கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை-மத்திய அரசு-
கச்சத்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமை இல்லை என இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மீனவர் பேரவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த பதில் மனுவில் தமிழக மீனவர்களுக்கு எதிரான கருத்தை கூறியிருந்தது. தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் புதிதாக கூடுதல் பதில் மனுவை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை அதேசமயம் இந்திய இலங்கை ஒப்பந்தப்படி அங்கு மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்திக்கொள்ளவும், ஓய்வெடுத்துக் கொள்ளவும் பாரம்பரிய உரிமை உண்டு. மேலும் தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை அந்நாட்டு அரசு நியாயப்படுத்தக் கூடாது என மேலும் கூறப்பட்டுள்ளது.
புதிய கடற்படைத் தளபதி நியமனம்-
கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜயந்த பெரேரா இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அட்மிரல் ஜயனாத் கொலம்பகே ஓய்வு பெற்று சென்றுள்ள நிலையில் புதிய நியமனத்தை ஜயந்த பெரேரா பெற்றுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்வு கொழும்பிலுள்ள கடற்படை தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதேவேளை இலங்கை கடற்படையின் கட்டமைப்பை அதிசிறந்த முறையில் மேம்படுத்த நவீன பாரிய கப்பல்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக புதிதாக பதவியேற்ற கடற்படைத் தளபதி ரியர் எட்மிரல் ஜயந்த பெரேரா தெரிவித்துள்ளார். கடற்படையில் நான் 38 வருட காலம் சேவையாற்றிய பின்னரே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளேன். இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட எந்த தளபதியும் இவ்வளவு நீண்டகாலம் சேவையாற்றவில்லை. நான் கடற்படையின் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளேன். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகவும் கவனமாக பதில் கூறவேண்டும் என்ற அனுபமும் எனக்கு நன்றாக உண்டு. புலிகளின் தற்கொலைப் படகுத் தாக்குதல்களை முறியடித்து புலிகளுக்கெதிரான போரை வெற்றி கொண்ட அனுபவம் எமது கடற்படையினருக்கு உண்டு. எமது படைகளிடம் பயிற்சி பெற இன்று நைஜீரியா முன்வந்துள்ளது. நாம் யுத்தத்தை வெற்றிகொண்ட விதம் குறித்து பாகிஸ்தானும் வியந்து பாராட்டியுள்ளது. மேலும் கடல் ரீதியில் இலங்கை எதிர்நோக்கும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க கடற்படை எப்போதும் தயாராகவே உள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் குறித்து கருத்து வெளியிட ஆஸி பிரதமர் மறுப்பு-
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் குறித்து கருத்து வெளியிட முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பினை சென்றடைந்ததாகவும், அங்கிருந்து அவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் புகலிடக் கோரிக்கையாளர் உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த விவகாரம் குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை தடுக்கும் எமது கொள்கை வெற்றியளித்துள்ளது. கடந்த ஆறுமாத காலமாக புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கவில்லை. கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகாமையில் இலங்கைக் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் மீட்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.
நாட்டிற்கு வெளியிலிருந்து தகவல் பெற வழிகள்-
இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்படாவிட்டாலும் நாட்டில் இடம்பெறுகிற விடயங்கள் குறித்த தகவலகளை பெறுவதற்கான மூலங்கள் தம்மிடம் இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான சர்வதேச குழுவின் பணிகள் தயாராக இருப்பதாக ஆணைக்குழுவிற்கான ஆலோசகர் அஸ்மா ஜெஹாங்கீர் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள் குடியியல் சமூகங்களின் பிரதிநிதிகளிடமும் ஊடகங்களிடமும் இருந்தும் அவசியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேரவை கூட்டத்தின்போது ஆணையாளர் நவனீதம்பிள்ளையால் இக்குழு நியமிக்கப்பட்டது.
அரசியல் தீர்வுக்கு ஆலோசனை வழங்கும் காலம் நீடிப்பு-
அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் ஆலோசனையினை பெறுவதற்கான காலம் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு தொடர்பில் மக்களது ஆலோசனையினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என கூட்டமைப்பு கடந்த யூன் மாதம் 6ஆம் திகதி அறிவித்திருந்தது. இதன்படி அறிவிக்கப்பட்ட ஆலோசனைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் மேலும் 2 வாரங்களுக்கு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
சமூக அபிவிருத்தி திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா நிதியுதவி-
நாட்டின் சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக, அவுஸ்திரேலியா 27 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பதில் உயர்ஸ்தானிகர் சொன்யா கொப்பே இந்த நிதியை நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள 12 அமைப்புக்களிடம் கையளித்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நேரடி உதவித் திட்டத்தின் கீழ், இவை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்டத் துறையினரின் கல்வி வசதிகளை மேம்படச் செய்யும் திட்டங்கள், பெண்களுக்கான தொழிற்பயிற்சி, நிவாரண நடவடிக்கைகள், வாழ்க்கைத்தர அபிவிருத்தி, சுகாதார துறை. ஆரோக்கிய வசதிகள் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
சாய்ந்தமருதில் மத ஒன்றுகூடல் கட்டடம் மீது தாக்குதல்-
அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் மத ஒன்றுகூடல் கட்டடம் ஒன்றை அடையாளம் தெரியாத சிலர் தேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஒரே மதத்தைச் சேர்ந்த இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு இந்த சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கிற்கான ரயில் சேவையில் பாதிப்பு-
பொல்கஹவெல, பொதுஹரவுக்கு இடையில் பயணித்த ரயில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலைமையை மிக விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.