17ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வு-

நியாயமான சமூக முறைமைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் மற்றும் லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரணவுக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், விருப்பு வாக்கு முறையை ரத்து செய்தல் மற்றும் 17ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. குறித்த கலந்துரையாடலில் சட்டத்தரணிகளான எல்மா பெரேரா மற்றும் ஜே.சி.வெல்யமுன ஆகியோரும் தமது யோசனைகளை முன்வைத்திருந்தனர். நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் விருப்புவாக்கு முறை என்பன இலங்கையின் அரசியல் கட்டமைப்புக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக சோபித்த தேரர் சந்திப்பின்போது சுட்டிக்காட்டியுள்ளார் இதேவேளை, 17ஆவது அரசியலமைப்பு திருத்தம் செயலிழக்கச் செய்யப்பட்டதை அடுத்து நிர்வாகம், காவல்துறை சேவை, தேர்தல் நடவடிக்கைகள், நீதிமன்ற கட்டமைப்பு என்பன பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளன. எனவே, இந்த அடிப்படை விடயங்களை ஆராய்ந்து நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். எனினும், இது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ, வேறு சதிச் செயல்களுக்கான திட்டமோ அல்லவென நியாயமான சமூக முறைமைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண, முன்வைக்கப்பட்ட அடிப்படை விடயங்கள், யோசனைகள் தொடர்பில் கூடியளவு இணக்கம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். எனினும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக ஆராயவேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரது வீடு உடைக்கப்பட்டு ஆவணங்கள் எரிப்பு-

chavakachcheri land_docment_fire_002 land_docment_fire_005யாழ். சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீடு இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு அங்கிருந்த அவரது முக்கிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் ரூபாய் பணம் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. யாழ். எழுதுமட்டுவாழ் பிரதேசத்தில் காணி சுவீகரிக்கும் நோக்குடன் இன்று காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்தபோது அதற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராசையா தெய்வேந்திரம்பிள்ளை என்பவரது வீடே உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த அவரது முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் என்பன எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் இராசையா தெய்வேந்திரம்பிள்ளை தெரிவிக்கும்போது, இந்த வீட்டில் நானும் எனது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வசித்து வருகின்றோம். இன்று எனது மனைவியும் மகனும் கோவிலுக்கு சென்றிருந்தார்கள். நான் வீட்டை பூட்டிவிட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். போராட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது எனது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து நான் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது எனது முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் இருந்த பையை காணவில்லை அதனை திருடிச் சென்று விட்டார்கள் என எண்ணி வீட்டை சுற்றி பார்த்தபோது வீட்டின் பின்புறம் அவையனைத்தும் தீ மூட்டி எரிக்கப்பட்டிருந்தது. முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து சென்று விட்டு ஏனையவற்றையே அவர்கள் தீயிட்டு எரித்திருக்கலாம் என சந்தேகிக்கின்றேன். நான் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னணியிலே இச்சம்பவம் நடைபெற்றிருக்கின்றது என்றே நம்புகின்றேன். இச்சம்பவம் எனது உயிருக்கு அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடாகவே கருதுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்;. இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினரால் கொடிகாம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவ முகாம் காணியை கையளிக்க கோரி போராட்டம்-

iraanuva muhaam kaaniyaiயாழ். எழுதுமட்டுவாழ் பிரதேசத்தில் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள 50 ஏக்கர் காணியினை இராணுவ முகாமுக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணி இன்று காணி உரிமையாளரினால் தடுத்து நிறுத்தபட்டுள்ளது. எழுதுமட்டுவாழ் பிரதேசத்தில் இராணுவத்தின் 52 ஆவது படைப்பிரிவின் முகாம் அமைந்துள்ள காணியினை சுவீகரிபதற்காக அக் காணியை இன்றைய தினம் அளவீடு செய்யவுள்ளதாக காணி உரிமையாளருக்கு நில அளவை திணைக்களத்தால் கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அக் காணி உரிமையாளரான பெண்ணொருவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து காணி அளவீட்டு பணியை முன்னெடுக்க வேண்டாம் என கோரி போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு போராடினர். இவர்களின் போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொடிகாம பொலிசார் காணி உரிமையாளரான பெண்ணிடம் காணி அளவீட்டுக்கு நாம் அனுமதிக்க மாட்டோம் என கூறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரினர். காணி அளவீட்டு பணிக்கு எதிராக காணி உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனால் நில அளவையாளர்கள் காணி அளவீட்டு பணியை கைவிட்டு திரும்பினர். குறித்த 50 ஏக்கர் காணியும் 1969ம் ஆண்டு தற்போது காணி உரிமையாளராக இருக்கின்ற பெண்ணின் கணவனால் வாங்கப்பட்டு அவரது பெயரில் எழுதப்பட்டது. அதன் பின்னர் அடுத்து வந்த காலப்பகுதியில் அவர் தனது 7 பெண் பிள்ளைகளுக்கும் ஒருவருக்கு தால 5 ஏக்கர் வீதம் 35ஏக்கர் காணியினை எழுதிக்கொடுத்துள்ளார். இவர்கள் 2000ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பின்னர் மீண்டும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டபோது இவர்களின் காணியில் சில ஏக்கர்களில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த 2012ம் ஆண்டு அந்த இராணுவ முகாம் விஸ்தரிக்கப்பட்டு பாரிய படைமுகாமாக அமைக்கப்பட்டது. இப் படைமுகாமினை கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.