சர்வதேச நிபுணர்குழு இறுதி செய்யப்படவில்லை என அறிவிப்பு-
இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தவுள்ள சர்வதேச நிபுணர்கள் குழு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையக பேச்சாளர் ரூபர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த விசாரணைக் குழுவின் நிபுணர்கள் உறுதி செய்யப்பட்டதன் பின்னர், அது குறித்த உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவில் 12 பேர் அங்கம் வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு மேலதிகமாக இந்த குழுவுக்கான இணைப்பாளர் ஒருவரும், இரு ஆலோசகர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதேவேளை இந்த குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்டி அத்திசாரி நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மார்டி அத்திசாரி தமது சமாதான செயற்பாடுகளுக்காக நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாணந்துறையில் பிரபல வர்த்தக கட்டடம் தீக்கிரை-
கொழும்பு புறநகர் பாணந்துறை பகுதியிலுள்ள பிரபல வர்த்தக கட்டடமொன்று தீக்கிரையாகி உள்ளது. இந்த தீ சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீக்கிரையான இந்த வர்த்தக கட்டடம் நோலிமிட் முன்னணி ஆடை விற்பனை நிறுவனத்துக்கு சொந்தமானது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு இரு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை இந்த ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் தீப்பரவல் இடம்பெற்ற வர்த்தக நிலையத்தில் அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் பரிசோதனை நடத்தியுள்ளனர்.
சர்வதேச நிபுணர்குழு இறுதி செய்யப்படவில்லை என அறிவிப்பு-
இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தவுள்ள சர்வதேச நிபுணர்கள் குழு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையக பேச்சாளர் ரூபர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த விசாரணைக் குழுவின் நிபுணர்கள் உறுதி செய்யப்பட்டதன் பின்னர், அது குறித்த உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவில் 12 பேர் அங்கம் வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு மேலதிகமாக இந்த குழுவுக்கான இணைப்பாளர் ஒருவரும், இரு ஆலோசகர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதேவேளை இந்த குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்டி அத்திசாரி நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மார்டி அத்திசாரி தமது சமாதான செயற்பாடுகளுக்காக நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தல்-
இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை வகுப்பின்போது, இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதிக உரிமையும், அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்ற விடயமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கக்கூடிய 13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குமாறு இந்தியா தொடர்ந்து இலங்கையை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த விடயத்தில் இலங்கை முனைப்பு காட்டவில்லை. கடந்த 10 வருடங்களாக வெளிநாடுகள்மீதான இந்தியாவின் செல்வாக்கு குறைந்து காணப்படுவதே இதற்கான காரணமாக இருக்கமுடியும். ஆனால் தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு, சிறந்த அரசியல் ஒழுக்கத்துக்கு உட்பட்டதாக இருக்கிறது. எனவே தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் விடயத்திலும் கவனத் செலுத்தப்பட வேண்டும். அதேநேரம் இலங்கையுடன் இராணுவ மற்றும் வர்த்தக தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டு, சிறந்த நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கை அமைய வேண்டும் என அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
யாழில் பள்ளிவாசல்மீது தாக்குதல்-
யாழ். நாவாந்துறை எம்.ஓ வீதியில் அமைந்துள்ள கமால் பள்ளிவாசல்மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், பள்ளிவாசலின் 5 யன்னல் கண்ணாடிகள் சேதடைந்துள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரிக்கை-
தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விரைவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் கைதுகளைத் தாண்டி இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு இந்த வன்முறைக்கு காரணமாக அமைந்தவர்களை சட்டத்தின் மூன்னால் நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையுடன் மூன்றாம் தரப்பு ஒப்பந்தம் இல்லை-அமெரிக்கா-
ஈரானில் இருந்து மூன்றாம் தரப்பின் ஊடாக மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கை எதனையும் இலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று, அமெரிக்கா தெரிவித்துள்ளது. றொய்டர்ஸ் இணைத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்றாம் தரப்பின் ஊடாக இலங்கைக்கு ஈரானில் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் இதனை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் முற்றாக மறுத்துள்ளார். எவ்வாறாயினும் மூன்றாம் தரப்பின் ஊடாக ஈரானிலிருந்து இலங்கை மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை என நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டிருந்தது.
ராமநாதபுரம் சென்றடைந்த இலங்கை அகதிகள்-
தமிழகம் இராமநாதபுரம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு இலங்கையிலிருந்து 4பேர் அகதிகளாக படகு மூலம் சென்றுள்ளனர். தனுஸ்கோடி பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரே இவ்வாறு படகுமூலம் வந்ததாக அப்பகுதி மீனவர்கள் கடலோர பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து கடலோர பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர். அந்தோணி குரூஸ் மற்றும் இவரது மனைவி செல்வி குரூஸ், ரோமேரியா, ரியான்ச் ஆகிய இரண்டு குழந்தைகளுமே இவ்வாறு தமிழகம் சென்றுள்ளனர். இலங்கையில் தொழில் மற்றும் வேலைவாயப்பு கிடைக்க மிகவும் சிக்கல் என்றும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மனைவிக்கு சிகிச்சையளிக்க போதுமான பணம் கிடைக்கவில்லை என்றும், தங்களது உறவினர் தமிழகம் புதுக்கோட்டைஅகதிகள் முகாமில் இருப்பதால் இங்கு வந்த சிகிச்சை பெறலாம் என்பதால் தலைமன்னாரில் இருந்து 20 ஆயிரம் பணம் கொடுத்து படகு மூலம் தனுஸ்கோடிக்கு வந்ததாகவும் இவர்கள் பொலீஸ் மற்றும் கியூ பிரிவினரின் விசாரணையின்போது கூறியுள்ளனர்.
ஆட்கடத்தலை கட்டுப்படுத்தாத நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கம்-
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தவறிய நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபடுவோர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்தி தண்டிக்க இலங்கையரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோத ஆட்கடத்தல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது இலங்கை அரசின் கடமையாகும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா, குவைட், கட்டார், ஜோர்தான், எகிப்து, ஈராக், ஆப்கானிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கட்டட நிர்மாணப் பணியாளர்கள் உதவியாளர்களாக வீட்டுப் பணிப்பெண்களாக வேலைவாய்ப்பு பெற்றுச்செல்வோர் பலவந்தமாக தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதுடன், துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அமெரிக்கா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.