கூட்டமைப்பு பதிவு தொடர்பில் இறுதி முடிவு எதுவும் இல்லை-இரா.சம்பந்தன்-

1719856666tna3தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதியப்படுமா என்பதை அதன் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்துவாரென யாழில் நேற்று இடம்பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் சிறப்பு மாநாட்டின்போது எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் அவர் உரையாற்றுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டுமென திருமலை நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் மந்தகதியிலேயே நடைபெற்று வருகிறது. எனவே இப்பதிவு விடயத்தை விரைவுபடுத்த வேண்டும். அதற்காக தமிழ் தேசிய சபையொன்றை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுபற்றி இரா.சம்பந்தன் அவர்கள் உரையாற்றுகையில், கூட்டமைப்பு பல்வேறு கட்சிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இங்கு கருத்து வேறுபாடு இல்லையென நான் கூறமாட்டேன். இருப்பினும் எமக்குள் அதனைப் பேசித் தீர்த்து ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகின்றோம். இந்த ஒற்றுமையின் வெளிப்பாட்டால்தான் சர்வதேச சமூகம் அரசாங்கத்தை எம்முடன் பேசுமாறு கூறியுள்ளது. இவை ஒற்றுமையின் அடைப்படையிலும் தமிழ் மக்கள் விசுவாசம் வைக்கின்ற அமைப்பு இதுதான் என ஜனநாயக ரீதியில் அடையாளம் காட்டியபடியாலும் கிடைத்த வெற்றி. இதனைப் பலப்படுத்த வேண்டியது எமது கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க……

சுப்ரமணியம் சுவாமி இலங்கைக்கு விஜயம்-

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியம் சுவாமி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த வாரத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வரும் சுப்ரமணியம் சுவாமி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் அவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவகத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் ‘மோடியின் கீழ் இந்தியா’ என்ற தொனிப்பொருளில் உரையொன்றையும் சுப்ரமணியம் சுவாமி ஆற்றவுள்ளார். இலங்கையின் அரசியல் சூழ்நிலை, மீனவர் பிரச்சினைகள் இருதரப்பு உறவுகள் என்பன குறித்து சுப்ரமணியம் சுவாமி இலங்கையில் பேச்சு நடத்துவாரென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமாகாண ஆளுநராக ஜீ.ஏ சந்திரசிறி பதவியேற்பு-

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்றுகாலை இடம்பெற்றது. மும்மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் ஆளுநர் தனது இரண்டாவது பதவியேற்புக் காலத்தினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஆளுநரும் அவரது பாரியாரும் முன்பள்ளி சிறார்களுக்கு பரிசில்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில், வடமாகாணப் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, யாழ்.மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ரூபினி வரதலிங்கம், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.