இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப தடை-
அரசியல் புகலிடம் கோரியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை நிராகரித்தல் மற்றும் இலங்கைக்கு திரும்பியனுப்புதல் போன்ற செயற்பாடுகளுக்கு சுவிட்ஸர்லாந்தில் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. சுவிட்ஸர்லாந்தில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் உடனடியாக இலங்கைக்கு திரும்பி அனுப்பப்படுவார்கள் என்ற கருத்து தவறானது என சுவிட்ஸர்லாந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோட்காட்டி பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியா போல செயற்பட்டால் உலக பயங்கரவாதத்தை அழித்து விடலாம்-இராணுவப் பேச்சாளர்-
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க மலேசியா போன்று ஏனைய உலக நாடுகளும் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே இந்த உலகத்தில் உள்ள பயங்கரவாதத்தையே இல்லாதொழிக்க முடியும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். மலேசியாவில் செயற்பட்டு வந்த மூன்று புலி உறுப்பினர்களை கைதுசெய்ய துணையாக இருந்த மலேசிய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலேயே இராணுவப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். பயங்கரவாதத்தை ஒழிக்க மலேசியா ஆரம்பத்தில் இருந்தே உதவி செய்து வருகின்றது. குறிப்பாக புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை (கே.பி.) கைதுசெய்ய மலேசியா ஒத்துழைப்பு வழங்கியது. இந்நிலையில் தற்போது மூன்று புலி உறுப்பினர்களையும் கைதுசெய்ய உதவியுள்ளது. இதற்காக நாம் மலேசியாவுக்கு எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் செய்தியாளர்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை-
வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தளம் மற்றும் உயர் இராஜதந்திரிகளின் சந்திப்புகள் குறித்து யாழ் செய்தியாளர்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தால் அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வாசஸ்தளத்தின் இடப்பற்றாக்குறை காரணமாக, செய்தியாளர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக இனிவரும் காலங்களில், முக்கியஸ்த்தர்களின் சந்திப்புகளின் செய்திகளை சேகரிக்க செய்தியாளர்கள் அழைக்கப்படமாட்டார்கள். அத்துடன் நேரடியான செவ்விகளும் வழங்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக சந்திப்புகள் இடம்பெற்ற ஒரு மணித்தியாலத்துக்குள் அந்த சந்திப்பு தொடர்பான அறிக்கை ஒன்று ஊடக நிறுவனங்களுக்கும், ஊடக செய்தியளர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். இதன்போது ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து தாம் வருந்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதம்-
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். வடக்கில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை வெற்றியை பதிவு செய்திருந்தது. அதேபோன்று தமிழகத்தில் 39 ஆசனங்களில் 37 ஆசனங்களை வெற்றிபெற்ற ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியாவின் மூன்றாம் பலமாக மாறியுள்ளமைக்கு இரா. சம்பந்தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினை ஏற்படுத்துவது குறித்து, இந்தியாவின் புதிய பிரதமருக்கு ஏற்கனவே தமிழ் தேசியு கூட்டமைப்பினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை மேற்கோள்காட்டியுள்ள இரா. சம்பந்தன், அரசியல் தீர்வுக்கான இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசின் ஒத்துழைப்பும் மிக அவசியமானது என்றும், இயன்றளவில் விரைவில் தங்களைச் சந்திக்க எதிர்பார்த்திருக்கிறோம். அத்தகைய வாய்ப்பை எமக்கு வழங்குமாறு ஆர்வத்துடன் வேண்டுகிறோம் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நகர சபைக் கூட்டத்தில் நகர சபை உறுப்பினர் சத்தியசீலராஜா இந்தப் பிரேரணையை கொண்டுவந்துள்ளார். மாணவர்களின் நலன்கருதி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மீறும் கல்வி நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களை இரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருமலை நகர சபை அறிவித்துள்ளது.
சுஸ்மா சுவராஜூக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் வரவேற்பு-
நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் கீழ், இந்திய இலங்கை உறவு மேலும் வலுப்பெறும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுஸ்மா ஸ்வராஜிக்கு, அவர் அனுப்பியுள்ள வாழ்த்து மடலில் இதனைத் தெரிவித்துள்ளார். சுஸ்மா ஸ்வராஜின் நியமனம், இலங்கை இந்திய உறவுக்கு புத்துயிரை வழங்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளும் மேலும் விருத்தி அடையும் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்
சார்ஜா கொலை தொடர்பில் இலங்கை பெண்கள்மீது விசாரணை-
சார்ஜாவில் வெளிநாட்டு முகவர் ஒருவரின் மரணம் தொடர்பில் நான்கு இலங்கை பெண்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த நெசனல் போஸ்ட் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த முகவர் சார்ஜாவின் அல் நஹ்டா பகுதியில் உள்ள 22 மாடி கட்டிடம் ஒன்றிலிருந்து வீழ்ந்த நிலையில் கடந்த தினம் ஒன்றில் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடன் தங்கி இருந்த குறித்த நான்கு இலங்கை பெண்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டிடத்தின் முகாமையாளர் மற்றும் பாதுகாவளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டவிசாரணைகளில் குறித்த நான்கு இலங்கை பெண்களும், தொழில் தருணர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கொழும்பு பிரகடனத்தை ஐ.நாவிடம் கையளிக்க நடவடிக்கை-
உலக இளைஞர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ‘கொழும்பு பிரகடனத்தை’ ஐக்கிய நாடுகளின் சபைக்கு எதிர்வரும் வாரம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. தேசிய இளைஞர் சேவை சபையின் தலைவர் லலித் பியூம் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பும் ‘கொழும்பு பிரகடனத்தை’ உத்தியோகபூர்வமாக கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 15வது உலக இளைஞர் மாநாடு இலங்கையில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு முதல்வர் சந்திப்பு-
வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியுடனான சந்திப்பு ஒன்றை நேற்று மேற்கொண்டிருந்தார். ரொபின் மூடி தலைமையிலான அவுஸ்திரேலிய குழு நேற்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது இந்த சந்திப்பு இடம்பெற்றள்ளது. இதன்போது வடக்கின் நிகழ்கால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாண சபையின் சுயாதீன இயக்கம் தொடர்பிலும் அவுஸ்திரேலிய குழு முதலமைச்சரிடம் கேட்டறிந்துகொண்டதாக கூறப்படுகின்றது.
யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை-
யாழ். மாநகர சபையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று அனுஷ்டிக்க முற்பட்டவேளை, மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா அதற்கு தடைவிதித்ததாக கூறப்படுகிறது. யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பித்தவேளை, கூட்டமைப்பு உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போவதாகக்கூறி எழுந்தபோது, அதனை முதல்வர் மறுத்ததுடன், அவ்வாறு அஞ்சலி செலுத்துவதாயின் மறைந்த அல்பிரேட் துரையப்பா (முன்னாய் மாநகர சபை முதல்வர்) முதல் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதன்போது ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.