ஐ.நா. புதிய மனித உரிமை ஆணையாளர் தெரிவு-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் புதிய ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் முன்மொழிந்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, அல் ஹூசைன் புதிய ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜோர்தான் நாட்டுக்கான ஐ.நா.வின் நிரந்தர தூதராக செயற்படும் 50வயதான அல் ஹூசைன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டம் பெற்றவர்.

யாழில் வீட்டு சமையல் அறையினுள் பதுங்கு குழி கண்டுபிடிப்பு-

யாழ். பருத்தித்துறை பகுதி விநாயகர் முதலியார் வீதியில் உள்ள வீடொன்றின் சமயலறையின் புகைக்கூட்டின் கீழ் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு நேற்றுமாலை கிடைத்த தகவலை அடுத்து பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து குறித்த வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போது 8அடி ஆழம் 6 அடி அகலமும் கொண்ட பதுங்குகுழியினை கண்டுபிடித்துள்ளனர். குறித்த வீடானது கடந்த 95ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் பயன்பாட்டில் இருந்த காரணத்தினால் இந்த பதுங்கு குழி புலிகளால் அமைக்கப்பட்டிருக்கலாம் என படையினர் கூறியுள்ளனர். இந்த வீட்டில் தற்போது குடியிருப்பவர்கள் வாடகைக் இருப்பவர்கள் எனவும் வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதிவுகள் இன்றி நாடற்றவர்களாக 17000 இலங்கை அகதிகள்-

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வாழ்கின்ற 17ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கை சிறார்கள் நாடற்றவர்களாக இருப்பதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. அகதி முகாம்களில் பிறந்த இவ்வாறான சிறார்களுக்கு இதுவரையில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவோ, அல்லது இலங்கையின் குடியுரிமை பெறுவதற்கான பதவிவுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. ஈழ அதிகளின் புனர்வாழ்வு மையத்தின் நிறுவனர் எஸ்.சீ.சந்திரஹாசன் இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம் தமிழக முகாம்களில் நடமாடும் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அகதிகளின் பதிவுகளுக்கான விண்ணப்பங்களை சேகரிக்க முடியாதிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான விசேட அறிக்கை-

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான விசேட அறிக்கை ஒன்று எதிர்வரும் 12ம் திகதி 26வது ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி ஆரம்பமாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 26வது அமர்வில்போது, இந்த அறிக்கை குறித்த விசேட விவாதம் ஒன்றும் இடம்பெறவுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நாவின் இடம்பெயர்ந்தோருக்கான உரிமைகள் குறித்த விசேட அறிக்கையாளர் சலாகா பெயானி இந்த அறிக்கையை தயாரித்துள்ளார். இதில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற காணி சுவீகரிப்பு, மீள்குடியேற்ற தாமதம் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமற்போனார் தொடர்பில் இன்றும் சாட்சியப் பதிவு-

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகள் 2ஆம் நாளாகவும் இன்று நடைபெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ஆம் கட்ட சாட்சி விசாரணைகள் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நேற்று ஆரம்பமாகியிருந்தன. இந்த அமர்வுகள் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2ஆம் நாளாக இன்றும் நடைபெற்றன. ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக நேற்று 59பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், 49 பேர் மாத்திரமே சமூகமளித்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவிக்கின்றார். இதுதவிர புதிதாக மேலும் 16 பேரின் முறைபாடுகள் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆணைக்குழுவின் அமர்வுகள் நாளையும், நாளை மறுதினமும் மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொடிகாமத்தில் ஆயுதங்கள் மீட்பு

யாழ். கொடிகாமம் பகுதியில் நேற்றுமாலை ஏ.கே47 ரக துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த துப்பாக்கிகள் கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை வீட்டிலிருந்த 22வயதான இளைஞர் கொடிகாமம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது-

இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு கிழக்கே 120 கடல் மைல்கள் தொலைவில் இரண்டு படகுகளுடன் இலங்கை மீனவர்கள் நேற்றுமாலை கைது செய்யப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர்கள் பிடித்திருந்த 750 கிலோகிராம் மீன்களும் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 இலங்கை மீனவர்களையம் தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 73 இலங்கை மீனவர்கள் ஏற்கனவே தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுக்ரெயினில் இலங்கையர்களுக்கு இந்தியா பாதுகாப்பு-

யுக்ரெயினின் கிழக்கு பிராந்தியத்தியயத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து நான்கு இலங்கை மாணவர்கள் இந்திய அதிகாரிகளால் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையீட் அக்பர்தீன் இதனைத் தெரிவித்துள்ளார். யுக்ரெயினின் கிழக்கு நகரான லகான்ஸ்கில் கடுமையான மோதல்கள் இடம்பெறும் நிலையில், அங்கிருந்த 1000க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கீவ் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் குறித்த இலங்கை மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு முகாம் இலங்கை அகதிகள் இடமாற்றம்-

தமிழ் நாட்டின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 இலங்கை அகதிகள் புதிதாக திறக்கப்பட்ட செய்யாறு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் ஏ.ஞானசேகரன் இதனைத் த ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த பங்களாதேஸ், நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளும் இந்த புதிய முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.