யாழ். அச்சுவேலியில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்-
எமது காணிகளை அளவீடு செய்ய நாம் அனுமதிக்க மாட்டோம் என கூறி நிலஅளவை திணைக்களத்தின் வாகனத்தினை சுற்றிநின்று காணி உரிமையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அச்சுவேலியில் இராணுவ முகாம் அமைப்பதற்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்தது. அச்சுவேலி இராசவீதியில் அமைந்துள்ள பொதுமக்களுக்கு சொந்தமான 53 பரப்பு காணியினையே அளவீடு செய்யும் பணிகள் இன்றுகாலை பொலிஸ் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட இருந்தது. கடந்த ஜூன் 2ம்திகதி இக் காணிகளை அளவீடுசெய்ய முற்பட்டபோதும் காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினால் அப் பணிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில் இன்று மீண்டும் பொலிஸ் பாதுகாப்புடன் நில அளவையாளர்கள் அழைத்துவரப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தது. அதற்கு காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி காணி அளவீடு செய்ய முயன்றபோது காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நிலஅளவை திணைக்களத்தின் வாகனத்தில் இருந்து நிலஅளவை உபகரணங்களை எடுக்கவும் வாகனத்தை நகரவும் அனுமதிக்க மாட்டோம் என கூறி வாகனத்தை சுற்றி அமர்ந்து போராட்டத்தை நடாத்தினர். நிலஅளவையாளர்கள் அவர்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் இல்லாது விடின் அவர்கள் பணிக்கு இடையூறு விளைவித்ததாக கூறி உங்கள் அனைவரையும் கைது செய்வோம் எனவும் மிரட்டினர். எங்களை கைது செய்த பின்னர் காணி அளவீட்டை மேற்கொள்ளுங்கள் என காணி உரிமையாளர்கள் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணித்தியாலங்கள் காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இன்றும் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படாமல் நில அளவையாளர்கள் திரும்பி சென்றனர். காணி உரிமையாளர்களின் இப் போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிவடக்கு மீள் குடியேற்ற தலைவர் ச.சஜீவன் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கிஷோர் ஆகியோர் காணி உரிமையாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.