இறையாண்மையோடு வாழும் உரிமையைத்தான் கோருகிறோம்-இரா.சம்பந்தன்-

sampanthanநாட்டின் இறையாண்மையின் கீழ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் வாழ்வதற்கான உரிமையைத்தான் நாம் கோருகின்றோம். நாட்டைப் பிரித்துத் தருமாறு நாம் கேட்கவில்லை. இந்நாட்டின் குடிமக்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையுடன் தமிழ் மக்களும் வாழ்வதற்கான உரிமையைத்தான் கேட்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் 34 ஆவது வருட சிறப்பு மாநாடு அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் நாம் பிரிவினையைக் கோரவில்லை. அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழ் மக்கள் தமது நிலங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையே கோருகின்றோம். சிங்கள மக்களுடன் இணைந்து பெறவேண்டியவற்றை நாம் பெறவேண்டும். அதற்காக விட்டுக்கொடுக்க முடியாதவற்றை நாம் விட்டுக்கொடுக்கவே முடியாது. வன்முறைப் போக்கை நாம் விரும்பவில்லை. எமது மக்கள் வாழ்ந்த இடத்தில் எமது இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கங்கள் பகிரப்பட்டு வாழ அனுமதிக்கப்பட வேண்டும். இதனையே நாம் உறுதியாக கோருகின்றோம். அதிகாரப் பகிர்வில் நாம் இராணுவ அதிகாரத்தையோ அல்லது விமானப்படை அதிகாரத்தையோ, வெளிவிவகார அதிகாரத்தையோ கேட்கவில்லை. எமது நிலம், நீர், சட்டம், விவசாயம், கல்வி, கடற்றொழில், சிறுகைத்­தொழில், பொருளாதாரம் மற்றும் எமது பாதுகாப்பு போன்ற அதிகாரங்களே எமக்குக் கிடைக்க வேண்டும் எனக் கோருகின்றோம். இதேபோல் சமூக, கலை, கலாசாரத்தின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு வேண்டும். அதில் விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லை. இதுதான் எமது நிலைப்பாடு. நாம் சிங்களவரின் உரிமையைக் கேட்கவில்லை. எமது உரிமையைத்தான் கேட்கின்றோம்.. தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சிங்கள மக்களை இனவாதப் போக்கில் வழிநடத்தும் இந்த அரசாங்கத்தையே நாங்கள் எதிர்க்கின்றோம். அதன் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி வருகின்றோம். இன்று இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையின மக்களில் 88 சதவீதமான மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். அதனை இந்த அரசாங்கம் செய்ய வேண்டும். சிங்கள மக்களிடம் இனத்துவேசத்தைத் திணித்து தமிழர்களை வெறுப்படைய வைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிட வேண்டும். இந்த நாட்டை பிரிவினைக்கு உட்படுத்தாமல் அனைவரும் ஒன்றிணைந்த இறையாண்மையின் கீழ் வாழ விரும்புகின்றனர். இதனை அரசாங்கம் உணர்ந்து அனைவருக்கும் ஏற்ற தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.