தமிழக முதல்வருக்கு அமைச்சர் கெஹெலிய கண்டனம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இலங்கையின் இனப்படுகொலை என்ற வார்த்தையை பிரயோகித்தமைக்கு, இலங்கையரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்த ஜெயலலிதா ஜெயராம், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது, இனப்படுகொலை புரிந்த இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையில் பிரேரணை ஒன்றை இந்தியா கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். எனினும் ஜனநாயக நாடுகளுக்கு இடையில் இவ்வாறு இனப்படுகொலை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றமை முற்றிலும் தவறானது. அத்துடன் இந்தியாவில் தனிப் பெரும்பான்மையை மத்திய அரசாங்கம் அடைந்துள்ளமை இலங்கைக்கு நன்மையை தரும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். —மேலும் செய்திகள்———-
புனர்வாழ்வு பெற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பு-
புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 40 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்க சிங்கப்பூர் முன்வந்துள்ளது. புனர்வாழ்வு பணியகத்தின் ஆணையாளர் நாயகம் மேஜர்ஜெனரல் ஜகத் விஜேதிலக்க இதனை கூறியுள்ளார். இந்;நிலையில், முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் தற்போது புனர்வாழ்வைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இறுதி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சுமார் 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வை பெற்றுள்ளனர் என்றார் அவர்.
இலங்கை அகதிகளுக்கு மனவள ஆலோசனை-
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு மனவள ஆலோசனை வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இதனைத் தெரிவித்துள்ளார். அங்குள்ள அகதிகள் மத்தியில் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைமைகள் அதிகரித்துள்ளன. இலங்கை அகதிகள் நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இருப்பதால் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள தூண்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அவர்களுக்கு மனவள ஆலோசனைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவர முடியும்- அமைச்சர் கெஹெலிய-
பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஒருசில அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார். இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை கடந்த தேர்தலில் நாம் நிரூபித்தோம். தற்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கான இயலுமை உள்ளது. இதிலுளள அனைத்து அதிகாரங்களையும வழங்குவதற்கான இயலுமை உள்ளது. ஆகையால்தான் இப் பிரச்சினை உண்மையிலேயே எழுந்துள்ளது. அரசியலமைப்பு திருத்தம் கல்வெட்டு போன்றது அல்ல. தேவையான அளவு திருத்தங்களைக் கொண்டுவர முடியும். இறுதியில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். பொலிஸ் அதிகாரத்தை வழங்குதல் என்பது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினையாக அமையலாம் என்பதை நாம் உறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளோம். அத்தோடு பொலிஸ் அதிகாரத்தில் ஏதேனும் ஒருபகுதியை ஏதேனும் ஒரு மட்டத்தில் வழங்க முடியுமா? என்பதை தற்போதைய அரசாஙகம் ஆராய்ந்து வருகின்றது என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு-
அரசியலமைப்புக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாகாண சபைகளும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமும், மாகாண அரசின் ஜனநாயக ஆய்வும் என்னும் தொனிப்பொருளிலான இரண்டு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இன்று முதல் நடைபெற்று வருகின்றது. வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இக்கருத்தரங்கில், இலங்கை அதிகாரப் பரவலாக்க சட்ட வரைபு கவுன்சிலின் தலைவர் ஜெயம்பதி விக்ரமரட்ண கருத்துரைகளை வழங்கினார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், வடமாகாண சபை உறுப்பினர்களும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.
சம்பூர் மக்கள் வள்ளிக்கேணியில் மீள்குடியேற்றம்-
திருகோணமலை மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து கடந்த 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ள 162 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வள்ளிக்கேணியில் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். தங்களது பூர்வீகக் கிராமமான சம்பூரை விடுத்து, வள்ளிக்ணேயில் குடியேற அம்மக்கள் விருப்பம் தெரிவித்ததாக மூதூர் பிரதேச செயலாளர் நடராசா பிரதீபன் தெரிவித்துள்ளார். சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த 825 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில் உள்ளனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதி, அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடம்பெயர்ந்தவர்களை பல சந்தர்ப்பங்களில் மீளக்குடியமரத்த முனைந்த போதும் அம்முயற்சி கைகூடயிருக்கவில்லை. இம்மக்கள் தற்போது, வேறு இடங்களில் மீளக்குடியமர விரும்புகின்றார்கள். இந்நிலையில், அவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு பொருத்தமான மாற்று இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று பிரதேச செயலாளர் கூறினார். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளக்கந்தை, வீரமாநகர் வடக்கு. வேம்படித்தோட்டம், குறவன்வெட்டுவான், தங்கபுரம், சீதனவெளி ஆகிய இடங்கள் மீள்குடியேற்றத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. சீதனவெளியில் ஏற்கனவே 84 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.