த.தே.கூவிலிருந்து கௌரிகாந்தன் நீக்கம்.

11(1157)யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பியுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தமை, பிரதேச சபைத் தவிசாளர் பதவி விலகக் காரணமாக இருந்தமை மற்றும் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நடவடிக்கைகளை பிரதேச சபைக்குள் கொண்டு வந்தமை உள்ளிட்ட விடயங்களைக் காரணம் காட்டி கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டே இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவது தொடர்பாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிவஞானம் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பெண் பொலிஸாருக்கு புதிய சீருடை .

untitledபொலிஸ் சேவையில் ஈடபட்டுள்ள பெண்களுக்கென மற்றுமொரு சீருடையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள சீருடைக்கு மேலதிகமாகவே இந்த புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கை பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெண்கள் இதுவரை காலமும் காக்கி நிறத்திலான குட்டைப் பாவாடையும் சேர்ட்டுமே சீருடையாக அணிந்து வருகின்றனர். இந்த புதிய சீருடையும் காக்கி நிறத்திலேயே நிர்மாணிக்கப்படவுள்ளது. பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பெண் பொலிஸ் சிப்பாய்களுக்கு முழுக் காற்சட்டையும் சேர்ட்டும் வழங்கப்படவுள்ளன. அத்துடன், பெண் பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பெண் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு முழுக் காற்சட்டை, சேர்ட் மற்றும் பூட்ஸ் கோட்டும் வழங்கப்படவுள்ளது. அலுவலக வேலைகள் மற்றும் ஏனைய விடயங்களைக் கருத்திற் கொண்டே அவர்களுக்காக இந்த புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் சேவையில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிகளுக்கென்றும் புதிய ஆடையொன்றை அறிமுகப்படுத்த பாதுகாப்பு செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பாரபட்சத்தால் நோயாளிகள் பாதிப்பு.

ulaga sensiluvai thinamமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளிகள் மீது வைத்தியர்கள் பாரபட்சம் காட்டுவதாகவும் இது உயிரிழப்புகள் ஏற்படும் அளவுக்கு சென்றுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தசாலைக்கு வரும் நோயாளிகளிடம் வைத்தியர்கள் பாரபட்சம்  காட்டுவதாகவும் இவர் எனது நோயாளி இல்லை என ஒரு வைத்தியரும் இவர் எனது நோயாளி இல்லை என மற்றைய வைத்தியரும் நோயாளிகளை பார்க்காமல் செல்வதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாதுள்ளதுடன் இந்தப் பாகுபாட்டினால் நோயாளிகள் இறந்தும் உள்ளனர்.
இது குறித்து பொது மக்களிடமிருந்து தனக்குப் பல முறைப்பாட்டுப் கடிதங்கள் வந்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.இப்ராஹிம் லெப்பையிடம் சுட்டிக்காட்டியதுடன் தனது அதிருப்தியையும் தெரிவித்தார் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்;.
இதேவேளை மேலும் பல குறைபாடுகள் இடம்பெறுவதாகவும் அண்மையில் ஒரு நோயாளியின் நோயாளர் அட்டையில் ஒரு மாதம் முந்தி திகதியினை இட்டதால் அந்த நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றம் செய்த போது அவரை கொழும்பு வைத்தியசாலை பாரமேற்க மறுத்துள்ளது. இதனால் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டதாகவும் அரச அதிபர்  தெரிவித்தார்.
வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் ஒரு நோயாளி நான்கு ஐந்து மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டி ஏற்படுவதாகவும் சில நேரம் அவ்வாறு இருந்தும் மருந்து எடுக்காமல் திரும்பிச் செல்லும் நிலை உள்ளதாகவும்.
கண் வைத்திய விடுதியில் இருந்து வயோதிபர் ஒருவர் தவறி வீழ்ந்து இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால் கண் வைத்திய விடுதியை கீழ் பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரங்களுக்காக சிறப்பு பிரதிநிதியை நியமிக்க மோடி முடிவு .

NARENDRAMODIஇலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்கென தனது நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தமது ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களுக்காக மட்டும் ஜி. பார்த்தசாரதியை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல் இலங்கை விவகாரங்களை தமது சார்பில் நேரடியாக கையாளக் கூடிய சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதியானவர் வெளிவிவகார அமைச்சர், அவ்வமைச்சின் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களைக் கொண்டு செயற்படக்கூடியவராக இருப்பார் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைத்தமைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் மோடியை வரும் ஜுன் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்திக்கிறார்.

Modi_JayaPTI_231-3002டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வரும் ஜுன் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்திக்கிறார். அப்போது தமிழகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் மனு அளிக்கிறார். தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசிடம் ஜெயலலிதா வலியுறுத்தவுள்ளார். மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜெயலலிதா அவரை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறினார்.

RCR_file_pic_360-5220பிரதமர் நரேந்திர மோடி இன்று ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறினார்.சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 5 பங்களாக்களை கொண்ட பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் நரேந்திர மோடி தனி நபராக குடியேறும் முதல் பிரதமர் ஆகிறார். இதுவரை இங்கு குடியேறிய 14 பிரதமர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தான் குடியேறினர். வழக்கமாக முன்னாள் பிரதமர் காலிசெய்துவிட்டு போனபின்னர், புதிதாக அங்கு வரும் பிரதமரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே, வீட்டில் பலமாற்றங்களை செய்யுமாறு கூறுவதும் வழக்கம் ஆனால் மோடி அதுபோன்ற எதுவும் செய்யுமாறு கோரவில்லை. புதிதாக பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டதாகவும் அவற்றை சுத்தப்படுத்த மட்டுமே செய்ததாகவும் கூறினார். வழக்கமாக புதிய பிரதமர் குடியேறுவதற்கு முன்னர் அங்கு செய்யப்பட வேண்டிய அலங்கார மற்றும் ஓவியங்கள் குறித்த யோசனைகளை கேட்டு டெல்லி ‘நேஷனல் கேலரி ஆப் மார்டன் ஆர்ட்’ டை சேர்ந்த அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வரும். ஆனால் இந்த முறை தங்களுக்கு அப்படி எதுவும் வேண்டுகோள் கடிதம் வரவில்லை என்கிறார்கள் அவர்கள். மோடியை பொறுத்தவரை அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதும், முதல்வர் இல்லத்தில் அவர் இதேப்போன்ற எளிமையுடன்தான் வசித்தார். காந்திநகரில் மாநில கவர்னர் மாளிகையின் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்திருக்கும் அந்த இல்லத்தில் மோடி வசித்தபோது லிவிங் ரூம் எனப்படும் முன்னறையில் வருபவர்கள் அமர 4 நாற்காலிகளும், அதன் மத்தியில் ஒரு மேஜை மட்டுமே போடப்பட்டிருந்தன. அதே எளிமையைத்தான் மோடி தற்போது பிரதமர் ஆன பின்னரும் பின்பற்றுவதாக மோடிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.