வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதற் தடவையாக விஜயம்.
ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்தார். ஒட்டுசுட்டான் பகுதியில் பாவட்டிமலை பகுதியில் மூன்று இடங்களில் பாரிய அளவில் கருங்கல் தோண்டுதலும், மணல் அகழ்தலும் இடம்பெற்று வருவதனால், இங்கு கற்களை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற வெடிகளினால் ஏற்படும் நில அதிர்வு காரணமாக அயலில் உள்ள கிராமங்களின் வீட்டுச் சுவர்கள் வெடிப்பேற்பட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பு எற்பட்டிருப்பதாகப் பொதுமக்கள் முறையிட்டிருந்தனர்.
முறையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு மாறாக அரசியல் செல்வாக்கின் மூலம் இங்கு காரியங்கள் நடைபெறுவதாக முதலமைச்சருக்கு அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது. ஒட்டுசுட்டான் மற்றும் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையின் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் சகிதம் பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர், மாகாண சபையைக் கொண்டு நடத்துவதில் பல முட்டுக்கட்டைகள் எற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, இருப்பினும் அவர்களின் பிரச்சினைகளுக்கு முடிந்த அளவில் விரைவாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். மீள்குடியேற்றத்திற்கான காணிகள் இல்லாதிருப்பது, பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பது. இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் அடாவடியாக புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டிருப்பது, இந்திய வீட்டுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்காதிருப்பது, விவசாய நடவடிக்கைகளில் எற்பட்டுள்ள பிரச்சினைகள், குடிநீர் இல்லாமை, தமிழர்களுக்குச் சொந்தமான மீன்பிடிக்கும் இடங்களில் பெரும்பான்மை இன மக்கள் நாயாறு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் ஆகிய இடங்களில் ஆக்கிரமித்திருப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் முதலமைச்சரிடம் எடுத்தக் கூறப்பட்டன. கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்துக்கான தமது கடலையும், தமது விவசாய நிலங்களையும் மீளப்பெற்றுத் தருமாறு கண்ணீருடன் கைகூப்பி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கொபி அனான் உல்லாசப் பயண விசாவில் வரலாம் – கெஹலிய ரம்புக்வெல
ஐ.நா. விசாரணைக்குழுவின் தலைவராக முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் நியமிக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல, உல்லாசப் பயண விசாவில் கொபி அனான் இலங்கைக்கு வந்தால் அவருக்கு விசா வழங்கப்படும். விசாரணைக்குழு சார்பாக அவர் வருதாயின் வெளிவிவகார அமைச்சே அதனையிட்டுத் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மேற்கொள்ளவுள்ள விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் உதவப்போவதில்லை எனவும், இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பி;ட்டார். குறிப்பிட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருக்கும் நிலையில், அதனைச் செயற்படுத்துவதற்காக உதவுவது என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் குறிப்பிட்;ட அவர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நியமிக்கப்படும் விசாரணைக்குழு உறுப்பினர்களுக்கு விசா வழங்குவது குறித்து வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் எனவும் தெரிவித்தார்.
தலைமன்னார் கடற்பரப்பில் 29 இந்தியா மீனவர்கள் கைது.
இந்தியா ராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 மீனவர்களும் 6 படகுகளில் கடந்த சனிக்கிழமை இரவு இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தலைமன்னாh கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதோடு குறித்த படகுகளையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். கைதுசெய்யப்பட்ட 29 மீனவர்களும் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்களின் படகுகளில் உள்ள வலைத்தொகுதியினை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர் படுத்தியதோடு குறித்த வலைத்தொகுதிகளையும் மன்றில் ஒப்படைத்தனர். விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த மீனவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,குறித்த மீனவர்களின் படகுகள் மற்றும் வலைத்தொகுதிகளை கடற்படையூடாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தியாவின் புதிய பிரதமர் மோடி இலங்கை அரசியல் ஸ்திரத் தன்மைக்கு ஒரு அச்சுறுத்தல் விமல் வீரவன்ச.
மோடியும் அவரது புதிய அரசாங்கமும் 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதுடன். 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குமாறு இந்தியப் பிரதமர் மோடி கூறியுள்ளார் . இதனால் அதனை அரசாங்கம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியை விட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இவற்றினால் மக்கள் மத்தியில் கிளர்ச்சிகள் ஏற்பட்டு அரசாங்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி இலங்கை தொடர்பில் சாதகமாக செயற்படுவார் எனசிலர் எண்ணுகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்திருந்தால் போருக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்திருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால் அழுத்தங்களை சமாளிக்க முடிந்தது. எவ்வாறாயினும் இலங்கை மக்களே நாட்டுக்கு எது நல்லது என்பதையும் 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பார்கள். இந்தியா உட்பட ஏனைய நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துள்ளன. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அந்த நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தென் ஆபிரிக்கா ஏற்கனவே இலங்கைக்கான சிறப்பு தூதுவர் ஒருவரை நியமித்துள்ளது. இந்தியாவும் இலங்கைக்கான சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவுள்ளது. இந்தியா, தென்னாபிரிக்கா உட்பட ஏனைய நாடுகளை கையாளும் போது உரிய முனைப்புகளுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும் என வீரவன்ஸ கூறியுள்ளார்.
திருகோணமலை மயானமொன்றில் தமிழர்களின் சில கல்லறைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை நகர சபையின் பராமரிப்பிலுள்ள அன்புவழிபுரம் மயானத்திலுள்ள கல்லறைகளில் அடையாளம் காணப்பட்ட தமிழர்களின் ஒரு சில கல்லறைகள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும். சேதமாக்கப்பட்டுள்ள கல்லறைகளில் ஏசிஃவமப் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட பனியாளரொருவருடைய கல்லறையும் அடங்குவதாகவும். யுத்த நிறுத்த காலத்தில், விடுதலைப் புலிகளின் பொங்குதமிழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவராக செயல்பட்டு, பின்னர் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட என். விக்கினேஸ்வரனுடைய கல்லறையும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும். இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் கல்லறைகளில் பொறிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களை அடையாளம் காண முடியாதவாறு அகற்றி சேதப்படுத்தியுள்ளதாகவும். இந்தச் சம்பவத்தின் பின்னனி, தொடர்புடைய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழை வெள்ளப்பெருக்கு
கொழும்பு மற்றும் அதை அண்மித்த தெற்கு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல பேர் உயிரிழந்துள்ளனர் பாதிப்புகள் கூடுதலாக உள்ளன
தலைநகர் கொழும்பில் பல வீதிகள் மற்றும் அருகாமையிலுள்ள சிறு நகரங்களின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. களுத்துறை மாவட்டமே திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 10 செ மீ க்கும் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும் வானிலை முன்னறிவிப்புத் துறை கூறுகிறது. உயிரிழந்தவர்களைத் தவிர இருவரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள். இலங்கையின் தென்பகுதிக் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.