ரெலோவை சேர்ந்த எவராவது கொலைகள் -ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டவர்களென நீரூபிக்கப்பட்டால் நடவடிக்கை:

teloதமிழீழ விடுதலை இயக்கத்தினை சேர்ந்த எவராவது கடந்த காலங்களில் கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டவர்களென விசாரணைகளில் உறுதிப் படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் நாம் அதனை ஆட்சேபிக்கப் போவதில்லையென அக்கட்சியின் பிரமுகரான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
எனினும் கடந்த காலங்களில் எமது அமைப்பிலிருந்து விலகிய சிலர் வெள்வேறு தரப்புக்களால் இயக்கப்பட்டனர். அவர்களே அத்தகைய குற்றசெயல்களில் ஈடுபட்டதாக தாம் நம்புவதாகவும், யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் சிவாஜிலிங்கம் அங்கு தெரிவித்தார்.
எனினும் தற்போது மாகாணசபை உறுப்பினராகவுள்ள ஜனா கருணாகரன் மற்றும் பிரசன்னா ஆகியோர் தொடர்பிலும் குற்றஞ்சாட்டப்படுகின்றதே என பதில் கேள்வி எழுப்பப்பட்ட போது அத்தகைய குற்றச்சாட்டுக்கள் சிலரால் ஊக்குவிக்கப்பட்டே முன்வைக்கப்படுவதாக தெரிவித்த அவர் அவை விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் தாம் அதனை ஆட்சேபிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.
இதனிடையே தங்கள் கட்சிக்கு எதிராக மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு கடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்றது. அதில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவுக்கு எதிராகவும் மக்கள் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய ரெலோ அமைப்பினர் தமது பிள்ளைகளைக் கடத்திச் சுட்டுக் கொன்றது என்று 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.