தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான அதிகாரப்பரவலாக்கலை வலியுறுத்த வேண்டும்-புளொட் தலைவர் சித்தார்த்தன்-
இந்தியாவின பிரதமர் நரேந்திரமோடிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமிடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பிலேயே தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் மற்றும் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளமையினை நாம் நல்லதொரு தொடக்கமாகவே கருதவேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இதேவேளை, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாற்சென்று 13 பிளஸ் என்ற விடயத்தில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப் பரவலாக்கல் மற்றும் இருநாட்டு மீனவர் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும் உள்ளடக்கிய தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வீரகேசரி வார இதழுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தன்னுடைய பதவியேற்பு நிகழ்விற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அழைத்து அவருடன் உரையாடுகையில் எங்களுடைய தமிழ் மக்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடியுள்ளமை ஒரு நல்ல சமிக்ஞையைக் காட்டுகின்றது.
இந்த வகையில் 13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பொழுது நாங்கள் அனைவருமே அச்சட்டத்தினை எதிர்த்திருந்தோம். ஆனால் தற்பொழுது 13ஆவது திருத்தச் சட்டத்துடன் பிளஸ் என்ற பதம் சேர்க்கப்பட்டு அச்சட்டத்தில் மேலதிகமான அதிகாரங்களை சிறுபான்மை இனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளதாகப் பேசப்படுகின்றது.
இந்த இடத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தில் தமிழ் மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, எமது மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களை சேர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இதேபோல் எமது மக்களினுடைய அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அபிவிருத்திக்குமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான மாகாண சபைகளின் பங்களிப்பு தொடர்பாகவும் ஆராய்ந்து செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்பொழுது இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகளால் எமது மீனவர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த விடயம் தொடர்பாகவும் அதிக முக்கியத்துவம் எடுக்கவேண்டும. இம்மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பும் எமக்குண்டு.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அ.தி.மு.க கட்சி கடந்த தேர்தலில் 37 ஆசனங்களைப் பெற்று தமிழகத்தில் தனிப்பெருங்கட்சியாகவும் இந்தியாவில் 3ஆவது பெருங்கட்சியாகவும் விளங்குகின்றது.
இந்த வகையில் மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் நரேந்திரமோடியின் கட்சியான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்திருந்தாலும், தமிழக முதல்வரின் கருத்துக்களையும் மத்திய அரசாங்கம் உள்வாங்கிக் கொள்ளும். இதனால் அண்மைக்காலமாக முதலமைச்சர் ஜெயலலிதா எமது தமிழ் மக்களின் விடயத்தில் கரிசனை கொண்டு செயற்பட்டு வருகின்றவர் என்ற அடிப்படையில் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்பலாம்.
இந்தியாவின் புதிய அரசாங்கம் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்குடன் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனும் நட்புரீதியான உறவினைப் பேணிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் தீர்க்க முற்படுவார்கள் என்பது எதிர்பார்ப்ப்பாகவுள்ளது.
எனவே, நாங்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது அச்சட்டத்துடன் மேலதிகமாகவும் சில அதிகாரங்களை பெற்றுக்கொண்டு தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் தீர்வினை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
இந்த வகையில் தமிழ் மக்களும், ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்த வேண்டும் என்பதே எம்முடைய கருத்தாகும் என்றார்.