புளொட் தலைவர், சுவிஸ்வாழ் தமிழ்மக்களுடன் கலந்துரையாடல்..!

DSC03462புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கடந்த 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் மாநகரில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.  இக்கலந்துரையாடலில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்களுடன் புளொட்டின் ஜெர்மன் கிளை அமைப்பாளர் திரு ஜெகநாதன், லண்டன் நியூ காம் நகரசபையின் கவுன்சிலரும், உதவி மேயருமான திரு போல் சத்தியநேசன், புளொட்டின் சுவிஸ்கிளை முக்கியஸ்தர் சுவிஸ்ரஞ்சன், ஆகியோரும் முன்னிலை வகித்திருந்தனர்.

 (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

இந்த விசேட பொதுக்கூட்டத்தில், ‘வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையம், கல்வியையும் முன்னேற்றுவதற்கான வழிவகைகள், உதவித் திட்டங்கள், தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக’ விரிவாக கலந்துரையாடப்பட்டது. ‘புளொட்’ சுவிஸ், ஜேர்மன் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு விதமான கருத்துக்களைக் கொண்ட, பல்வேறு தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள், சிறுவர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் வருகை தந்திருந்த மேற்படி பொதுக்கூட்டத்தில், பொதுமக்களால் பலதரப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டு அவை தொடர்பான சந்தேகங்களுக்கும் தீர்த்துக் கொள்ளப்பட்டது.  கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக புளொட் சுவிஸ்கிளை முக்கியஸ்தர்களுள் ஒருவராகிய சுவிஸ்ரஞ்சன் அவர்கள், அனைவரையும் வரவேற்று ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். 

சுவிஸ் லுகானோவிலிருந்து இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த திரு மகேந்திரன் அவர்கள் கருத்துக் கூறுகையில், ‘தமிழ்த் தலைமைகள் புலம்பெயர் மக்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமெனவும், அனைத்து இயக்கங்களும், அமைப்புக்களும் இணைந்து புலம்பெயர் பகுதியில் ஒரு சிறந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டுமெனவும்’ கூறியதுடன், அது தொடர்பிலான பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து புளொட்டின் ஜெர்மன் கிளை அமைப்பாளர் திரு. ஜெகநாதன் அவர்கள் கருத்துரைக்கையில், ‘இலங்கையின் வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அவலத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதுடன், பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்ற முன்னாள் புலி உறுப்பினர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் உதவ வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

திரு. போல் சத்தியநேசன் அவர்கள் கருத்துக் கூறுகையில், ‘புலம்பெயர் சமூகத்தினர் பொருளாதார ரீதியிலும், கல்வியறிவிலும் படிப்படியாக முன்னேறி இன்று தாங்கள் வாழும் நாடுகளில் பொருளாதாரத்திலும் கல்வியிலும் சாதனை படைப்பவர்களாக, பல துறைகளிலும் செல்வாக்கு செலுத்துபவர்களாக மாறி வருகின்றார்கள். ஆகவே எம்மை நாமே பலவீனமானவர்களாக பார்க்கக்கூடாது.

எமது தாயக உறவுகளுக்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது, ஊரிலுள்ளவர்கள் அதனைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று நாம் அக்கறையில்லாதிருக்கக் கூடாது. எமது உறவுகளை, ஊரை வளப்படுத்த நாம் தான் முன்னிற்க வேண்டும். யாராவது செய்வார்கள், எவராவது பார்ப்பார்கள் என இருப்போமானால் நாம், நமது இனம், பண்பாடு என பேசுவதற்குகூட அருகதையற்றவர்களாகி விடுவோம்.

எமது உரிமைகளை பெற நாம் தொடர்ந்து போராட வேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஜனநாயக ரீதியில் எமது உரிமைகளைப் பெறவும், எமது மக்களின் வாழ்வையும் அபிவிருத்தியையும் முன்னேற்றுவதற்கும் புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலிருந்து தமிழர்களுக்கான அமைப்பொன்றினை உருவாக்க வேண்டுமெனவும்’ தெரிவித்தார்.

அத்துடன் ‘அதேபோல் எமது சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலம் என்பன இளம் தலைமுறையினரின் கைகளிலேயே தங்கியுள்ளதென்பதால் இளம் சமூதாயத்தை நல்லவழியில் உருவாக்க வேண்டுமெனவும்’ சுட்டிக் காட்டினார்.

புளொட் தலைவர் திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்துக் கூறுகையில்,

‘வெளிநாடுகளில் இருக்கின்ற புலம்பெயர் மக்கள் இன்று முக்கியமாக இரண்டு விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒன்று மாகாண சபை என்ன செய்கின்றது என்பது, மற்றையது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்பதாகும்.
மாகாணசபை ஒரு பலம்பொருந்திய சபையாக இயங்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மக்கள் எல்லோரும் மிகவும் உற்சாகமாகவே வாக்களிப்பில் பங்குகொண்டார்கள். மாகாணசபை தம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் என்றே மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் நாங்கள் ஒரு அதிகாரமற்ற மாகாண சபையிலேயே பதவியேற்றிருக்கின்றோம். இந்த மாகாணசபையை முழுமையாக இயங்க விடாமல் அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. நாங்கள் ஒரு உண்மையை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.. நாங்கள் சபைக்குப் புதியவர்கள். ஆகவே இந்த சபையை சரியாக இயங்க வைப்பதற்கு ஆறுமாதங்களோ ஒரு வருடமோ தேவைப்படுகின்றது. இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றோம். பல நியமச் சட்டங்களை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றோம். இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி எமது மக்களுக்கும், பிரதேசத்திற்கும் செய்யக் கூடியவற்றை செய்ய ஆரம்பித்துள்ளோம்’.

மேலும், ‘தமிழ் மக்களுடைய தேவைகளை நிச்சயமாக அரசு நிறைவேற்றாது என்பது எங்களுக்குத் தெரியும். அதற்காக ஒரு நிதியத்தை உருவாக்க புலம்பெயர் மக்களின் உதவியினை எதிர்பார்த்துள்ளோம். அந்த உதவிகளின் மூலம் எமது மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் குறிப்பாக சுயதொழில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய உதவிகளைச் செய்து அவர்களை வாழ வைக்க வேண்டியது எங்களுடைய கடமை. அதை நிறைவேற்றுவதற்கு சபை நிச்சயமாக முயற்சிகளை எடுக்கும்.

முதலமைச்சர்கள் அவர்கள், மிகவும் கவனமாகவும், அக்கறையாகவும் சில வேலைகளைச் செய்து வருகின்றார். அவர் அந்தக் கடமைகளை சரியாக நிறைவேற்றுவார் என்கின்ற நம்பிக்கை சபையிலே இருக்கின்ற எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது.

அத்துடன் புலம்பெயர் மக்களும் இப்படியான உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டுமென்பதுடன், தாங்கள் வாழும் நாடுகளின் அரசியல் தலைமைகளினூடாக தமக்கிருக்கும் அரசியல் செல்வாக்கைச் செலுத்தி தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கு இலங்கையரசு மீது அழுத்தத்தை கொடுக்க வேண்டுமென்றும்’ கேட்டுக் கொண்டார்.

இதேவேளை சுமார் மதியம் இரண்டு மணி முதல் மாலை ஆறு மணிவரை நடைபெற்ற தமிழ் மக்களுடனான பகிரங்க கலந்துரையாடலுக்கு முன்னர், காலை பத்து மணிமுதல் ‘புளொட்’ சுவிஸ், ஜெர்மன் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களுடன் ஓர் கலந்துரையாடலிலும் ‘புளொட்’ தலைவர் ஈடுபட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.

இதேவேளை தமிழ் மக்களுடனான பகிரங்க கலந்துரையாடலின் போது லங்காசிறீ, ஆதவன், அதிரடி, தீபம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களின் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டதுடன் தனிப்பட்ட ரீதியிலும் ‘புளொட்’ தலைவரிடம் செவ்வி கண்டனர்.

DSC03466.DSC03468.DSC03465.DSC03460.DSC03459.DSC03474.DSC03473.