இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லியில் சந்தித்து 50 நிமிடங்கள் பேசினார். அப்போது, தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சி திட்டங்கள், மீனவர் பிரச்னை, சிறப்பு நிதி, கல்வி திட்டங்களுக்கான நிதி, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்களை விவாதித்துள்ளார். பின்னர், மனு ஒன்றையும் பிரதமரிடம் அளித்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜவும், அதிமுகவும் தனித்து போட்டியிட்டன. இந்த தேர்தலில், பாஜ தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சியை அமைத்தது. மோடி யின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்றதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த விழாவிற்கு ஜெயலலிதா செல்லவில்லை. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை டெல்லி சென்றார். முதலில், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, அவரது மாளிகையில் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதா சந்தித்தார்.
பின்னர்ஊடக நிருபர்களுடனான சந்திப்பின் போது.
பாஜ அணியில் நீங்கள் சேருவீர்களா? அப்படி ஒரு பேச்சு நடைபெறவில்லை, அப்படி ஒரு தேவை ஏற்படவில்லை. பாஜ அணிக்கு அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பீர்களா? குறிப்பாக மாநிலங்கள் அவையில் ஆதரவு தருவீர்களா? பாஜ அரசு தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது. எனவே அவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டிய தேவை இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அதைப்பற்றி யோசிப்போம்.