யாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக விமானம் ஒப்படைப்பு-

yaalil kandedukkappattaயாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக விமானம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் மேற்கூரையில் இருந்து நேற்றுமாலை சிறிய ரக மர்ம விமானம் ஒன்று காணப்பட்டது. அதனை அடுத்து விடுதி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விமானத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க கூறுகையில், நேற்று மீட்கப்பட்ட சிறியரக விமானம் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் விளம்பரப்படுத்தளுக்காக பயன்படுத்தப்பட்ட விமானமாகும். இந்த நிறுவனம் மொனராகலை, தம்புள்ளை, குருநாகல் ஆகிய பிரதேசங்களிலும் இந்த சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதேபோல யாழிலும் அவர்கள் விளம்பர நடவடிக்கையை மேற்கொள்ளும்போதே அதற்குரிய பற்றரி சார்ஜ் போதியதாக இல்லாமல் விடுதியின் மேல் விழுந்துள்ளது அந்த விமானம் 100 மீற்றர் தூரத்திற்கு பறக்க கூடியது. இந்த விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியினையும் அவர்கள் பெற்றிருக்கின்றனர். அதற்குரிய அனுமதிக் கடிதங்களை எமக்கு காட்டியதுடன் குறித்த விமானத்தின் அடையாளத்தையும் எமக்கு கூறியதை அடுத்து அந்த சிறிய ரக விமானத்தை உரியவர்களிடம் கையளித்தோம் என்றார். குறித்த விமானம் வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அது திடீரென செயலிழந்து விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

யாழ். நூலகம் எரிக்கப்பட்ட 33ஆம் ஆண்டு நினைவு தினம்-

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 33ஆம் ஆண்டு நினைவுநாள் (01.06.2014) நேற்று முன்தினமாகும். 1981ம் ஆண்டு ஜூன் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார். தென்னாசியாவிலேயே மிகப் பெரியதும், தொண்ணூற்றி எட்டாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களையும், தேடற்கரிய கையெழுத்துப் பிரதிகளையும் உடையதுமான யாழ். பொதுநூலகம் மனிதகுலத்திற்கே விரோதமான ஒரு குற்றச்செயலாகவும், பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 1996ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். நூலகத்தை மறுநிர்மாணம் செய்யும்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழ் அரசியல் பிரமுகர்களும் இப்பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர். தற்போது யாழ்.நூலகம் மீண்டும் புனரமைக்கப்பட்ட நிலையில் காணக் கிடைக்கின்றது. அதனை மறுநிர்மாணம் செய்வதற்கு அயராது பாடுபட்டவர்கள் அனைவரும் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

ஆற்றுக்குள் பயணிகளுடன் பாய்ந்த பஸ்-

அம்பாறை மாவட்டம் கல்முனை நகரிலிருந்து 48 பயணிகளுடன் சவளக்கடை ஊடாக 11ம் கொளனி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்றுகாலை தனது கட்டுப்பாட்டை இழந்து கிட்டங்கி ஆற்றுக்குள் குறித்த பஸ் வீழ்ந்துள்ளது. எனினும் பயணிகள் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளனர். காலை 7.15க்கு கல்முனை நகரில் இருந்து நாவிதன்வெளி பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களின் நலன்கருதியே இவ் பஸ் சேவை இடம்பெறுகிறது. இது ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றியபடி கிட்டங்கி வீதியால் பயணித்துக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை மீறி ஆற்றுக்குள் பாய்ந்ததுடன் சாரதியின் சாமத்தியத்தால் பஸ் குடைசாயாது பாரிய விபத்தில் இருந்து தப்பியுள்ளது. சவளக்கடைப் பொலிசார் இதுபற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் 23 பேர் உயிரிழப்பு, 27ஆயிரம் பேர் பாதிப்பு-

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை 6 மாவட்டங்களில் 23 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொழும்பு மற்றும் இரத்தினபுரியில் மூவர் பலியாகியுள்ளதோடு, காலி, மாத்தளை மற்றும் குருநாகலில் தலா ஒரு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை தாக்கத்தினால் இதுவரையில் 27 ஆயிரத்து 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அவர் இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில் போக்குவரத்து தாமதம்-

வடக்கு மற்றும் பிரதான ரயில் பாதைகளூடான ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. வேள்ளநிலை காரணமாக ரயில்கள் குறிப்பிட்ட ஒரு பாதையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும் கூறப்பட்டுள்ளது. மீரிகம, கனேகொட, பலேவெல ஆகிய பகுதிகளில் தண்டவாளத்திற்கு மேலாக வெள்ள நீர் செல்வதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது

குவைத் பிரதி சபாநாயகர் உள்ளிட்ட குழு இலங்கைக்கு விஜயம்-

குவைத் நாட்டின் பிரதி சாபாநாயகர் முபாரக் அல் குரய்னிஸ் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இலங்கையின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் அழைப்பின் பேரில் நேற்று இவர்கள் இலங்கைக்கு வந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை வரை நாட்டில் தங்கியிருக்கும் இவர்கள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்பீரிஸ், அமைச்சர் டிரான் பெரேரா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது,

மோடியின் புதிய அமைச்சரவை அமைச்சர் விபத்தில் பலி-

இந்திய மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே, வாகன வபத்தில் உயிரிழந்துள்ளார். கோபிநாத்தின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ‘எனது நண்பர் கோபிநாத் முண்டேவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மறைவு மத்திய அரசுக்கும், நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு’ என்று பிரதமர் மோடி, தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

காணி அபகரிப்புக்கு எதிராக விரைவில் வழக்கு தொடரப்படும் : சிவாஜிலிங்கம்-

பொதுமக்களுடன் கலந்துரையாடி விரைவில் காணி அபகரிப்புக்கு எதிராக நீதி மன்றில் வழக்கு தொடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று திக்கம் பகுதியில் காணி அபகரிப்புக்கு எதிராக இடம்பெறவிருந்த போராட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சிலர் வழக்கு தொடர முன்வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.