இறுதி யுத்தத்தில் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை திரட்ட நடவடிக்கை-
இறுதிக்கட்ட யுத்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணிகளை காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. இதற்கமைய இறுதிக்கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைகளிலிருந்து இருந்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் ஒரு கட்டமாக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் புல்மோட்டை வைத்தியசாலைக்கான கண்காணிப்பு விஜயத்தை நேற்று மேற்கொண்டதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாஸ கூறியுள்ளார். இதன்போது யுத்தத்தால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் ஆணைக்குழு கூடியபோது மக்கள் அளித்த சாட்சியங்களுக்கு அமைய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முல்லைத்தீவு மற்றும் புல்மோட்டை பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகவும், எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வுகள் மன்னார் மாவட்டத்தில் அடுத்தமாதம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வலிமேற்கில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு-
யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச 2014 புலமைப்பரிசிலுக்கு தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது ஏற்பாட்டில் கடந்த 26.07.2014 சனிக்கிழமை அன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் புலமைச் சுடர் மற்றும் ஒளியரசி மாதாந்த சஞ்சிகையினரால் நடாத்தப்பட்டது. இவ் நிகழ்வானது யாழ்ப்பாணக் கல்லூரி ஒட்டலி மண்டபத்தில் கல்லூரி அதிபர் வண கலாநிதி டி.சொலமன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் உதயன் குழும பிரதம நிறைவேற்று பணிப்பாளரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுமான கௌரவ. ஈ.சரவணபவன் அவர்களும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், புலமைச் சுடர் ஆசிரியர் ஜனதன், மாணிப்பாய் பிரதேச சபைத் தவிசாளர் திரு ஜெபநேசன் மற்றும் வளவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் 1000த்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாக புதிய படகு கொள்வனவு-
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையை தவிர்ப்பதற்காக ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கக் கூடிய 60 இலட்சம் ரூபா பெறுமதியான படகு ஒன்றை இராமேஸ்வரம் மீனவர்கள் கொள்வனவு செய்துள்ளனர். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே ஏற்கனவே இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தன. இதன்போது இந்திய மீனவர்கள் இழுவை முறையிலான மீன்பிடியை காலக் கிரமத்தில் கைவிடவேண்டும் என இலங்கை மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் எவ்வாறாயினும் தமிழக மீனவர்கள் இழுவை மீன்பிடி தொழிலை கைவிட முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்ததால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான இராமேஸ்வரம் மீனவர்களின் இந்த முயற்சி இலங்கை கடற்பரப்பிற்குள் அவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதற்கு காரணமாக அமையலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு கோரி தமிழகத்தில் மீனவர்கள் சிலர் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி-
சுகாதார ஊழியர்கள் சிலர் கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாடடப் பேரணியால் கொழும்பு நகர மண்டபம், லிப்டன் சுற்றுவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. தேசிய வைத்தியசாலை அருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி லிப்டன் சுற்றுவட்டம் ஊடாக அலரிமாளிகை வரை முன்னெடுக்கப்பட்டது. சம்பள முரண்பாட்டினை நீக்குமாறும், நிலுவை சம்பளத்தை வழங்குமாறும் வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று காலை பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர். இந்த பணி பகிஷ்கரிப்பிற்கு இணையாக கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் ஒருங்கிணைந்த தொழிற்சங்க குழுவின் இணை ஏற்பாட்டாளர் தீபிகா விஜேசூரிய தெரிவித்துள்ளார். 27 பிரிவுகளைச் சேர்ந்த 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனிஷ்ட ஊழியர்கள் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ள சுகாதார ஊழியர்களில், நோயாளர் விடுதி எழுதுவினைஞர், உணவு கண்காணிப்பாளர், தொலைபேசி இயக்குனர், மின் தூக்கி இயக்குனர், உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடும் ஊழியர்கள் அடங்குகின்றனர். இந்தப் பணிப்பகிஷ்கரிப்பினால் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக வலி மேற்கு தவிசாளரின் ஏற்பாட்டில் விசேட பூஜை-
யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களது ஏற்பாட்டின் பிரகாரம் கடந்த 25.07.2014ம் வெள்ளிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் 2014 உயர்தர மாணவர்களின் பரீட்சை வெற்றி வேண்டி சித்தன்கேணி சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை ஒழுங்கு செய்யப்பட்டது. இவ் நிகழ்வில் ஏராளமான பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை நிகழ்வில் மாணவர்களது உயர்தர பரீட்சைக்குரிய அனுமதி அட்டை மற்றும் எழுது கருவிகள் பூஜை நிகழ்வில் வைக்கப்பட்டு ஆசீர்வாதத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனு கையேற்பு ஆரம்பம்-
ஊவா மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட செயலாளர் அலுவலங்களில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இன்றையதினம் முதல் ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்படவுள்ளன. இதனையடுத்து, தேர்தல்கள் ஆணையாளரினால் தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து அறிவிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்றுமுற்பகல் 1.30மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஊவா மாகாண தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பின் போது ஏற்படும் பிரச்சினைகள், தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. வேட்புமனு கையளிப்பின் பின்னர், சில கட்சிகள் போக்குவரத்து தடங்கல் ஏற்படும் வகையில் பேரணிகளை நடத்துவது குறித்து இதன்போது விஷேட அவதானம் செலுத்தப்படட்டதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இலங்கையரை இனங் காண விஷேட நடவடிக்கை –
பிரட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை இனங் காணும் விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் அவர்களுக்கான சலுகைகளும் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்களை இனங் கண்டு, அவர்களை நாடு கடத்தவுள்ளதாகவும் பிரிட்டன் பிரதமர் எச்சரித்துள்ளார்.
வலி மேற்கு தவிசாளரின் பஜனைப் பாடசாலைத் திட்டம்-
யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது பஜனைப் பாடசாலைத் திட்டம் கடந்த 25.07.2014 வெள்ளிக்கிழமை அன்று சங்கரத்தை துணைவிப்பகுதி பகுதியில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் தவிசாளரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு தவிசாளரிடமிருந்து இந்து சமயம் சார்ந்த நூல்களை பெற்றுக் கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியான பஸ்கள்-
இலங்கை போக்குவரத்து சபையானது மாற்றுத் திறனாளிகளுக்காக சொகுசு மற்றும் அரை சொகுசு பஸ் சேவையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்தச் சேவைகள் கொழும்பிலும், கொழும்பை அண்டிய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சேவையானது கொழும்பிலிருந்து மொரட்டுவை, கெஸ்பாவ, ஹோமாகம, மஹரகம, மாலபே, கடுவலை, களனி, ஜா- எல மற்றும் கிரிபத்கொட ஆகிய இடங்களுக்கு நடத்தப்படும். இதேவேளை இலங்கைக்கு 2500 புதிய பயணிகள் பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. அதேநேரம் 10- 15 வருடகால சேவையிலுள்ள பஸ்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
மாறுதடம் திரைப்படத்திற்கு யாழில் தடை (பிபிசி)
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற மாறுதடம் என்கிற திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்டபோது, அதனை இலங்கை காவல்துறையினரும், இராணுவத்தினரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். கடந்த வெள்ளிக்கிழமை யாழ் திரையரங்கு ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.
சுவிட்சர்லாந்திலும், இலங்கையிலும் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் ரமணா என்றழைக்கப்படுகின்ற சத்தியநாதன் ரமணதாஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
வீடியோ திரைப்படமான இந்த திரைப்படத்தைத் திரையரங்கு ஒன்றில் திரையிடுவதானால், அதற்கான முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அந்த அனுமதி பெறாமல் யாழ்ப்பாணத்தில் திரையரங்கு ஒன்றில் புரொஜக்டர் ஒன்றைப் பயன்படுத்தி திரையிட்டபோதே, காவல் துறையினரும், இராணுவத்தினரும் வந்து இந்த திரைப்படத்தைத் தடை செய்ததாக ரமணதாஸ் குறிப்பிட்டார்.
இரண்டரை மணி நேர இந்தப் படத்தை காவல்துறையின் சில பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முழுமையாகப் பார்த்து அதில் திருப்தியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயினும் திரைப்படக் கூட்டுத்தாபனம் வீடியோ படம் ஒன்றைத் திரையரங்கில் திரையிடுவது தொடர்பிலான நடைமுறைகள் குறித்தோ அல்லது அவ்வாறு திரையிடப்படக்கூடாது என்றோ தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் காவல் துறையினரே இந்தப் படத்தை திரையரங்கில் திரையிடக் கூடாது என்று தடை செய்ததாகவும் அவர் கூறினார்.
மாறுதடம் படம் திரையரங்கில் திரையிடப்படாமல் தடுக்கப்பட்டமைக்கு திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் நடைமுறை பின்பற்றப்படாததே காரணம் என்றும், அந்தப் படத்தில் அரசுக்கு விரோதமான எந்த விடயமும் இருக்கவில்லை என்றும் பிபிசிக்கு இதுபற்றி கருத்து வெளியிட்ட காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண கூறினார்.
இலங்கையின் நடைமுறைக்குமைவாக சட்டத்திட்டங்களுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுத்து இந்த திரைப்படத்தைத் திரையிட முயற்சிக்கப் போவதாக மாறுதடம் படத்தின் தயாரிப்பாளர் சத்தியநாதன் ரமணதாஸ் கூறினார்