புளொட் தலைவர் அவர்களுக்கு பிரான்ஸ் விமான நிலையத்தில் வரவேற்பு-

france il france il  (3)

france il (6)france il  (4)

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கடந்த 16ஆம் திகதி இரவு 10மணியளவில் பிரான்ஸை சென்றடைந்தார். புளொட் தலைவர் தர்மலிங்கம சித்தார்த்தன் அவர்கள் இந்த விஜயத்தின்போது கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களால் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். பிரான்ஸில் பல்வேறு சந்திப்புக்களை முடித்துக்கொண்டு இன்றையதினம் சுவிஸ்லாந்து சென்றிருக்கும் புளொட் தலைவர் நாளை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளார்.

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு-

யாழ். கொய்யாத்தோட்டம் பழைய பூங்கா வீதி சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 19 வயதுடைய அன்ரன் செலஸ்ரா என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழந்ததாக இளம்பெண்ணின் கணவர் பொலிஸாரிற்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து பொலிஸார் அங்கு உடன் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கனடாவின் கோரிக்கை இலங்கை நிராகரிப்பு-

கனேடிய அரசாங்கத்தின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்க வேண்டாம் என கனடா கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள்மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என கனேடிய வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒபராய் கோரியிருந்தார். இவ்வாறான நடவடிக்கைகளின்மூலம் கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவதுடன் ஜனநாயக நெறிமுறைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். இதேவேளை இலங்கைக்கான கனேடிய தூதரகத்திற்கு அரச சார்பற்ற நிறுவனங்களே தகவல்களை வழங்கி வருவதாகவும் இந்நிறுவனங்கள் தொடர்பிலான புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளில் 1,405 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு-

இலங்கை கடற்படையினரால் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 1,405 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 12ம் திகதிவரை 532 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும், 4 மீனவர்களும், 47 படகுகளும் இலங்கை சிறையில் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு மத்திய அரசு மிகவும் முக்கியத்துவம் அளிப்பதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகளையும், பேச்சுவார்த்தைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர்த்துக்கல் பிரதமர் இலங்கைக்கு விஜயம்-

போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பசோஸ் கொயில்ஹோ நாளையதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரவுள்ள போர்த்துக்கல் பிரதமரை விமான நிலையத்தில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வரவேற்கவுள்ளார். இலங்கைக்கான தமது ஒருநாள் விஜயத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பிரதமர் டி.எம். ஜயரத்ன ஆகியோரை போர்த்துக்கல் பிரதமர் கொயில்ஹோ சந்திப்பாரென கூறப்படுகிறது. அத்துடன் காலி கோட்டைக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

தன்ஸானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

தன்ஸானியாவின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பேர்னாட் மெம்பியும் நாளை இலங்கை வருகை தரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இவர் தனது இரண்டு நாள் விஜயத்தில், அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடன், வெளிவிவகார அமைச்சில் இருதரப்பு சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இதன்போது இலங்கைக்கும், தன்ஸானியாவுக்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இணை ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்தகட்ட மீனவர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா இணக்கம்-

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் புதிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இந்திய – இலங்கை ஒருங்கிணைந்த குழுவின் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து இந்திய புதிய அரசாங்கம் தனக்கு உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் இந்தியாவின் புதிய கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து இலங்கையிலோ அல்லது புதுடில்லியிலோ மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகுமெனவும்; அவர் குறிப்பிட்டுள்ளார்.