சுவிஸில் வீரமக்கள் தின நிகழ்வில் புளொட் தலைவர் கலந்து கொள்கிறார்-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06.07.2014) அன்று புளொட்டின் சுவிஸ் கிளையின் சார்பில் சூரிச் மாநகரில் நடாத்தப்படவிருக்கும் 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் தனது அஞ்சலியினை செலுத்துவார்.
புளொட்டின் 25ஆவது வீரமக்கள்தின நிகழ்வுகளாக பிற்பகல் 02.00 (14.00) மணியளவில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. இதேவேளை 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்றுகாலை 8.00மணியளவில் தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிப் பரீட்சைகள் இடம்பெறவிருப்பதுடன், பிற்பகல் நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின்போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இம்முறை நடைபெறவிருக்கும் 25ஆவது வீரமக்கள் தின நிகழ்விலும் புளொட்டின் வெளிநாட்டுக் கிளைகளின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்கவுள்ளனர்.
சுவிஸ் கிளை – தொடர்புகளுக்கு- 079.6249004 079.8224153 077.9485214
மனிதவுரிமை மீறல் பற்றி தகவல் அளிப்போரை பழிவாங்கக்கூடாது-ஐரோப்பிய ஒன்றியம்-
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள, சர்வதேச விசாரணைக் குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவர் நியமிக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் சர்வதேச விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கின்ற நபர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் ஐரோப்பிய ஒன்றியம் அந்த அறிக்கைமூலம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கைதிகளின் புகைப்படங்களுடன் கூடிய ஆவணம்-
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் புகைப்படங்களுடன் கூடிய ஆவணமொன்றை தயாரிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரத்ன பள்ளேகம தெரிவித்துள்ளார் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். கைதிகளின் புகைப்படங்கள் இன்மையால் அவர்களை மீண்டும் கைதுசெய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் சட்டத்தின் பிரகாரம் கைதிகளின் புகைப்படங்களை எடுப்பதற்கான அதிகாராம் உள்ளது. தொடர்ச்சியாக கைதிகள் தப்பிச்செல்வதால் அவர்களின் புகைப்படங்களை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் சந்திரசிறி கஜதீர பணிப்புரை விடுத்துள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகமாலையில் பெண் புலி உறுப்பினர்களின் சட எச்சங்கள் மீட்பு-
முகமாலை முன்னரங்கப் பகுதியில் பெண் புலி உறுப்பினர்களின் சீருடைகள் மற்றும் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை புகையிரதக் கடவையிலிருந்து 15 மீற்றர் தூரத்திலேயே இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹலோட்ரஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இந்த எச்சங்களை மீட்டுள்ளனர். இதன்போது பெண் புலி உறுப்பினர்களின் சீருடைகள், எலும்புக் கூடுகள், 40 எம்.பி.எம்.ஜி(நவீன ரக துப்பாக்கி) ரவைகள் 40, சலவைத்தூள் பைகள், சில்லறைக்காசு என்பன மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக உடன் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த பகுதியில் யுத்தகாலத்தில் புலிகளது சோதனைச் சாவடி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை வாசிக்க…..
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அதிருப்தி-
இலங்கைத் தமிழர்கள் என்று நம்பப்படும் 150 பேர் அடங்கிய அகதிகள் குழு சென்ற படகை அவுஸ்திரேலிய அரசாங்கம் திருப்பியனுப்பியமை தொடர்பில் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. குறித்த படகை இலங்கை கடற்படையினரிடம் கையளித்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் கூறுகின்றன. எனினும் இலங்கை கடற்படை இதனை மறுத்துள்ளது இந்நிலையில் ஏற்கனவே படகிலிருந்து தம்முடன் தொடர்புகளை கொண்டிருந்த தமிழ் அகதி ஒருவரின் தொலைபேசியும் செயலிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் ராகவன் தெரிவித்துள்ளார் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த அகதி படகை அவுஸ்திரேலியா இலங்கையிடம் கையளித்திருக்குமானால்; அவுஸ்திரேலிய அரசை மனிதாபிமானமற்ற அரசாங்கமாகவே கருதவேண்டி ஏற்படும் என்று ராகவன் குறிப்பிட்டுள்ளார் எனினும் இந்த படகு தொடர்பில் எந்த தகவல்களையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
30 தமிழ் யுவதிகளின் இராணுவ பயிற்சி நிறைவு-
இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்துகொண்ட இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வட பகுதி ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது-
பளை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. பொத்துஹர மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளுக்கு இடையே ரயில் ஒன்று தடம்புரண்டதால் வடக்கு ரயில் மார்க்கத்திற்கு சேதம் ஏற்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இன்று அதிகாலை திருத்தப் பணிகள் நிறைவுபெற்றதை அடுத்து தற்போது ரயில்சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் கூறுகின்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்-
யாழ். பல்கலைக்கழகத்தின் மருதனார்மடம் நுண்கலைப்பீட மாணவன் முகமட் அசாம் (23) மீது நேற்று சகமாணவர்கள் மூவர் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.