தென்னாபிரிக்க உப ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம்-
தென் ஆபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா, உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து, அவர் இந்த விஜயத்தின்போது பல அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. தென் ஆபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா, வர்த்தகர், சமூக செயற்பாட்டாளர் மாத்திரமன்றி, தொழிற்சங்க தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். 2012ஆம் ஆண்டு முதல் தென் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் உபத் தலைவராக அவர் செயற்பட்டு வருகின்றார். தென் ஆபிரிக்காவின் தேசிய திட்ட ஆணைக்குழுவின் தலைவராகவும் சிறில் ரமபோஷா செயற்படுகின்றார். தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா, சிறைவாசம் அனுபவித்த காலப்பகுதியில், அவரின் விடுதலைக்காக முன்னின்று செயற்பட்டவர்களில், தென்ஆபிரிக்காவின் தற்போதைய உப ஜனாதிபதியும் ஒருவராவார்.
சுவீகரிப்பு நோக்கிலான நில அளவை நடவடிக்கை தடுத்து நிறுத்தம்-
யாழ்ப்பாணம், கீரிமலை, சேந்தான்குளம் மற்றும் திருவடிநிலை ஆகிய பகுதிகளில் 127 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் இன்றுகாலை காணி அளவீடு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாகாண சபை, பிரதேச சபை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறுகையில், ‘திருவடிநிலைப்பகுதியில் 50இற்கும் மேற்பட்ட குடும்பங்களினுடைய 120 ஏக்கர் காணிகளையும், சேந்தாங்குளம் ஆரோக்கியநாதர் தேவாலயத்திற்குச் சொந்தமான 4 ஏக்கர் காணியினையும், மற்றும் கீரிமலையில் 6 குடும்பங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணியும் சுவீகரிக்கும் நோக்கில் நில அளவையாளர்களைக் கொண்டு அளவீடு செய்யும் பணிகள் இன்று மேற்கொள்ளப்படவிருந்தன. இதனை அறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வலி.வடக்குத் தவிசாளர் எஸ்.சுகிர்தன், வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவரும் வலி.வடக்குப் பிரதேச சபை உபதவிசாளருமான சண்முகலிங்கம் சஜீவன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் உள்ளிட்டவர்களுடன் நானும் சென்று காணி அளவீடு செய்ய மேற்கொள்ளப்படவிருந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியிருந்தோம் என்று கூறியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேர் கடற்படையினரிடம் ஒப்படைப்பு-
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேர் காலி துறைமுகத்திறக்கு அழைத்துவரப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இலங்கையின் தெற்கு கடற்பிராந்தியத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ‘சமுதுர’ கப்பலிடம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர்களை ஏற்றிய கப்பல் இன்றுமுற்பகல் காலி துறைமுகத்தை வந்தடைந்ததாகவும் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு அவுஸ்திரேலிய கடற்பாதுகாப்புப் பிரிவினரால் கொகோஸ் தீவுகளுக்கு மேற்கேயுள்ள கடற்பிராந்தியத்தில் கடந்த வாரம் கைப்பற்றப்பட்டது. இவர்களில் 37 சிங்களவர்களும், நான்கு தமிழர்களும் அடங்குவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 153 இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கிறிஸ்மஸ் தீவை நெருங்கிய படகு தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட வேண்டும்-
பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்;பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியான தலையீட்டை செலுத்த வேண்டும் என இந்திய தேசிய கடற்றொழில் நிறுவனம் கோரியுள்ளது. கச்சதீவை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய தேசிய கடற்றொழில் நிறுவனத் தலைவர் எம்.இளங்கோ தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்திய – இலங்கை உயர்மட்ட அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் இந்திய தேசிய கடற்றொழில் நிறுவனத்தின் தலைவர் எம்.இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.
முகமாலையில் மீண்டும் தோண்டும் பணிகள் ஆரம்பம்-
முகமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் இன்று மீண்டும் தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொண்டுவரும் நிலையில் மனித புதைகுழிக்கான எச்சங்கள் காணப்படுமாயின் பொலிசாருக்கு தகவல் வழங்க தீர்மானித்துள்ளதாக மிதிவெடியகற்றும் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் முதல் இப்பகுதியில் உள்ள பற்றைக்காடுகள் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன. மிதிவெடிகள் அகற்றப்படாத பகுதிகள் இன்னமும் உள்ளதால் மிதிவெடி அகற்றும் நிறுவன பணியாளர்களின் ஒத்துழைப்புடன் இச்செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. முகமாலையில் கைவிடப்பட்ட காவலரண் ஒன்றில் கடந்த புதன்கிழமை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் அப்பகுதியில் நிலத்தைத் தோண்டும்போது எலும்புக்கூடு ஒன்றை அவதானித்தனர். இது குறித்து உடனடியாக பளைப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளில் 3 எலும்புக்கூடுகளும் 2 எலும்புத் துண்டு எச்சங்களும் மீட்கப்பட்டன.
மீன்பிடிப் பிரச்சினை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு-
பாக்கு நீரிணைப் பகுதியில் மீன்பிடிப்பதில் நிலவும் பிரச்சினை குறித்து இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இவ்வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பிரீஸ்சிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ்சிற்கும் இடையிலான சந்திப்பில் இது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு கட்டணம் செலுத்தி கச்சத்தீவுப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி பெறுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாக்குநீரிணைப் பகுதியில் இரண்டு நாடுகளினதும் மீனவர்கள் பரஸ்பரம் கைது செய்யப்படுகின்றமை பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. இதேவேளை தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமற்போனோர் தொடர்பில் முல்லைத்தீவில் மூன்றாவது நாளாகவும் விசாரணை-
காணாமற்போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று சாட்சியங்களை பதிவு செய்துள்ளது. ஆணைக்குழுவின் ஐந்தாவது பகிரங்க அமர்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. புதுகுடியிருப்பு பிரதேச செயலகத்தில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற அமர்வுகளின்போது 51பேர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் புதிதாக முறைப்பாடுகளையும் முன்வைத்திருந்தனர் யுத்தம் இடம்பெற்றபோது பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் இதன்போது அநேகமானவர்கள் சாட்சியமளித்திருந்தனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்றையதினம் நடைபெறும் அமர்வில் பங்கேற்று சாட்சியமளிக்குமாறு 12 கிராக உத்தியோகத்தர்கள் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வட்டரக்க தேரருக்கு பிணை-
பொலிஸாரை ஏமாற்றுவதற்காக பொய் முறைப்பாட்டை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரான வட்டரக்க விஜித்த தேரரை, பிணையில் விடுவிக்குமாறு பாணந்துறை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார். 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில். தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை ஏற்கமாட்டேன் எனவும் தான் நிரபராதி எனவும் வட்டரக்க விஜித்த தேரர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
ஞானசார தேரருக்கு நீதவான் அறிவுரை-
சட்டத்தரணிகள் மீது அச்சுறுத்தல் விடுப்பதை தவிர்க்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரா தேரருக்கு கொழும்பு கோட்டை நீதவான் அறிவுரை வழங்கியுள்ளார். தனது கட்சிக்காரர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகும் உரிமை சட்டத்தரணிக்கு உண்டு. அவர்கள் நீதிமன்ற அதிகாரிகளாகவே கருதப்படுகிறார்கள். அவ்வாறானவர்களை அச்சுறுத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு-2, கொம்பனி வீதியிலுள்ள நிப்போன் ஹோட்டலில் ஏப்ரல் 9ஆம் திகதி இடம்பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவை சேர்ந்த உறுப்பினர்கள், அத்துமீறி நுழைந்து வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை ஜீலை 7ஆம் திகதி திங்கட்கிழமை தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு ஜீன் 9ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார்.