வெளிநாடுகளில் இருந்து சாட்சிப் பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை-

UNஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு அடுத்தமாதம் முதல்வாரத்தில் சாட்சி விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இக்குழுவினர் ஓஸ்லோ, டோரோன்டோ மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் விசாரணைகளை நடத்தவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார். குறித்த நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களிடம் ஐ.நா விசாரணைக் குழு சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த குழுவினர் இலங்கைக்கு வருகைதந்து விசாரணை நடாத்த முடியாது என இலங்கை பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, நாட்டிற்கு வருகை தந்து விசாரணை நடத்த முடியாது என அவர்கள் அறிந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்றாம் தரப்பு அனுசரணை அவசியம்;-கூட்டமைப்பு வலியுறுத்தல்-

1719856666tna3வடக்கில் முதலமைச்சர் தலைமையில் ஒரு நிர்வாகமும், ஆளுநர் தலைமையில் மற்றுமொரு நிர்வாகமும் காணப்படுவதனால் மக்களுக்கு சேவையாற்றுவதில் அதிகாரப் பிரச்சினை காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் எடுத்துக் கூறியுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்ணான்டஸ் தரன்கோ உள்ளிட்ட குழுவினருடன் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனைத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இனப்பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வு முக்கியம் என்று சொன்னால் நிச்சியமாக ஒரு மூன்றாம் தரப்பு அனுசரணை ஒன்று தேவை என்பதனை நேற்று வலியுத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸியில் தற்காலிக பாதுகாப்பு வீசா வழங்கும் நடவடிக்கை-

australiaஅகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு வீசாக்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசு கவனம் செலுத்தியுள்ளது. அகதி அந்தஸ்து நிரூபிக்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிரந்திர வீச்சாக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த அவுஸ்திரேலியா தீர்மானித்திருந்தது. இதற்கமைய வருடமொன்றுக்கு 2,773 நிரந்தர வீசாக்கள் மாத்திரமே அகதிகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசின் இக்கொள்கை தவறானது என அந்நாட்டு உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் நீதிமன்ற தீர்ப்பு எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றென அவுஸ்திரேலிய குடிவரவமைச்சர் ஸ்கொட் மொரிசன் கூறியள்ளார். அகதிகள் தொடர்பில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தற்காலிக வீசா நடைமுறையை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதாக  அவர் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்காலிக பாதுகாப்பு வீசாவைப் பெறும் ஒருவர் அகதி அந்தஸ்து பரிசீலனை செய்யப்படும் வரை ஆஸியில் 3 ஆண்டுகள் தங்கியிருக்கலாம்.

கோண்டாவில் சம்பவம் தொடர்பாக இருவர் கைது-

யாழ்ப்பாணம் உரும்பிராய் கோண்டாவில் பகுதியில் கடந்தவாரம் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையினை தூண்டிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நான்கு பேர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் வன்முறையை தூண்டிய குற்றசாட்டில் பேரில், சம்பவத்தில் பலியானவரின்  சகோதரர்கள் இருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் காணாமற்போனோர் குறித்து அடுத்த மாதம் விசாரணை-

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரை இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. ஜூலை மாதம் 5ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இவ்விடயம் குறித்து இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொலீஸ் தரப்பின்மீது குற்றச்சாட்டு-

களுத்துறை மாவடட்டத்தின் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலீஸார் தமது பொறுப்புகளை உரிய வகையில் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த சம்பவங்களின்போது பொலீஸாரின் பொறுப்புகள் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அமைச்சர் வாசுதேவ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவறான அவசர அழைப்புகள் விடுப்போர்மீது நடவடிக்கை-

பொலிஸ் அவசர அழைப்புக்கு தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர். போலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ் அவசர அழைப்புக்கு நாளொன்றுக்கு வரும் 100 அழைப்புகளில் 50க்கும் அதிகமானவை தவறான தகவலை வழங்கும் அழைப்புகளாக இருக்கின்றன. இந்நிலையில் இவ்வாறான தவறான அழைப்புகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதங்களை ஒப்படைக்குமாறு யாழில் இராணுவம் அறிவுறுத்தல்-

ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழில் இராணுவத்தினரால் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ். அச்சுவேலி, வலி.கிழக்கு மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் இத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆயுதங்களை தம்வசம் வைத்திருப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள இராணுவ முகாமிலோ அல்லது பொலிஸ் நிலையத்திலோ ஒப்படைக்க முடியும். அவ்வாறு இல்லாமல் தம் வசம் வைத்திருந்து பிடிபட்டால் அவர்கள் பிணையில் வெளியில் வரமுடியாது தடுப்பில் வைக்கப்படுவர் என அந்தத் துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயுதங்களை எங்காவது கண்டெடுத்தால் அல்லது வைத்திருப்பவர்களை அடையாளங்கண்டால் அல்லது எங்காவது ஆயுதங்கள் இருப்பது கண்ணுற்றால் இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்க முடியும். தகவல் தெரிவிப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.