சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-
யாழ். சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 25.06.2014 திங்கட்கிழமை அன்று பி.ப 1.00 மணியளவில் பாடசாலை அதிபர் செல்வி ஜெயராணி நாகலிங்கம் தலைமையில் வித்தியாலய மணடபத்தில் நடைபெற்றது இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக இளைப்பாறிய அதிபர் திரு.க.சந்திரசேகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் தலைமை உரையினை நிகழ்திய அதிபர் அவர்கள் பாடசாலையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் உரையாற்றியதோடு பாடசாலையின் பெறுபேறுகள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தார். இவ் நிகழ்வில் உரைநிகழ்திய வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள், இன்றைய காலச் சூழல் என்பது மாற்றத்துக்கு உள்ளாகி வரும் காலச்சூழலாகவே உள்ளது. மிக கொடிய நீண்ட போரின்போது நாம் பலவற்றையும் இழந்து விட்டோம். இன்று எம் மத்தியில் உள்ள ஒன்று மற்றவர்களாலும் எதிரியாலும் அழிக்க முடியாத ஒன்று கல்வி மட்டுமே ஆகும். இக் கல்விக்கான வாய்ப்பு சரியானதும் முறையானதுமாக அமைய நாம் அனைவரும் ஒன்று படவேண்டிய தேவை இன்றுள்ளது. இன்று மாணவர்கள மத்தியில் பல திட்டமிடப்பட்ட வகையில் கவனக்கலைப்பான் நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இது எமது கல்விநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இவ்வாறாக எமது கல்வியை நாம் சீரளிப்பதற்கு உடந்தையாக இருக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை உடையவர்களாக இருக்க வேண்டும். பிள்ளைகளது ஒவ்வொரு செயற்பாட்டிலும் பெற்றோர் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படும் போதுதான் எமது கல்விப் புலத்தையும் எமது கல்வி நிலையின் இருப்பையும் நாம் காப்பாற்ற முடியும். வெறுமனே பிறரில் குறைகூறும் நிலையினாலோ அல்லது வெறும் அறிக்கைகள் மற்றும் மேடைப் பேச்சுகளாலே எதையும் சாதித்துவிட முடியாது. காலத்தின் தேவை அறிந்து நடப்பவர்களாக இருந்தால் மட்டுமே உரிய நோக்கையும் இலக்கினையும் அடைய முடியும். இதற்கும் மேலாக இன்று நடைபெறும் கலாச்சார சீரழிவுகள் மற்றும் வன்முறைகள் தொடர்பிலும் பெற்றோர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியநிலை இன்று காணப்படுகின்றது. இதுவரை தொலைக்காட்சிகள் ஊடாக பார்த்த பலவும் இன்று நேரடியாக பார்க்கக்கூடிய நிலை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை தொடர்பானவர்களை விடுவிக்க பா.ஜ.க எதிர்ப்பு-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போன்று எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கருணை மனுமீது தாமதமாக பதில் அளிக்கப்பட்டதால் அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராஜீவ் வழக்கில் கைதான சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி அறிவித்தார். மேலும் இது குறித்து மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்கவில்லை என்றால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து அவர்களை விடுவிப்பதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெப்ரவரி 20ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்தவர்களை விடுவிக்கவே கூடாது என்று அது நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து ஏப்ரல் 25ஆம் திகதி இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சிற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இது குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படுகிறது. அன்றைய தினம் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளது.
சங்கரத்தை கஜமுகன் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா, வலிமேற்கு பிரதேசசபை பொதுக்கூட்டம்-
யாழ். சங்கரத்தை கஜமுகன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா வலி மேற்கு பிரதேச சபை மைதானத்தில் சட்டத்தரணி சுகாஸ் தலைமையில் கடந்த 18.06.2014 புதன்கிழமை அன்று நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழ்வில் அவர் உரையாற்றும்போது இன்றைய இவ் இளைய தலைமுறையே எமது எதிர்காலத்தின் முக்கிய தூண்களாக இருக்கக்கூடியவர்கள் இவர்களது கல்வியில் மேல்நிலை பெற சழூகத்திலுள்ள அனைவரும் முன்வருவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.இச் சிறார்களுக்கு இப் பருவத்திலேயே கல்வியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட வழிவகுக்கும். இச் சிறுபராயத்தில் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டும் அக் கல்வி விரும்பிப்படிக்ககூடிய ஒர் கல்வியாக அமைய வேண்டும். சிறு வயதிலேயெ வேண்டாத கல்வியாக மாறக்கூடியதாக அமையக் கூடாது. கற்கின்ற சூழல் மாணவர்கள் விரும்பத்தக்க இடமாக மகிழ்ச்சிகரமான சூழலாக அமைவது சிறார்களுடைய கல்விக்கு சிறப்பாக அமையும். இந்த வகையில் இவ் இடத்தில் மிக திறமையான முறையில் இவ் முன்பள்ளியை அமைத்து சிறார்களின் வளர்ச்சிக்கு உதவிய புலம் பெயர் உறவுகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டார். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் கடந்த 19.06.2014 அன்று தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது இவ் நிகழ்வில் எதிர்வரும் உள்ளுராட்சி வாரத்தின் பொருட்டு ஆதன வரி மற்றும் ஏனைய வரிகள் தொடர்பில் இது வரைசெலுத்த தவறியவர்கள் செலுத்தும் சந்தர்ப்பத்தில் 10 சதவீத விலக்களிப்பு வழங்குவதற்கு சபையினர் ஏகமனதாக தீர்மானித்தனர்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் இளைஞர் வெட்டிக் கொலை-
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவரை இளைஞர் குழு ஒன்று வைத்தியசாலைக்குள் புகுந்து நேற்று இரவு வாளால் வெட்டியதில் இளைஞர் பலியாகியுள்ளார். அல்லாரை பகுதியை சேர்ந்த உதயகுமார் அன்பழகன் (வயது 26) என்னும் இளைஞரே பலியாகியுள்ளார். கொடிகாமம் கச்சாய் அம்மன் கோவிலில் நேற்றுமாலை நடைபெற்ற இசை நிகழ்சியை பார்வையிட்ட இரு இளைஞர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து இரு இளைஞர்களும் தத்தம் இளைஞர் குழுவுடன் வந்து கோயிலுக்கு சற்று தொலைவில் வாள்கள், கத்திகள், பொல்லுகளால் மோதிக்கொண்டனர். இம் மோதலில் கு.பிரசன்னா, க.சுகிர்தன், ஞா.குருபரன், உ.அன்பழகன் ஆகிய நால்வர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிலமணி நேரத்தில் வைத்தியசாலைக்குள் புகுந்த இளைஞர்குழு அங்கு சிகிச்சை பெற்றுவந்த உதயகுமார் அன்பழகன்மீது வாள்களால் வெட்டிவிட்டு தப்பிசென்றுள்ளனர். வாள்வெட்டில் உதயகுமார் அன்பழகன் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கெண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டுக்கு எதிரான சக்திகளின் பின்னணியில் புலிகளே உள்ளனர்-மைத்திரிபால-
நாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளின் பின்னணியில் வெளிநாடுகளில் உள்ள புலிகளே இருப்பதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறினேச தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணையின் இறுதியில் நாட்டை பிரிப்பதே அவர்களின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அலவக்கயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிரபாகரனின் மீது கைவைக்கவில்லை என்றால் சர்வதேச விசாரணை தற்போது இல்லை. இந்த சர்வதேச விசாரணையின் பின்னணியில் இருப்பவர்கள் வெளிநாடுகளின் எஞ்சியுள்ள விடுதலை புலி செயற்பாட்டாளர்களே. இந்த நிலையில், இவ்வாறான விசாரணையின் பின்னர் எந்த நாடும் முழுமையானதாக இல்லை. எல்லா நாடுகளும் பிரிந்தே சென்றன. அதுவே வரலாறு. இதனையே விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு-
யாழ். முகாமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியிலுள்ள பற்றைக்காடுகள் துப்பரவு செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த நாட்களில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது 3 எலும்புக்கூடுகளும் 2 எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டதுடன் வெடிபொருட்களும் இதர பொருட்களும் மீட்கப்பட்டன. இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வு மேற்கொள்வதற்கு பற்றைக்காடுகள் தடையாக இருந்தமையினாலேயே அவற்றினை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மிதிவெடிகள் அதிகம் இருப்பதினால் மிதிவெடி அகற்றும் பணியாளர்களின் மூலம் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
வீசாவின்றி பயணம், மோசமான நாடுகள் வரிசையில் இலங்கையும் அடக்கம்-
விசா இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய முடியாத மிக மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் ஹென்லி அன்ட் வீசாவரையறை சுட்டி நிறுவனத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், சோமாலியா, எரித்திரியா, பலத்தீனம், சூடான், நேபாளம், லெபனான், கொசோவோ, சிரியா, தென் சூடான், லிபியா, மியன்மார், ஈரான், வடகொரியா, அங்கொலா மற்றும் டிஜிபோட்டி உள்ளிட்ட நாடுகள் வரிசையில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. குறித்த நாடுகள் தமது நாட்டு பிரஜைகள் சுதந்திரமாக வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் உரிமையை முடக்கி வருவதாக கூறப்படுகின்றது. மிகச் சிறந்த நாடுகள் வரிசையில் பின்லாந்து, சுவீடன், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. குறித்த நாடுகள் வெளிநாட்டுக்க பயணம் செய்யும் தமது பிரஜைகளுக்கு உரிய சுதந்திரத்தை வழங்கிவருகின்றன.