இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்-
இராணுவ ஆக்கிரம்பில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் கவனயீர்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்றுகாலை 11.00 மணி முதல் 12 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினுள் பொதுமக்கள் செல்ல பொலிஸார் தடைவிதித்திருந்தனர். ஆர்பாட்டம் நடத்தி மாவட்ட செயலகத்தினுள் மக்கள் செல்லவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலையே தாம் பொதுமக்களை உட்செல்ல அனுமதிக்கவில்லை என பொலீஸார் கூறியுள்ளனர். இப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலர் செ.கஜேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சரின் கூற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பதில்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களை ஒருபோதும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறியதில்லை. தமிழ் மக்களே கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக தெரிவு செய்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி என கொள்ள முடியாது. கூட்டமைப்பை ஏக பிரதிநிதிகள் என மக்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களுடன் அரசாங்கம் பேசுவதற்கு தயார். எனினும் அவ்வாறு இல்லாத நிலையில் கூட்டமைப்பை ஏக பிரதிநிநி என அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதில் வழங்கும் முகமாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நடந்து முடிந்த தேர்தல்களின் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ள ஆணை அதனை தெளிவுப்படுத்தியுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை-
இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ், அடுத்தவாரம் டெல்லி செல்லவுள்ளார். இந்த விஜயத்தின்போது, பீரீஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்வு, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இதன்போது இருவரும் விவாதிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. மத்தியில் புதிய அரசு பதவி ஏற்றபிறகு இதுவரை 175 தமிழக மீனவர்கள், இலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் குறைவான எண்ணிக்கையில்தான் தமிழக மீனவர்கள் இப்போது அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் பதிலளித்துள்ளார்.
வவுனியா விபத்தில் பெண் ஸ்தலத்தில் பலி-
அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனமொன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மரமொன்றுடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹைஏஸ் ரக வாகனம் இன்றுமுற்பகல் 10.50மணியளவில் வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டைப் பகுதியில் வளைவொன்றில் திரும்பியபோது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்தின்போது படுகாயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
யாழ். பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு-
யாழ். பல்கலைக்கழக கலைப்பிரிவு 3ம் வருட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தைச் சேர்ந்த யசோதரன் (வயது24) என்னும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், யாழ். நாச்சிமார் கோவிலடியில் வாடகை அறையில் தங்கி இருந்து பல்கலைகழகத்தில் கல்வி கற்று வந்தவர் எனவும் இன்றுகாலை அவரது அறைக்கு வெளியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வீடொன்றுக்கு முன்பாகவுள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இளைஞனின் சடலத்தை மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக 500 தாக்குதல்கள்-ஐ.நா-
இலங்கையில் கடும்போக்குவாத பெரும்பான்மை மதக்குழுக்களினால் ஏனைய மதத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்படுவதை இலங்கையரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக ஐ.நா ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் சிறுபான்மையாக வாழும் மதத்தவர்களுக்கு எதிராக சுமார் 500 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குற்றம் புரிந்துவிட்டு தப்பித்து விடலாம் எனும் சூழல் வன்முறையைத் தூண்டுவதாக ஐ.நாவின் மதச் சுதந்திரத்திற்கான சிறப்புப் பிரதிநிதி ஹெய்னர் பிலெஃபெல்ட் கூறியுள்ளார்.
இலங்கை எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை-பிரித்தானியா-
யுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பதில் அளிக்கும் செயற்பாட்டில் இலங்கை எதிர்பார்த்த மட்டத்தை அடைய தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில் இலங்கை தொடர்பில் இடம்பெற்ற விசேட விசேட விவாதம் ஒன்றில் உரையாற்றிய பொதுநலவாய சபையின் அலுவலக அரச அமைச்சர் பரனேஸ் வாசி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சர்வதேச விசாரணை ஒன்றுக்கான அவசியம் வலியுறுத்தப்படுவாதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.