டெக்ஸாஸூக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர் உள்ளிட்ட குழு கைது-
இலங்கையர்கள் உட்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் சிலர் மெக்சிக்கோவில் இருந்து டெக்ஸாஸ் நகருக்குள் நுழைய முற்பட்டவேளை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுல் பங்களாதேஷ் மற்றும் நேபாளப் பிரஜைகளும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. ரியோ கிரான்டே கங்கையின் ஊடாகவே இக்குழு டெக்ஸாஸுக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளது.
விமல் வீரவங்சவின் கட்சி தனித்துப்போட்டி-
வீடமைப்பு, பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரசங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஊவா மாகாண சபைத்தேர்தலில், தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துரைக்கும்போது அமைச்சர் விமல் இதனைக் கூறியுள்ளார். இதற்கமைய பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தேசிய சுதந்திர முன்னணி தனியாக வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பான வேட்புமனுத் தாக்கல் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை முதல் ஓகஸ்ட் 6ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் 50 பேர் யாழில் கைது-
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 50பேரை யாழ். நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் இன்று அதிகாலை கைதுசெய்ததாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். மேற்படி மீனவர்களை கைதுசெய்த காங்கேசன்துறை கடற்படையினர், தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மேற்படி மீனவர்களின் 02 நாட்டுபுறப் படகுகள் உட்பட 07 படகுகள் கைப்பற்றப்பட்டதாகவும், கைதானோரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசுடன் பொதுபல சேனாவுக்கு தொடர்பு – அமெரிக்கா-
பொதுபலசேனா அமைப்புக்கு தற்போதைய அரசுடன் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளனது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்ட 2013ஆம் ஆண்டுக்கான சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரியினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள சிறுபான்மை ஆகமங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவதாகவும், ஆகமத்தளங்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுபல சேனா அமைப்பு மற்றும் ராவண பலாய அமைப்பு எப்பவை பற்றியும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் வலுக்கட்டாயமாக ஆகமங்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாகவும், அதனை சாதாரண மக்கள் எதிர்ப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.