அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி-

UNPஅரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டார். ரகசிய காவல்துறையினருடாக அரச சார்பற்ற நிறுவனங்களில் விபரங்களை பெற்றுகொள்ள முற்பட்டதற்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் அரச பாதுகாப்பிற்கு அவர்களால் எவ்வாறு பதிப்ப ஏற்படும் என்றும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் ரணில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் டி எம் ஜயரத்ன, இவர்கள் நாட்டை சீர் குலைக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து இவர்கள் இவ்வாறு செயற்படுவதற்கு ஒரு போதும் இடமிளிக்க கூடாது எனவும் பிதமர் குறிப்பிட்டார்.

வவுனியா பெரியகோமரசன்குளம் பகுதியில் கிறிஸ்தவ சிலைகள் உடைப்பு-

vavuniyaவவுனியா பெரியகோமரசன்குளம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களின் புனித தலமாக கருதப்படும் கல்வாரி மலையிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வாரி திருத்தலத்தின் சிலைகள் நேற்றிரவு விசமிகள் சிலரால் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த கல்வாரி திருத்தலத்தில் 15 தொகுதிகளாக சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் எட்டு சிலைகளே விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யூதர்களின் சிலைகளே அதிகமாக உடைக்கப்பட்டுள்ளதுடன், மாதாவின் உருவச்சிலையின் கை ஒன்றும் உடைக்கபட்டுள்ளது. இது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளவாலை குழு மோதலில் ஏழு பேர் படுகாயம்-

யாழ். இளவாலை வசந்தபுரத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற குழு மோதலில் காயமடைந்த ஏழுபேர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வசந்தபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் ரஞ்சித்ராஜ் (32வயது), மகேந்திரன் அசோக்குமார் (30வயது), மகேந்திரன் இராஜ்குமார் (28வயது), மார்க்கண்டு கருணானந்தன் (21வயது), ஆனந்தராசா கபிலன் (23வயது), பூதப்பிள்ளை சுரேஸ்குமார் (31வயது), இந்திரஜித் தவனேசன் (32வயது) ஆகிய 7 பேருமே படுகாயமடைந்துள்ளனர். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கால்ப்பந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தினைத் தொடர்ந்து, வசந்தபுரத்தில் இந்த குழு மோதல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.