யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் மாணவர் குழுக்களிடையே மோதல்-

vavuniya_student_002யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர் வியாபாரக் கற்கைகள் பீடத்தின் இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையே இன்று முற்பகல் இம்மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் காயமடைந்த ஒரு மாணவி உட்பட மூன்று மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மனித உரிமை குறித்த அரச செயற்பாட்டில் திருப்தியில்லை-

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்கள் குறித்து திருப்திப்பட முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் சில குறிப்பிடத்தக்க வகையில் இருப்பினும் அநாவசிய செயற்பாடுகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக அவ் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இச் செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு உதவுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நீதிச் செயலாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார புகலிடக் கோரிக்கையாளர்களே அதிகம் – ஸ்கொட் மொரிசன்-

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில் அதிகமானோர் பொருளாதாரப் புகலிடக் கோரிக்கையாளர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து அண்மையில் கடலில் வைத்து மீட்கப்பட்ட 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களாக கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மேற்கு அவுஸ்திரேலியாவின் குர்டெய்ன் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இப் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் விரைவில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர், படகில் பயணித்த இந்தியப் பிரஜைகளை மீளவும் அழைத்துக்கொள்ள இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளது, இந்தப் படகில் பயணித்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்தியாவில் நீண்டகாலம் தங்கியிருந்த இலங்கையர்கள் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது இந்நிலையில் ஆபத்துக்கள் காரணமாக இவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரவில்i. இவர்கள் பொருளாதார புகலிடக் கோரிக்கையாளர்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பில் மன்னாரில்அடுத்த கட்ட விசாரணை-

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தமது அடுத்த அமர்வுகளை மன்னாரில் நடத்தத் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஆகஸ்ட் 8ஆம், 9ஆம் திகதிகளில் மாந்தை மேற்கிலும், 10ஆம் திகதி மன்னாரிலும், 11ஆம் திகதி மடுவிலும் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த ஆணைக்குழுவானது முதற்தடவையாக மன்னாரில் அமர்வுகளை நடத்தி மக்களிடம் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் இடம்பெற்றதா என்பது தொடர்பிலும் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது. சுயாதீனமான நேரடி உள்ளக விசாரணைகளை நடத்தி அது தொடர்பான அறிக்கையை அரசாங்கத்திடம் ஒப்படைக்க எண்ணியுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி ஆணைக்குழுவிடமும் சாட்சியமளிக்க எரிக்சோல்ஹெய்ம் தயார்-

இலங்கை அரசு அமைத்துள்ள ஆணைக்குழு முன்பாகவும் சாட்சியமளிக்கத் தயாராகவே இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார் நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம். ‘என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எனக்குத் தெரிந்தவற்றை யார் முன்னிலையிலும் தெரிவிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்” என்று அவர் கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. அந்த விசாரணைக்குழு முன்பாகச் சாட்சியமளிப்பதற்குத் தயார் என எரிக் சொல்ஹெய்ம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இலங்கை அரசு காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகளை விரிவுபடுத்தியதுடன், அதற்கு ஆலோசனை வழங்க வென சர்வதேச நிபுணர்கள் மூவரை நியமித்தது. அதையடுத்தே எரிக் சொல்யஹய்ம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ‘போர்க்குற்றச் செயல்கள் மற்றும் காணாமற்போதல் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைகளில், தேவை ஏற்படின் என்னால் பங்களிப்புச் செய்ய முடியும்” என்று சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.