காணாமற்போனோர் தொடர்பான விசாரணைக்கு விசேட குழு-
யுத்த காலப்பகுதியில் காணமாற்போனோர் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அறிக்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலர் எச்.டபிள்யூ.குணதாச குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்வதற்கான குழுவை நியமிக்க வேண்டும் என சட்ட மாஅதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு அமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமற்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை சட்ட மாஅதிபர் திணைக்களம் பரிசீலனை செய்துவரும் அதேவேளை, இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுவை நியமிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யுத்த காலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் இதுவரை 18,580 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் பதிவாகியுள்ளது என குணதாச கூறியுள்ளார்.
கியூபா உயர்ஸ்தானிகர் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களிடையே சந்திப்பு-
கொழும்பு தனியார் விடுதியொன்றில் கடந்த 25.05.2014 ஞாயிற்;றுக்கிழமை அன்று இலங்கைக்கான கியூபா நாட்டின் உயர்ஸ்தானிகர் டொக்டர் (திருமதி) இந்திரா லோபஸ் அர்குவல்ஸ் மற்றும் இலங்கை கியூபா நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் திரு. நாகேந்திரா ஆகியோரை வட மாகாணசபை உறுப்பினர்களான புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், கலாநிதி க.சர்வேஸ்வரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது கியூபாவுக்கும் இலங்கைத் தமிழ் தரப்புக்களுக்கும் இடையிலான முன்னைய உறவுகள், தொடர்புகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், அடுத்த மாதமளவில் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்து பொதுமக்களைச் சந்தித்து உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ளுமாறு உயர்ஸ்தானிகர் டொக்டர் இந்தியா லோபஸ் அர்குவல்ஸ் மற்றும் திரு நாகேந்திரா ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நவிப்பிள்ளையின் அலுவலகம் இலங்கைமீது தீவிர அவதானம்-
இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் சபை கூறியுள்ளது. கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச சமூகத்தோடும் ஐ.நா. மனித உரிமைகள் சபையோடும் இணைந்து தொடர்ந்தும் இக்கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் 2002முதல் 2009ஆம் ஆண்டுவரையான போரின்போது இழைக்கப்பட்ட பெரும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை மேற்கொள்ளுமாறு இவ்வருட மார்ச் அமர்வில் அமெரிக்கா தீர்மானமொன்றின்மூலம் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு ஆணை வழங்கியுள்ளது. இரு வாரங்களில் நவநீதம்பிள்ளையின் அலுவலகம் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது. பல விடயங்களில் இலங்கை அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பொறுப்புக்கூறல் கடப்பாடு, வடபகுதியில் அதிகளவில் இராணுவக்குவிப்பு, தொடருமட் மனித உரிமை மீறல்கள், மதரீதியான வன்முறைகள், சுயாதீன நீதித்துறைக்கு குந்தகமான நடவடிக்கை ஆகியவற்றை நவநீதம்பிள்ளை அறிக்கையில் முன்வைத்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 2013ஆம் வருட அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட பல அம்சங்கள், 2014 மார்ச் அமர்வுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். எனினும் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர்தர மாணவனை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு-
வவுனியா, கல்மடு பிரதேச பாடசாலையொன்றில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவனொருவரை காணவில்லை என அம்மாணவனின் பெற்றோரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, தரணிக்குளம், சாஸ்திரி கூழாங்குளத்தைச் சேர்ந்த மகாலிங்கம் றஜீவன் என்ற மாணவனே, நேற்றுமுதல் காணாமல் போயுள்ளார். தனது வீட்டிலிருந்து நேற்று அதிகாலை 5மணிக்கு, 10 கிலோ பயிற்றங்காய்களுடன் புறப்பட்டுச் சென்ற அம்மாணவன், அவற்றை வவுனியா நகரப்பகுதியிலுள்ள தினசரி சந்தை வியாபாரியொருவரிடம் கொடுத்துள்ளார். பின்னர், தான் பயணித்த மிதிவண்டியை குறித்த வியாபாரியின் மரக்கறி விற்பனை நிலையத்துக்கு முன்பாக நிறுத்தி விட்டு எதிர்ப்பக்கமாகவுள்ள பாடசாலை உபகரண விற்பனை நிலையத்துக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்ற மாணவன், இதுவரையில் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், குறித்த மாணவனுடைய பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்திலும், தரணிக்குளம் பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
யுத்த நிறைவின் நோக்கம் உலகிற்கு வியாபிக்கப்படவில்லை-இராணுவத் தளபதி-
யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்கான நோக்கம் மற்றும் அதனை செயற்படுத்திய விதம் என்பன உரிய வகையில் உலகிற்கு வியாபிக்கப்படவில்லை என்பதுடன் அதை உரிய வகையில வெளிப்படுத்தவுமில்லை என்பதே உண்மை என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இராணுவவீரர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அடிப்படை ஊடகம் தொடர்பான கற்கை நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில், இராணுவத் தளபதி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அவர் மேலும் கூறுகையில், யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்கான நோக்கத்தை உரிய வகையில வெளிப்படுத்தியிருந்தால் சர்வதேச நாடுகள் முன்னிலையில் இலங்கையை மேற்குலக நாடுகள் இழிவுபடுத்த முயற்சித்திருக்க மாட்டார்கள் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி சுவீகரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்-
இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், இன்றுகாலை, கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. காணி அபகரிப்பினைக் கண்டித்தும் இராணுவத்திடமுள்ள வீடுகள் நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும், இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த வீடுகளில் மீளக்குடியமர உடன் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் சி.பாஸ்கரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இப் போராட்டத்தினை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன், பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கடந்த 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
அரசுக்கெதிரான இணையங்கள் தொடர்பில் புலனாய்வுக்குழு விசாரணை-
அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் இணையத்தளங்கள் தொடர்பில் ஆராய பாதுகாப்பு பிரிவின் புலனாய்வு அதிகாரிகளை கொண்ட தனியான புலனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செய்தி இணையத்தளங்கள் ஊடாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுவதை தடுக்கவும், அதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயும் இந்த புலனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சகல செய்தி இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை பகுப்பாய்வு செய்வது, இணையத்தளங்களின் ஊடகவியலாளர்கள், அவற்றின் உரிமையாளர்கள், அந்த இணையத்தளங்கள் பெறும் தொழிற்துட்ப வசதிகள் தொடர்பாக இந்த புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தவுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட சில இணையத்தளங்கள் பற்றி விசேட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த இணையத்தளங்களுக்கு இணையான பெயருள்ள இணையத்தளங்கள் பற்றியும் விசாரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு துரித தீர்வு வேண்டுமென இந்தியப் பிரதமர் வலியுறுத்தல்-
ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளிட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க துரித வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பில் 77பேர் கைது-
புலிகள் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 6ம் திகதி தொடக்கம் இதுவரையான காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் 47 சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. அதில் 6 பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
நாடுகடத்தப்பட்டோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தல்-
மலேசியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புலிகள் இயக்கத்தின் சந்தேகநபர்கள் என கூறப்பட்டு அண்மையில் மலேசியாவிலிருந்து மூன்று இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர். இவர்கள் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எவ்வாறெனினும், நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் எனவும், துன்புறுத்தப்படக் கூடாது எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. நாடு கடத்தப்பட்டவர்களுள் இருவருக்கு ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அகதி அந்தஸ்து வழங்கியுள்ளதுடன் மற்றையவருக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த தருணத்தில் இவர்கள் கைதாகி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.