புளொட் தலைவர் புளொட் நோர்வே அமைப்பாளர் – நோர்வே அதிகாரிகளுடன் சந்திப்பு-

norway meet 11.07 (1) norway meet 11.07 (2)புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் நோர்வே நாட்டு அமைப்பாளர் ராஜன் ஆகியோர் கடந்த 11.07.2014 வெள்ளிக்கிழமை அன்று நோர்வே நாட்டின் பிராந்திய அலுவல்கள் மற்றும் அபிவிருத்திக்கான மூத்த ஆலோசகர் ரூடில் லங்க லெட்டா மற்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் உதவி இயக்குநர் நாயகம் தூண அலோஸ் ஆகியோருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

ஓஸ்லோவில் அமைந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், தமிழ் மக்கள் தற்போது முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக நோர்வே அதிகாரிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டதுடன், நோர்வே நாடானது தற்போது இலங்கைக்கான உதவிகளை குறைத்திருப்பதோடு, சிறிது சிறிதாக தன்னுடைய கவனத்தை வேறு நாடுகளுக்கு திசை திருப்பியிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி, இதை தாங்கள் மீள் பிரிசீலனை செய்து தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது,

அத்துடன் வடக்கு மாகாண சபையை சரியான முறையில் நடத்திச் செல்வதற்கு பல்வேறு தடைகள் போடப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் விளக்கிக் கூறப்பட்டது. தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான தீர்வினை நோக்கி நகர வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

முக்கியமாக வடகிழக்கின் அபிவிருத்திக்கும், மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி அவர்களை சொந்தக் கால்களில் நிற்பதற்கும் நோர்வே கடந்த காலங்களைப் போல தொடர்ந்தும் பங்களிப்பினைச் செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இவ்விடயங்களை மிகவும் அக்கறையுடன் கேட்டறிந்த நோர்வே அதிகாரிகள், இவை தொடர்பில் தாம் கூடுதல் கவனம் செலுத்தி பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.