முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் தலையீடு செய்வதாக உறுதி-

a(744)களுத்துறை மாவட்டம் அளுத்கம உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளனர். கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று இரவு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் அவசரமாக சந்தித்து கலந்துரையாடியபோதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இந்த சந்திப்பில் ஈரான், கட்டார், ஆப்கானிஸ்தான், குவைத், பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டிருந்தனர். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கட்சியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அமைச்சர் ஹக்கீம் குறித்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கு அளுத்கம சம்பவம் தொடர்பில் மிகவும் ஆழமாக விளக்கிக் கூறியதுடன் அதன் பின்னணிகள் குறித்தும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகள் பற்றியும் எடுத்துரைத்தார். இவற்றை அவதானமாக கேட்டறிந்த தூதுவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களின் இக்கட்டான நிலைமை குறித்து தமது நாடுகள் கவலை கொண்டிருப்பதாகவும் அவர்களின் உயிர், உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகவும் பொறுப்புணர்வுடன் முயற்சிகளில் ஈடுபட தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்-தமிழ் தேசியக் கூட்டமைப்பு-

1719856666tna3அளுத்கமை தர்ஹாநகரிலும் பேருவளையிலும் முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்டவை, முற்கூட்டியே திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகவே தோன்றுகின்றன. எனவே, அந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் இத்தகைய சம்பவங்கள் திரும்பவும் இடம்பெறாமல் இருக்கின்றமையை உறுதிப்படுத்துவதற்கு பொருத்தமான பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. அளுத்கமை தர்ஹாநகரிலும் பேருவளையிலும் இடம்பெற்ற சம்பவங்கள் மிகுந்த கவலையைக்குரியவை. மனதை சஞ்சலத்துக்கு உட்படுத்துபவை. முஸ்லிம் சமூகத்தின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதல்களுக்கு இலக்காகி பலத்த சேதமடைந்திருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுள் மூவர் உயிரிழந்துள்ளனர். பெரும்பான்மை இனத்தவர்களின் தீவிரப் போக்குடைய இரு இயக்கங்கள் கூட்டம் நடத்திவிட்டு வீதிவழியாக ஊர்வலம் போன சமயம் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன என்று கூறப்படுகின்றது. இச் சம்பவம் முன்னரே திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தோன்றுகின்றது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்த போதிலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாயினும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் அவர்களால் தடுக்க முடியவில்லை. இது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் விழிப்பில்லாத நிலையில் இருந்துள்ளனர் என்பதையே காட்டுகின்றது. கடந்த காலத்திலும் முழு நாட்டுக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. தவறிழைத்தவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் இத்தகைய சம்பவங்கள் மீள இடம்பெறாமல் இருக்கின்றமையை உறுதிப்படுத்துவதற்காக வேறு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

பொதுபல சேனாவை தடை செய்யக் கோரி காத்தான்குடியில் பேரணி-

kaathaanku_protast_008அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொதுபல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா என்பன இணைந்து இன்று காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணியை அமைதியான முறையில் நடத்தியது. இக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர் பொதுபல சேனாவை உடனடியாக தடை செய், சிறுபான்மை மக்களை பாதுகாப்பது மஹிந்த சிந்தனையல்லவா? இனவாதிகளை இனம் கண்டு சட்டத்தின்முன் நிறுத்து, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு தா? இனவாதிகளை கைது செய், அரசே மத வன்முறையை உடனடியாக நிறுத்து போன்ற பல்வேறு தமிழ், சிங்கள, ஆங்கில பதாதைகளை ஏந்தியிருந்தனர். இதில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட அதன் உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் ஹாரூன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா ஆகியவற்றின் பிரதிநிதிகள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், உலமாக்கள் பொதுமக்கள் பங்கேற்று கண்டனம் தெரிவித்தனர். பேரணி இறுதியில் பொதுபல சேனா அமைப்பை தடைசெய்யக் கோரி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்மியதுல் உலமா சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ.எம்.காலித் ஜேபி, காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ஆகியோரினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடம் காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. இப் பாரிய கண்டனப் பேரணி காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயளிலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இராணுவ தலைமை அதிகாரியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு-

பாகிஸ்தானிய கூட்டு இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் ரபீல் சரீப் இலங்கைக்கான விஜயத்தை ஒத்திவைத்துள்ளார். பாக்கிஸ்தானிய உள்ளூர் சேவைகள் மற்றும் பொது உறவுகள் அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலமாக இத்தகவலை வெளியிட்டுள்ளது. வடக்கு வொஷிங்டனில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ முன்னெடுப்பு காரணமாக இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவ தளபதி எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள தீர்மானித்திருந்தார். இவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள திகதி குறித்து அறிவிக்கப்படவில்லை.

அளுத்கம சம்பவம் குறித்து நவநீதம்பிள்ளை அதிர்ச்சி-

navipillai aluvalagamகளுத்துறை மாவட்டம் அளுத்கமவில் நடந்த வன்செயல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் நவனீதம்பிள்ளை பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வன்செயலை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வன்செயலை தூண்டிய வெறுப்பை உருவாக்கும் பேச்சை தடுக்க வேண்டும் என்றும் அனைத்து சிறுபான்மையினரையும் அது பாதுகாக்க வேண்டும் என்றும் ஆணையர் தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். ஏனைய முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்களுக்கும் இந்தமாதிரி வன்செயல்கள் பரவலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கனடா கண்டனம்-

canadaமுஸ்லிம்களுக்கு எதிராக கடந்த 15ஆம் திகதி அளுத்கம, பேருவள பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறை சம்பவங்களை கனடா கண்டித்துள்ளது. இந்த சம்பவங்களானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என மதச் சுதந்திரத்திற்கான கனேடிய தூதுவர் அன்ட்று பெனிட் தெரிவித்துள்ளார். அளுத்கம, பேருவள பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மத உரிமை மீறலை வெளிப்படையாக காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் சகல இன மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாற கனேடிய அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள்மீது இலங்கையில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. தனிப்பட்ட நபர்கள் தங்களது மத நம்பிக்கைகளுக்கு அமைய வழிபாடுகளில் ஈடுபடவும் சமயத்தை பின்பற்றவும் பூரண சுதந்திரம் இருக்க வேண்டும். சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் அமைதி பேண வேண்டும். குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

அவுஸ்திரேலிய தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை-

australiaஇலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியா புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. நிச்சயமற்ற பாதுகாப்பு நிலைமைகளின் மத்தியில் அவதானத்துடன் செயற்படுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது பிரஜைகளிடம் கோரியுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான பாதுகாப்பு நிச்சயமற்ற நிலைமைகள் தோன்றலாம் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களை நினைவு கூர்ந்து, அவுஸ்திரேலியா புதிய எச்சரி;க்கையை விடுத்துள்ளது. காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள தருணங்களின் உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படுமாறு இலங்கையில் தங்கியுள்ள அவுஸ்திரேலிய பிரஜைகளிடம் கோரப்பட்டுள்ளது.