மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது-அமைச்சர் பீரிஸ்-
இலங்கையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர், அவர் பதவியேற்ற அடுத்தநாள் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளின் போது இது தெரிவிக்கப்பட்டது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதில்லை என்பதில் இலங்கை அரசு உறுதியான கொள்கையைக் கொண்டிருக்கிறது என்று இந்தியத் தரப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இனத்துவ காரணங்களோ அல்லது வடகிழக்குப் பகுதி தொடர்பாக அரசு கொண்டுள்ள கொள்கைகளோ காரணங்கள் இல்லை என்பதையும் எமது தரப்பு இந்தியாவிற்கு கூறியுள்ளது அரசியல் பிரச்சினைக்கான தீர்வு பாராளுமன்றத் தேர்வுக் குழுவின் மூலமே ஏற்பட முடியும் என்பதையும் இலங்கைத் தரப்பு மீண்டும் இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது. என்றார் அவர்.
காணாமல் போனோரின் உறவினர்கள் முல்லைத்தீவில் போராட்டம்-
காணாமல் போனோரைக் கண்டுபிடித்து தருமாறு கோரி அவர்களது உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடைபெற்றது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 9 மணிமுதல் 11 மணிவரை இடம்பெற்றது. காணாமல் போனோரின் உறவினர்கள் பலரும் இந்தக் கவனயீர்ப்புப் ரோட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ‘காணாமல்போனோர் வழக்கின் தீர்ப்பு விரைவுபடுத்தப்பட வேண்டும்’, ‘இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே’ போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட வட மாகாணசபை உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்நிரன் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
132 பேர் மாத்திரமே புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியுள்ளனர்-ஆணையாளர்-
132 முன்னாள் புலி உறுப்பினர்களே தற்போது புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற போது, 12000 முன்னாள் புலி உறுப்பினர்கள் சரணடைந்தும், கைதுசெய்யப்பட்டும் இருந்ததாகவும், அவர்களில் தற்போது 132பேர் தற்போது வவுனியா முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் புனவர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர்ஜெனரல் ஜெகத் விஜேதிலக்க குறிப்பிட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புனர்வாழ்வளிக்கப்பட்ட குழுவினர் சமூகத்தில் இணைக்கப்பட்டனர். அடுத்த குழு ஜீன் மாதம் விடுவிக்கப்படலாம். மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட, 230பேர் உயர் கல்வியைத் தொடர தகுதி பெற்றுள்ளனர். பல்கலைக்கழகங்களில் 35பேர் உயர்கல்வியை தொடர்கின்றனர் என்றார் அவர்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்-
நாட்டில் காணப்படுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக ஒருலட்த்து 73 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள், அந்தந்த மாவட்ட செயலகங்களின் ஊடாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேதமடைந்த வீடுகளுக்காகவும் நட்ட ஈடு வழங்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் நட்ட ஈட்டை பெறும் மக்கள் உண்மையான தகவல்களை வழங்காமையினால், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும், மாவட்ட செயலகங்களும் சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாகவும், எனவே அதிகாரிகளுக்கு உண்மையான தகவல்களை வழங்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை இன்றையதினமும் நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
தமிழில் கடிதம் அனுப்பும் உரிமை உண்டு – வடமாகாண சபை
16ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் வடக்கு மாகாண சபையின் நிர்வாக மொழியான தமிழ் மொழியிலேயே கடிதம் அனுப்பும் உரிமை தமக்கு இருப்பதாக வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையால் தமிழ் மொழிமூலம் தமக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம், அரசாங்கத்தின் மும்மொழி கொள்கை மீறப்பட்டிருப்பதாக ஜாதிக் ஹெல உறுமய கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த கட்சியின் தேசிய இணைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க இதனைத் கூறியிருந்தார். இலங்கை மும்மொழிக் கொள்கை அமுலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு தமிழ் மொழியில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது, இந்த கொள்கையை மீறும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் ஊடகத்திற்குத் கருத்துத் தெரிவிக்கும்போதே வட மாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
நாடுகடத்தப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-
அண்மையில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மலேசியாவில் இருந்த மூன்று பேர் நாடுகடத்தப்பட்டமைக்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மலேசிய காவற்துறை தலைமையகத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில் இரண்டு பேர் ஐக்கிய நாடுகளின் அகதி அந்தஸ்த்து பெற்றவர்கள் என்றும், ஏனைய ஒருவர் அகதி அந்தஸ்த்துக்கு விண்ணப்பத்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் குறித்த மூன்று பேரும் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பினை கொண்டவர்கள் என்று மலேசிய காவற்துறையினரும், இலங்கை இராணுவமும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் தொல்பொருள் சின்னங்கள் கண்டுபிடிப்பு-
கிளிநொச்சி மாவட்டத்தில் அனுராதபுர யுகத்திற்கு சொந்தமான தொல்பொருள் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வாளர் கல்ப அசங்கவின் தலைமையில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இந்த தொல்பொருள் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி செனரத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி, கரைச்சி, சிவநகர், உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் இந்த சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அனுராதபுர யுகத்தைச் சேர்ந்த கட்டட சிதைவுகளும் இப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இது தவிர, கிளிநொச்சியின் மேலும் சில பகுதிகளிலும் அனுராதபுர யுகத்தின் கட்டட சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த வருட நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தொல்பொருள் சின்னங்கள் சில கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி தொல்பொருள் பெறுமதி வாய்ந்தது என வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டது என கலாநிதி செனரத் திஸாநாயக்க கூறியுள்ளார்.