ஒன்றுபட்டு பொது வேலைத்திட்டத்தின்கீழ் முன்னேறிச் செல்வதே இறந்தவர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும்-ஜி.ரி.லிங்கநாதன்-

20140716_094140நாம் ஒன்றுபட்டு ஒரு பொது வேலைத்திட்டத்தின்கீழ் உடனடியாக அடுத்தகட்ட நகர்வை நோக்கி முன்னேறிச் செல்வதுவே நாம் இறந்தவர்களுக்கு செய்யும் ஒரு மிகப்பெரிய நன்றிக்கடனாகவும், அஞ்சலியாகவும் இருக்கும் என புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியாவின் முன்னைநாள் நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 16.07.2014 புதன்கிழமை அன்று புளொட்டின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ஆம் திகதியிலிருந்து எமது மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுதினமான 16ஆம் தி;கதிவரையில் வீரமக்கள் தினமாக நாங்கள் அனுஷ்டித்து வருகின்றோம். இற்றைக்கு 25ஆண்டுகளுக்கு முன்னர் எம்மைவிட்டுப் பிரிந்த எங்களுடைய செயலதிபர் மற்றும் அமரர் அமிர்தலிங்கம் மற்றும் ஏனைய இயக்கத் தலைவர்களான பத்மநாபா, சிறீ சபாரட்ணம், தங்கத்துரை, அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், அனைத்தியக்க போராளிகள் மற்றும் பொதுமக்களின் இழப்புக்களுக்கு மத்தியிலும் எங்களுடைய மக்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வையோ அல்லது ஒரு அமைதியான வாழ்வினையோ பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் இன்றைக்கு நாங்கள் இருக்கின்றோம் உண்மையில் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ் தரப்புக்கிடையிலான ஜனநாயக பண்புகள் அல்லது ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படாமையே எங்களுடைய போராட்டம் தோல்வியுற்றமைக்கு மிக முக்கியமான காரணியாக இருக்கின்றதென்பதை நாங்கள் விளங்கிக் கொள்ளுகின்றோம். தமிழர் தரப்பிலே இருக்கின்ற சகல கட்சிகளும் முதலில் உட்கட்சி ஜனநாயகத்தை உருவாக்கி கடந்தகால தவறுகளை விமர்சனத்திற்கு உள்ளாக்கி அதிலிருந்து மீண்டு பின்பு ஆக்கபூர்வமான ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றிணைந்து ஒரே குரலில் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும்போதுதான் ஒரு நிரந்தர அமைதியையும் எங்களுடைய மக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியும் என்பதுடன் எங்களுடைய மக்களின் உரிமைகளையும், நாளுக்கு நாள் பறிபோகின்ற எங்களுடைய நிலங்களையும் எங்களுடைய கலை, கலாச்சார விழுமியங்களையும் பாதுகாக்கவும் முடியும். எனவே இனிவரும் காலங்களிலாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகி;க்கும் கட்சிகள் மற்றும் இதர தமிழ் தரப்புக்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளைச் செய்வதே எங்களுடைய இறந்த மககளுக்கும் இறந்த போராளிகளுக்கும் நாம் செய்கின்ற ஒரு கைமாறாக இருக்கும் என்பதுடன், அனைத்து பொதுமக்கள் போராளிகளின் சார்பாக நாம் ஒன்றுபட்டு ஒரு பொது வேலைத்திட்டத்தின்கீழ் உடனடியாக அடுத்தகட்ட நகர்வை நோக்கி முன்னேறிச் செல்வதுவே நாம் இறந்தவர்களுக்கு செய்யும் ஒரு மிகப்பெரிய நன்றிக்கடனாகவும், அஞ்சலியாகவும் இருக்கும். என்றார்.