வீரமக்கள் தின நிகழ்வில் பங்கேற்கும் முகமாக புளொட் தலைவர் சூரிச் பயணம்-
நாளை காலை (06.07.2014) சூரிச் மாநகரில் புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் நடாத்தப்படவுள்ள 25ஆவது வீரமக்கள்தின நிகழ்வில் கலந்துகொள்ளும் முகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுகாலை சூரிச் நோக்கிப் பயணமானார்.
நாளை ஞாயிறன்று காலை 8.00மணியளவில் தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிப் பரீட்சைகள் இடம்பெறவிருப்பதுடன், பிற்பகல் 2மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின்போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
25ஆவது வீரமக்கள் தின நிகழ்வின்போது மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளதுடன், இதன்போது போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது அஞ்சலியை செலுத்தி, உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வின்போது இடம்பெறவுள்ளன.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இம்முறை நடைபெறவிருக்கும் 25ஆவது வீரமக்கள் தின நிகழ்விலும் புளொட்டின் வெளிநாட்டுக் கிளைகளின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்கவுள்ளனர்.
சுவிஸ் கிளை – தொடர்புகளுக்கு- 079.6249004 079.8224153 077.9485214
காணாமற்போனோர் தொடர்பில் முல்லைத்தீவில் சாட்சிப் பதிவு-
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குவின் ஐந்தாவது பகிரங்க அமர்வு முல்லைத்தீவில் இன்று ஆரம்பமானது. இன்றைய சாட்சி விசாரணைகளுக்காக 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், 21 பேர் மாத்திரமே சமூகமளித்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். மேலும் 150 பேர் இன்று புதிதாக முறைபாடுகளை முன்வைத்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற அமர்வில், புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் புதுக்குடியிருப்பு மேற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் சாட்சி விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைத்தவிர, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலும் சாட்சி பதிவுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ள பகிரங்க அமர்வுகள் இன்று முதல் 03 நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் – வவுனியா பஸ் தடம்புரண்டு விபத்து, ஒருவர் பலி 14 பேர் காயம்-
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்றுமாலை 3 மணியளவில் வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் விபத்தில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 29 வயதான ஆர்.டபிள்யூ. ரட்நாயக்க என்பவரே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் விபத்தில் காயமடைந்த 6 மாத குழந்தை உட்பட 14பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் பு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு புதிய வாகனங்கள் இன்று கையளிப்பு-
வடக்கு மாகாண அமைச்சர்கள்,அவைத்தலைவர் மற்றும் சுகாதார அமைச்சிற்குமான வாகனங்கள் இன்று கையளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் வரிவிலக்கழிக்கப்பட்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் வாகனங்கள் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன், குருகுலராசா மற்றும் டெனீஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சிற்குமாக 5 வாகனங்கள் இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் வடக்கு முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்கள் டொயாட்டா கம்பனியிலிருந்து கொண்டுவரப்படவுள்ளதால் அவை சற்று தாமதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் வடமாகாண அமைச்சர்கள் வருகை தராத காரணத்தினால் அவர்களுக்கான வாகனங்களை அமைச்சர்களின் செயலாளர்களிடம் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏசந்திரசிறி இன்று கையளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆறு மாதங்களில் பொலிஸாருக்கு எதிராக 335 முறைப்பாடுகள்-
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் பொலிஸாருக்கு எதிராக மக்களிடமிருந்து 335 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றுள் 227 முறைபாடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பண்டார தென்னக்கோன் கூறியுள்ளார். பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் 145 முறைபாடுகள் கிடைத்திருந்தன. பக்கசார்பாக செயற்பட்டமை தொடர்பில் 86 முறைபாடுகளும், அதிகார துஷ்பிரயோகம் குறித்து 67 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி தொலைபேசி அழைப்புப் பிரிவிற்கு வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 1,129 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றுள் 554 முறைப்பாடுகள், பொலிஸார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை தொடர்பிலேயே பதிவாகியுள்ளன. பொலிஸார் தொடர்பில் 071 036 10 10 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைபாடுகளை தெரிவிக்க முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா விஜயம்-
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்;.பீரிஸ் எதிர்வரும் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் இந்திய விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர். தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவு, ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக அறிவி;க்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, புதுடில்ஹிக்கான பயணத்தின்போது அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உயர்மட்ட விவகாரங்கள், மீன்பிடித்துறை நெருக்கடி உள்ளிட்ட பிராந்திய ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தல்-
இலங்கையில் ஜனநாயக ஆட்சி, நல்லிணக்கம், நீதி, பொறுப்புப்கூறல் தொடர்பாக ஒரு உறுதியான, அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்குமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா, சுதந்திரமடைந்து 238 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போதே, இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவர் மைகல் ஜே. சிசொன்; மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையின் ஐக்கியத்திற்கும் செழிப்பான வாழ்க்கைக்குமான சாதகமான தூர நோக்கை அமெரிக்கா பகிர்ந்து கொண்டுள்ளதுடன் தற்போது காணப்படும் பல்வேறு பிரச்சினைகனைகளை தீர்த்து வைப்பதற்கு அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயம்-
சீன ஜனாதிபதி யீ ஜீங்பிங் இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் முதற்தடவையாக சீன ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இது வரலாற்று பயணமாக அமையவுள்ளது. மேலும், இந்திய கடற்பிராந்தியத்தில் தமது உறவுகளை மீள புதுப்பிக்கும் சீனாவின் ஒரு நடவடிக்கையாக இது அமைவதாகவும் கருதப்படுகின்றது.
ஆஸி குடிவரவு அமைச்சரின் இலங்கை விஜயம்-
அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன், எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அவரது இவ்விஜயமானது அவுஸ்திரேலிய சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவிற்கு ரோந்து கப்பலை அன்பளிப்பு செய்யும் வகையில் நடைபெறவுள்ள வைபவத்தில் கலந்துகொள்ளும் விஜயமாக அமைந்திருப்பதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சேவையிலிருந்து விலக தீர்மானம்-
அரச சேவையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. மகப்பேற்று பயிற்சி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாமையே இந்த தீர்மானத்திற்கு காரணமென அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க செயலாளர் அசோக்கா அபேநாயக்க கூறியுள்ளார். எமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது குறித்து அதிகாரிகள் இதுவரை கவனம் செலுத்தவில்லை. மகப்பேற்று பயிற்சி தொடர்பிலான பிரச்சினைக்கு ஒருமாத காலத்திற்குள் தீர்வு வழங்காவிட்டால், எமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பிக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க உறுப்பினர்கள் பதவி விலகுவார்களாயின், அதன் ஊடாக வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஹேரத் கூறியுள்ளார்.
கச்சதீவில் கட்டணம் செலுத்தி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க ஏற்பாடு-
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் கச்சதீவு அருகில் சென்று மீன்பிடித்தால் தான் அதிக மீன்களை பெற முடிகிறது. ஆனால் மீன்வளம் உள்ள அந்த பகுதிக்கு வரக்கூடாது என இலங்கை கடற்படை அச்சுறுத்தியுள்ளது. எனவே எதிர்காலத்தில் கச்சதீவு பகுதியில் கட்டணம் செலுத்தி தமிழக மீனவர்கள் தங்கு தடையின்றி மீன்பிடிக்க ஏற்பாடு செய்து கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த யோசனையை தமிழக மீனவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. தமிழக மீனவர்கள் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டுமானால் கச்சதீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்ப்பது ஒன்றுதான் தீர்வாக இருக்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
முன்னாள் புலி உறுப்பினர் விடுதலை-
புலிகள் இயக்கத்துக்கு முகாம் அமைத்ததாக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவர், அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா – ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் முகுந்தன் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் முன்னாள் புலி உறுப்பினராவார். 2008ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் பதவிய, வெலிஓய பிரதேசங்களில் சுமார் 100 பொதுமக்களை பலவந்தமாக தீவிரவாதிகளுக்கு முகாம் அமைக்கப் பயன்படுத்தியதாக இவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.