ஐ.நாவை புறக்கணித்தால் இலங்கை தனிமைப்படும்;-இரா.சம்பந்தன்-

sampanthanஐ.நா. விசாரணைக்கு தனிமைப்பட்டு நின்று எதிர்ப்புக் காட்டும் மனநிலையில் அரசு இருப்பதுபோல் தெரிகிறது. இவ்வாறான மனநிலையுடன் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளிக்காது, சர்வதேச நியதிகளுக்கு கட்டுப்படாது இப்போதிருக்கும் அதிகாரங்களை இந்த நாடாளுமன்றில் பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் பெரும் விளைவுகளையே எதிர்நோக்க நேரிடும். இத்தகைய பொறுப்புக் கூறலில் இருந்து விடுபட்டால் சர்வதேசத்திடமிருந்து இலங்கை மேலும் தனிமைப்படுத்தப்படும் நிலையே ஏற்படும். ஆனாலும் ஒருநாள் இந்த ஆட்சிப் பீடத்தின் தெரிவிலிருந்து நாடு கட்டாயம் மீளத் திரும்ப வேண்டியிருக்கும். அந்த நாள் விரைவில் வரும் என நாம் நம்புவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் ஐ.நாவின் விசாரணை இலங்கைக்கு எதிரானதல்ல. அது மனிதாபிமான, மனித உரிமை சட்டங்களை ஒரேயடியாக மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிரானது. முழு நாட்டையுமே பாதிப்புற வைத்த சட்ட விலக்களிப்புக் கலாசாரத்துக்கு எதிரானது. அது வடக்கில் இளைஞர்கள் காணாமல்போகச் செய்யப்பட்டமைக்கும் தெற்கில் இளைஞர்கள் காணாமல் போனமைக்கும் எதிரானது. ஐ.நா. மனித உரிமை விசாரணைக் குழுவை விசாரணை நடத்த இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று கோரி அரச தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைமீதான இரண்டு நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பமானது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நீண்ட உரையை சம்பந்தன் எம்.பி. சபையில் ஆற்றினார். அந்த உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா. விசாரணையில் நம்பிக்கையில்லை-அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா-

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைமீதும் அரசுக்கு நம்பிக்கையில்லை. பிரபாகரனையும், தீவிரவாதத்தையும் இல்லாதொழித்ததன் காரணமாக இலங்கையை தண்டிப்பதற்கு மேற்குலகம் முயற்சிக்கிறது. இவ்வாறு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நாட்டுக்கு எதிரான யோசனை முன்வைக்கப்பட்டது. சர்வதேச விசாரணைகளை இலங்கை அரசு எதிர்ப்பதற்கு மேற்படி விடயங்களே பிரதான காரணங்களாகும் இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என வலியுறுத்தும் பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தீவிரவாதத்தை இல்லாதொழித்ததன் காரணமாகவே சம்பந்தனால் கூட இன்று ஜனநாயக காற்றை சுவாசிக்க முடிகிறது. அதற்காக எமக்கு பரிசு வழங்குவதை விடுத்து நாட்டை அசௌகரியத்திற்கு உட்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செயற்படுகின்றன. 13ஆவது திருத்தச் சட்டம் பலவந்தமான திணிக்கப்பட்டபோது நாட்டில் ஏற்பட்ட நிலைமை உங்களுக்கு நினைவிருக்கும். மீண்டும் அவ்வாறான நிலை தேவைதானா? பின்லேடனை அமெரிக்கா எவ்வாறு கொன்றது? ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? அரபு வசந்தத்தால் ஏற்பட்ட விளைவு என்ன? இவற்றை பற்றி மனித உரிமைகள் சபையில் பேசப்படுவதில்லை. மேற்குலகத்தினரே மனித உரிமைகளை அதிகமாக மீறுகின்றனர். அத்துடன் சர்வதேச விசாரணையை முழு சர்வதேச சமூகமும் கோரவில்லை. பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வர்த்தமாணி அறிக்கை ஆகியவற்றில் எமக்கு நம்பிக்கையில்லை. இவ்வாறான பின்னணிகள் காரணமாகவே விசாரணைகளை நாம் எதிர்க்கிறோம். நாட்டின் இறையான்மை சுயாதீனத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்முறைகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்-

aiமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் உடனடியாக இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறையாக பேருவளை, அளுத்கம சம்பவங்களை குறிப்பிட முடியும் எனவும், இந்த வன்முறைகள் ஏனைய இடங்களில் பரவுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சர்வதே மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய வலய பிரதிப் பணிப்பாளர் டேவிட் கிரிப்த்ஸ் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய அதேவேளை, முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பாதுகாப்புத் தரப்பினர் தங்களது கடமைகளை உரிய விதத்தில் செய்திருந்தால் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. போராட்டம் நடத்தப்பட்டால் வன்முறைகள் வெடிக்கும் என முஸ்லிம் தரப்பினர் அரசாங்கத்திற்கு எச்சரித்த போதிலும், அதனை கருத்திற் கொள்ளாது பொதுபல சேனா இயக்கத்திற்கு அனுமதி வழங்கியமையே இந்த வன்முறைகளுக்கான பிரதான காரணமாகும். அண்மைக்காலமாக சிறுபான்மை மதச் சமூகங்கள்மீது பெரும்பான்மை கடும்போக்குவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பிரதிப் பணிப்பாளர் டேவிட் கிரிப்த்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாதம்பையில் ஆயுதங்களுடன் மூவர் கைது, அளுத்கமையில் பெற்றோல் குண்டுகள் மீட்பு-

mathampaiyil (1)புத்தளம் மாவட்டம் சிலாபம் மாதம்பை பகுதியில் காரொன்றில் ஆயுதங்கள் கொண்டுசென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் சிறுகுற்றப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து ரி56 இரக துப்பாக்கி ஒன்றும், மகசின் ஒன்றும், 15 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், மகசின் ஒன்றும், 07 தோட்டாக்களும், கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இரத்தினபுரி, நிட்டம்புவ மற்றும் அங்கொட பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அளுத்கமையில் பெற்றோல் குண்டுகள் 56 உட்பட தாக்குதல் நடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆயுதங்களுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை தாம் கைது செய்துள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் அலவாங்கு, கோடரி, துப்பாக்கி வடிவிலான இரும்பு கம்பிகள் இரண்டும் அடங்குவதாகவும் அளுத்கமை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மலேசிய கடலில் படகு மூழ்கியதில் 61 பேர் மாயம்-

malaysia kadalilஇந்தோனேசிய பிரஜைகள் 97 பேருடன் பயணித்த படகொன்று மலேசிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட இந்த பயணிகள் அனைவரும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் என மலேசிய கடற்பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளானவர்களில் 61 பேர் காணாமற் போயுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. பயணிகளை மீட்பதற்காக படகொன்று குறித்த கடற்பகுதிக்கு சென்றுள்ளதுடன் மேலும் இரண்டு கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகில் பயணித்த இவர்கள் அனைவரும் மலேசியாவில் சட்டவிரோதமாக பணிபுரிவதாகவும் புனித ரமழான் மாதத்திற்காக இவர்கள் மலேசியா திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.