இலங்கை நிலைமை கவலை தருகின்றது-அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன்-

imagesCA4LGNKJலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிய, வெறுப்புணர்வுகளைத் தூண்டுகிற செயற்பாடுகள் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளன. தென்னிலங்கையில் அளுத்கமவிலும், அதன் அயல் பகுதிகளிலும், கடந்த 15ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் யக்கி, மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க இலங்கைக்கு இருக்கும் கடப்பாடுகளை அது நிறைவேற்ற வேண்டும். நடந்த வன்செயல்கள் குறித்து முழு விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் இந்த வன்முறைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் அண்மைக்கால வன்முறைகள் எமக்கு கவலையளிக்கின்றது. இனவாத வன்முறை, வெறுப்பைத் தூண்டும் செயல்களால் இலங்கையின் ஸ்திரத்தன்மையைப் பேணமுடியாது. நாம் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யவே அரசைக் கோருகின்றோம். அதற்காக இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராகவுள்ளோம் என கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு தெரிவித்துள்ளது.

பேசம்பவங்களை கண்டித்து நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்-ருவளை, அளுத்கம

muslimkal meethaanaPeruvalai sampavar hartal (2)அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் இன்று பல இடங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் உட்பட பல பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் காத்தான்குடி, வாழைச்சேனை, ஏறாவூர், ஓட்டமாவடி, மீராவோடை, பிறைந்துறைச்சேனை, மாவடிச்சேனை உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஓட்டமாவடியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் சிலவற்றின்மீது இன்றுகாலை கற்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறையின் நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, ஒலுவில், அக்கரைப்பற்று, பொத்துவில், மாளிகைக்காடு, அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அளுத்கம சம்பவங்களைக் கண்டித்து அட்டாளைச்சேனையில் கண்டன பேரணியொன்றும் இன்று முன்னெடுக்கப்பட்டது. திருமலை மாவட்டத்தின் மூதூர், திருகோணமலை நகர், வெள்ளைமணல், நாச்சிக்குடா பகுதிகளில் இன்றும் ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது. கிண்ணியா, தோப்பூர், முள்ளிப்பொத்தானை பகுதிகளில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் நகரிலும், ஐந்து சந்தி பகுதியிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர் பகுதியிலுள்ள சில கடைகள் மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகரிலும் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புத்தளம் சிலாபம் பிரதான வீதியின் ரத்மல்யாய பிரதேசத்திலுள்ள கடைகள் மூடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை-

ilankai india meenavar pechchuஇலங்கை – இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது. இம்முறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுமென திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். மீன்பிடி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, தீர்மானமொன்றை பெற்றுகொள்வது சாத்தியமற்றது என்பதால், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை. இதேவேளை, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய இலங்கை மீனவர்கள் எதிர்வரும் சில வாரங்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். தற்போது சுமார் 90 இலங்கை மீனவர்கள் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒரிஸா மாநிலங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம்-

jaffna-uni-04முஸ்லிம் மக்களுக்கு எதிராக களுத்துறை அளுத்கம பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கடந்த 15ம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்ற வன்முறைச் சம்பவங்களில் குழந்தை உட்பட 4பேர் உயிரிழந்துள்ளதுடன் 80ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் பல லட்சக்கணக்கான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டும் உள்ளன. இந்த செயற்பாடானது இனங்களுக்கிடையில் மிக மோசமான முரண்பாடுகளை உருவாக்கும் எனவே இச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் இராசகுமாரன் தெரிவித்துள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்கள், ஆசிரியர்கள் ஊழியர்கள் என அனைவரும் கலந்துகொண்டு தமது ஆதரவையும் வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட்டரக்க விஜித்த தேரர் மீது தாக்குதல்-

Watareka-Vijitha1மஹிங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் ஜாதிக பலசேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கை, கால்கள் கட்டப்பட்டநிலையில் பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகிலேயே இன்றுகாலை 6.30மணியளவில் அவர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருடைய ஆளடையாள அட்டையும் அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் அவசர சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் வாக்குமூலம் பெறமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். வட்டரக்கதேரர் பாணதுறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா அதிகாரி இலங்கைக்கு விஜயம்-

ஐக்கிய நாடுகள் சபையின், அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஒஸ்கா பெர்ணான்டஸ் டரன்கோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று இலங்கை வரவுள்ள இவர் நான்கு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகின்றது. இதன்போது, ஒஸ்கா பெர்ணான்டஸ் டரன்கோ அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்பாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.