மஹிந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு ஆதரவளித்தமைக்கும் நன்றி கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜினாமா, இனியபாரதி நியமனம்-
கிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் உறுப்பினர் துரையப்பா நவரெட்ணராஜா தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர்இராஜினாமா கடிதத்தை கிழக்கு மாகாண பேரவை செயலருக்கு அனுப்பியுள்ளார். இவரது இராஜினாமாவையடுத்து கிழக்கு மாகாண சபையில் வெற்றிடமொன்று தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.சரீப் தேர்தல் ஆணையாளருக்கும் தெரிவித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாண சபையில் இவர் விவசாய கால் நடை அபிவிருத்தி அமைச்சராக செயல்பட்டு வந்துள்ளதுடன் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்;டமைப்பில் போட்டியிட்டு தோல்விடைந்திருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசன மூலம் இவர் மீண்டும் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் இனியபாரதி கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு-
கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று ஆரம்பித்த வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தண்டாயுதபாணி தலைமையில் மேற்படி அஞ்சலி நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புத் துண்டுகள் தோளில் சால்வையாக அணிந்த வண்ணம் சபைக்கு பிரசன்னமாகியிருந்தனர்.
வவுனியா குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு-
வவுனியா குடியிருப்பு குளத்திலிருந்து இன்றுகாலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் செடிகள் நிறைந்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சடலம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.