இலங்கை குறித்த விசாரணையை பாதுகாப்பு சபை வரை கொண்டுசெல்ல நடவடிக்கை-

இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை வரையில் கொண்டு செல்லும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இருப்பதாக அதன் பேச்சாளர் ரொபர்ட் கொல்வின் ஊடகச் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். 12 பேர் கொண்ட மனித உரிமைகள் ஆணைக்கழுவின் நிபுணர்கள் குழு இலங்கை தொடர்பான விசாரணையை நடத்தி, அதன் இறுதி அறிக்கையை அடுத்த வருடம் மார்ச் மாதம் மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த இறுதி அறிக்கையை ஆராயும் மனித உரிமைகள் பேரவை, அதனை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கும் என்று ரொபர்ட் கொல்வின் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிக்கின்றன-பிரித்தானியா-

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்ந்தும் கவலை தருவதாக அமைந்திருப்பதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் சிரேஷ்ட அமைச்சர் பரோனேஸ் வர்சி இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு மாகாணத்தில் மனித உரிமை நிலவரங்கள் அதிக கவலைதருவனவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கையை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நாடாக கொண்டு வருவதற்கு, சர்வதேச சமூகத்துடன் பிரித்தானியா இணைந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஜனாதிபதி ஐ.நா பொதுச்செயலர் சந்திப்பு-

பொலிவியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜி- 77 அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்திதது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜி- 77 அரச தலைவர்கள் மாநாடு இலங்கை நேரப்படி நேற்றுமாலை 6.45க்கு ஆரம்பமானது. இந்த மாநாட்டிற்கு முன்னரே இருவருக்கும் இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இராணுவம்போல் செயற்பட வேண்டும்-ரணில்-

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இராணுவத்தை போன்று செயற்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அண்மையில் இரண்டாம் உலக யுத்தம் தொடர்பில் இராணுவத் தளபதி ஒருவர் எழுதிய நுலை வாசித்தேன் அதில் உள்ள விடயங்களை ஐ.தே.கட்சியின் தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்த முடியும். போரின் வெற்றியில் போர்ப்படை தளபதிகளோ, ஏனைய தலைவர்களே தாக்கம் செலுத்துவதில்லை. போரில் ஈடுபட்டிருந்த முன்னரங்கு போராளிகளின் குழுக்களும், அவற்றின் தலைவர்களுமே போர் வெற்றியில் முக்கிய பங்களிப்பை செய்கின்றனர். இதன்படி எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு, கிராம ரீதியாகவும், நகர ரீதியாவும் குழுக்களையும், தலைவர்களையும் நியமித்து வெற்றியை நோக்கி இராணுவத்தை போல முன்னேற வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வீ.ஆனந்தசங்கரி பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவிப்பு-

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி அவர்கள் பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது  81 ஆவது பிறந்த நாளான இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.  எதிர்காலத்தில் நடக்க இருக்கும் எந்தவொரு தேர்தலிலும்  போட்டியிடப் போவதில்லை எனவும் தமது எதிர்காலத் திட்டம் தொடர்பில் விரைவில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் வி.ஆனந்தசங்கரி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரியில் தேர்தல் நடத்தவே முடியாது-அனுரகுமார திஸாநாயக்க-

18ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடத்த முடியாது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். அரசமைப்பின் அடிப்படையில் 2ஆம் தவணைக் காலத்தில் மட்டுமே, பதவிப் பிரமாணம் செய்து கொண்டு 4 ஆண்டுகளின் பின் தேர்தலுக்கு அழைப்புவிடுக்க முடியும். எனினும், 18ஆம் திருத்தச் சட்டத்தில் மூன்றாம் தவணைக்காக எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலுக்குஅழைப்பு விடுப்பது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. 18ஆம் திருத்தச் சட்டத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்ததாக கருத முடியாது. மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கவில்லை. எதிர்க்கட்சியிலிருந்து தாவியவர்களை உள்ளடக்கியே அரசின் மூன்றில் இரண்டு பலம் காணப்படுகின்றது. அதனை மக்களின் ஆணையாகக் கருதிவிட முடியாது. 18ஆம் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான கால வரையறைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான ஒரு நிலைமையில் ஜனாதிபதியால் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

தலிபான்களின் தளமாக இலங்கை, இண்டர்போல் எச்சரிக்கை

இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு சர்வதேச பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு  நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர். தற்போது தலிபான் இயக்கம் மத்தியகிழக்கு நாடுகளில் பரவி வருவதுடன் தீவிரவாத செயல்பாடுகளை மேற்கொள்ள இலங்கையை தலிபான்கள் ஒரு தளமாக பயன்படுத்தி வருகின்றனர். போலி ஆவணங்களை பயன்படுத்தி தலிபான் தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி வருவதுடன், கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதம் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி என கூறப்படும் மொஹமட் ஷாகீர் உஷைன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருந்தார்.