18வது அரசியல் திருத்தத்தால் நீதித்துறைக்கு பங்கம்-வடக்கு முதல்வர்-

அரசுக்கு சார்பான வகையில் வழக்குகளில் தீர்ப்புக்கள் வழங்கப்படுவதனாலும் வழக்கு விசாரணைகள் தாமதப்படுவதனாலும் மக்களுக்கு நாட்டின் நீதித்துறைமீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தமது காணிகளைத் திருப்பித்தருமாறு கோரி வலி வடக்கைச் சேர்ந்த 2000 பேர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இருந்தும் அந்த வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படாத காரணத்தினால் அவர்கள் நீதிமன்றம்மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் வடக்கு முதலமைச்சர் பிபிசியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றங்களையோ நீதிபதிகளையோ விமர்சனம் செய்ய முடியாது. அவர்களைக் குறைகூறுவதும் எமது நோக்கமல்ல என தெளிவுபடுத்திய அவர், 18வது திருத்தச் சட்டம் வந்ததன் பின்னர் பல வழிகளிலும் நீதித்துறைக்குப் பங்கம் ஏற்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார். இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரம் அரசியல்வாதியாகிய ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. அரசியல் காரணங்களுக்காக தனது அரசியல் செல்வாக்கை மேம்படுத்துவதற்காக அதற்கேற்ற வகையில் நீதிபதிகளை நியமிக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்திருப்பதனால் நீதித்துறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் வடக்கு முதல்வர் சிவி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தளங்கள் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகம்-

இணையத்தளங்களின் வாயிலாக சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களில் இதுவரை 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அரச உத்தியோகத்தர்களும் சில நிபுணர்களும் உள்ளடங்கவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அநோமா திஸாநாயக்க தலைமையின்கீழ் இயங்கும் மேற்படி அமைப்பின் புலனாய்வு பிரிவினரே இவ்வாறு 6 பேரை கைதுசெய்துள்ளனர். இது தொடர்பில் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, இதுவரை 2000 பேர், இணையத்தளங்களின் மூலமாக சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளனர். இணையத்தளங்களுக்கூடாக  இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தள புலானாய்வு பிரிவு மறுசீரமைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அறியவரும்போது 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் இவ்வமைப்பின் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்க முடியும். இச்சம்பவங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேணடும். இணையத்தளங்களின் வாயிலாக சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் தந்திரமிக்கவர்களாக காணப்படுவதால் சிறுவர்களும் இதுகுறித்து நிதானத்துடன் செயற்பட வேண்டும் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

நடுக்கடலில் சிக்கிய 152 இலங்கை அகதிகள்-

153 இலங்கை அகதிகளுடன் சென்ற படகு கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 250 கிலோமீற்றர்  தொலைவில் நடுக்கடலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து படகில் சென்ற அகதிகளே நடுக்கடலில் சிக்கியுள்ளதாகவும், இவர்களில் 32 பெண்கள் மற்றும் 37 குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்கள் என கூறப்படுகிறது. படகில் வந்தவர்களுடன் பத்திரிகையாளர்கள் தொடர்புகொண்டபோது அவர்கள் அகதிகள் என தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். அது தொடர்பில் ஒருவர் பத்திரிகையாளருக்கு விளக்கமளிக்கையில், தாம் வந்த படகு ஜூன் 13ஆம் திகதி தென்னிந்தியாவிலிருந்து புறப்பட்டதாகவும், படகில் சேதமேற்பட்டு, நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் அபாயநிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் தமக்கு உதவுமாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸி அரசிடம் கோரியுள்ளனர்.